Published : 22 Jan 2022 07:00 PM
Last Updated : 22 Jan 2022 07:00 PM

SA vs IND: கோட்டைவிட்ட கேப்டன்; தீராத மிடில் ஆர்டர் - தோல்விக்கான காரணிகள் என்னென்ன?

தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரையும் இந்தியா இழந்திருக்கும் நிலையில் கேஎல் ராகுல் கேப்டன்ஷிப்பில் உள்ள குறைபாடுகள் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர் என தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு தோல்வி கொடுக்கும் துயரங்கள் தொடர்ந்துகொண்டே உள்ளது. போலண்ட் பார்க் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி விதித்த 288 ரன் என்ற டார்கெட்டை ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஜான்மன் மலான், குயின்டன் டி காக் அதிரடியின் உதவியுடன் 48.1 ஓவரிலேயே எட்டியது தென்னாப்பிரிக்கா. இதனால் தொடரை இழந்துள்ளது இந்தியா.

இந்தியாவின் தொடர் தோல்விக்கு முதல் காரணம் மிடில் ஆர்டர். கேஎல் ராகுல் - ரிஷப் இருவரும் அவுட் ஆனபோது அணியின் ஸ்கோர் 183. களத்தில் இருந்தது ஸ்ரேயாஷ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும். இவர்களும் செட்டில் ஆகி விளையாடும் அளவுக்கு 17 ஓவர்கள் மீதம் இருந்தது. இருவரும் விக்கெட்டுகளை இழக்காமல் ஆடினாலே எளிதாக 300 ரன்களை தொட்டுவிடலாம் என்ற நிலையில் அப்படி எதுவுமே நடக்கவில்லை. ஸ்ரேயாஸ் ஐயர் 11 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 22 ரன்களிலும் பொறுப்பை கைவிட, முதல் போட்டியை போல் ஷர்துல் தாகூர் புண்ணியத்தில் 287 ரன்களை தொட்டது.

இதே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஸ்லோ பேட்டிங்கை கையாண்டது. இதற்கு இன்னொரு காரணம், பும்ரா மலான் விக்கெட்டை முதலில் வீழ்த்தியிருப்பார். இதனால் மெதுவாகவே ஆடியது. ஆனால் நேற்று இதற்கு நேர்மாறாக ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஜான்மன் மலான், குயின்டன் டி காக் இருவரும் ஆரம்பத்திலேயே அட்டாக் செய்து இந்திய பவுலர்களின் மனநிலையை சீர்குலைந்தனர். குறிப்பாக, டி காக் பும்ராவை முதல் ஓவரிலேயே பவுண்டரியோடு வரவேற்றார். தொடர்ந்து புவனேஷ்வரின் இரண்டாவது ஓவரில் 16 ரன்கள் வாரி வழங்கப்பட்டது.

ஓப்பனிங் கூட்டணியை பிரிக்கவே இந்திய பவுலர்கள் சிரமப்பட வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு மலான், டி காக் இருவரும் அவர்களுக்கு தண்ணி காட்டினர். 21.6 வது ஓவரில் தான் டி காக் அவுட் ஆனார். ஷர்துல் தாகூரே இந்தக் கூட்டணியை பிரித்தார். தொடர்ந்து பும்ரா மட்டுமே, தென்னாப்பிரிக்க வீரர்களை கட்டுக்குள் வைத்திருந்தார். மற்றவர்கள் பவுலிங் சுத்தமாக எடுபடவில்லை. பும்ரா மற்றும் சஹால் எக்கானமி மட்டுமே 6-க்கு கீழ் இருக்க, அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர் ஆகியோர் ரன்களை வாரி வழங்கினர். புவனேஷ்வர் எக்கானமி எல்லாம் 8-ஐ தாண்டியது.

இதையெல்லாம் தாண்டி கேஎல் ராகுலின் கேப்டன்சி சொதப்பல்கள் தான் இங்கே விவாதிக்க வேண்டிய ஒரு விஷயம். குறிப்பாக, வெங்கடேஷ் ஐயரை ராகுல் கையாண்ட விதம். முதல் போட்டியில் அவரை பந்துவீச வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டால், இந்த போட்டியில் அவருக்கு பவுலிங் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், இன்னிங்ஸின் 20வது ஓவருக்குப் பிறகே கிடைத்தது. இங்கே ஓர் உதாரணம், தென்னாப்பிரிக்க அணியில் 6வது பவுலராக இருப்பவர் மார்க்கரம். இந்திய அணி முதலில் பேட் செய்தபோது, தவான் - ராகுல் வலுவான கூட்டணி அமைத்திருந்தனர். அவர்களை வீழ்த்த இங்கிடி போன்ற முன்னணி பவுலர்களால் முடியாத போது பவுமா மார்க்கரமை வைத்து தவானை 11வது ஓவர் முடிந்தபோது காலி செய்தார்.

இங்கே வெங்கடேஷ் ஐயரும் 6-வது பந்துவீச்சாளர் தான். இந்திய அணி ஆடியதை விட தென்னாபிரிக்காவின் ஓப்பனிங் காட்டிய அக்ரஸ்ஸிவ் ஆட்டம் பும்ரா, புவனேஷ்வரை நிலைகுலைய வைத்திருந்தது. ஆனால், கேஎல் ராகுல் 6வது பவுலிங் ஆப்ஷனை 20வது ஓவருக்குப் பிறகே எடுத்தார். பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாத தருணங்களில் கோலியின் அணுகுமுறையை பார்த்தவர்களுக்கு நேற்று ராகுல் செய்தது கடுப்பை ஏற்படுத்தியிருக்கும்.

அதேபோல் பவுலிங் ரொட்டேஷன் என்பதையும் சரியாக ராகுல் செய்யவில்லை. பவுமா ஸ்பின், ஸீமர்களை தனித்தனியாக பயன்படுத்தாமல் ரொட்டேஷன் செய்து பயன்படுத்தினார். ராகுலிடம் அப்படி ஒரு நினைப்பே இல்லை. மாறாக, பவுலர்கள் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் திணறியபோது எந்தவித ரியாக்ஷனும் இல்லாமல், மௌனத்தில் உறைந்து போயிருந்தார் ராகுல். களத்தில் அவர் காட்டிய அமைதிக்கு விடை தான் பவுமாவின் வெற்றி. இதெல்லாம், பீல்டிங்கில் ராகுல் செய்த சொதப்பல்கள். பேட்டிங் ஆர்டரில் அவர் செய்த கேப்டன்ஷிப் அவருக்கே வெளிச்சம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x