Published : 24 Jan 2022 01:53 PM
Last Updated : 24 Jan 2022 01:53 PM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் மோசமான தோல்வி குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் விளக்கமளித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3-க்கு பூஜ்ஜியம் என ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி. இந்திய அணி தனது வரலாற்றில் சந்தித்த மிக மோசமான தோல்விகளில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது. இந்தத் தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட், "உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால், நம்மிடம் சமநிலையான பிளேயிங் லெவன் இல்லை. வழக்கமாக 6, 7 மற்றும் 8-ம் இடத்தில் விளையாடும் ஆல்-ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற வீரர்கள் காயத்தில் உள்ளனர். அவர்கள் மீண்டும் வரும்போது அணி இன்னும் சற்று வித்தியாசமானதாக இருக்கும். அணி சமநிலை பெறும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கே.எல்.ராகுல் கேப்டன்சி குறித்து பேசிய திராவிட், "கேப்டன்சியை பொறுத்தவரை, கே.எல்.ராகுல் சிறப்பாகவே செயல்பட்டார். ராகுலுக்கு கேப்டனாக முதல் தொடர் இதுதான். எந்த மாதிரியான கேப்டனுக்கும் முதல் தொடர் என்பது சவால் அளிக்கக் கூடியதே. ஆனால், ராகுல் சிறப்பாகவே செயல்பட்டார் என நான் நினைக்கிறேன். கேப்டன் பதவி என்பது வீரர்களின் திறனை வெளிக்கொண்டு வருவதே ஆகும். தவறுகளை சரிசெய்து கொண்டு, வரும் காலங்களில் சிறந்த கேப்டனாக ராகுல் செயல்படுவார் என நம்புவோம்.
தோல்வி எப்போதும் வேதனையை கொடுக்கும். சேஸிங் செய்த இரண்டு போட்டிகளிலும் 30 ஓவர் வரை வெற்றிப்பாதையிலேயே அணி இருந்தது. ஆனால், வீரர்களின் மோசமான ஷாட் தேர்வுகள் தோல்வியை நோக்கி அழைத்துச் சென்றது. முக்கியமான தருணங்களில் ஸ்மார்ட்டாக சிந்திக்கத் தவறிவிட்டனர்.
இந்தத் தோல்வி எங்களுக்கு ஒரு 'Eye Opener' ஆக இருக்கும். கடந்த சில மாதங்களில் அதிக ஒருநாள் தொடர்களை நாங்கள் விளையாடவில்லை. மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியதுதான் அணியின் கடைசி ஒருநாள் தொடர்.
ஆனால், 2023 உலகக் கோப்பைக்கு முன்னதாக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே அணியின் அடுத்தகட்ட அணுகுமுறை குறித்து யோசிக்க முடியும். உலகக் கோப்பைக்கு தயாராக காலக்கெடு வைக்க முடியாது. என்றாலும், நாட்கள் நெருங்க நெருங்க அணிக்கு தேவையானதை சரியாகச் செய்வோம் என்று நம்புகிறோம்" என்று விரிவாக விளக்கம் அளித்துள்ளார் திராவிட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...