Published : 22 Jan 2022 03:50 PM
Last Updated : 22 Jan 2022 03:50 PM

லக்னோவுக்கு ராகுல், அகமதாபாத்துக்கு பாண்டியா: இதுவரை கொடுக்காத ஒரு தொகை - ஐபிஎல் புதிய அணிகள் அப்டேட்ஸ்

ஐபிஎல் 2022 சீசனில் பங்கேற்கும் லக்னோ, அகமதாபாத் அணிகள் தலா மூன்று வீரர்களை இன்று ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதேநேரம் புதிதாக அகமதாபாத், லக்னோ என இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்துக்கு முன்பாக இரு அணிகளும் தலா மூன்று வீரர்களை முறைப்படி இன்று ஒப்பந்தம் செய்துள்ளன.

லக்னோ அணி: லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் ரூ.17 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரூ.17 கோடி என்பது ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த வீரருக்கும் கொடுக்காத ஒரு தொகை. கடந்த சீசனில் பஞ்சாப் அணியை வழிநடத்திய கே.எல்.ராகுல், இதன்மூலம் அதிக சம்பளம் வாங்கும் ஐபிஎல் வீரர் ஆகியுள்ளார். இவருடன் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ரூ.9.2 கோடிக்கும், இந்தியாவின் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் ரூ .4 கோடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மூவரையும் தேர்வு செய்ததற்கான காரணத்தை விளக்கியுள்ள லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, "பல விஷயங்கள் இருந்தன. புனேவைப் போல் நாங்கள் ஒன்று அல்லது இரண்டு சீசன்களுக்கான அணியாக இல்லாமல், பல ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக நடைபோடும் ஓர் அணிக்கான அடித்தளத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம். அதன்படி, நாங்கள் தேர்வு செய்துள்ள இந்த மூவரும் பல பரிமாணங்களை கொண்டுள்ளார்கள். ராகுல், சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த விக்கெட் கீப்பராகவும் செயல்பட கூடியவர். மார்கஸ் ஒரு சிறந்த ஃபினிஷர், ஒரு நல்ல பந்து வீச்சாளர் மற்றும் ஓர் அற்புதமான பீல்டரும் கூட. ரவி பிஷ்னோய் சிறந்த லெக் ஸ்பின்னர் மட்டுமல்லாமல் நல்ல பீல்டரும் ஆவார்" என்று கூறியுள்ளார்.

அகமதாபாத் அணி: மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்டியாவை தக்கவைக்கவில்லை என அறிவித்தபோதே அவர் அகமதாபாத் அணிக்கு செல்லப் போகிறார் என்ற தகவல் வெளியானது. இது இப்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா அதிகாரபூர்வமாக ரூ.15 கோடிக்கு அகமதாபாத் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு ஓப்பனிங் செய்த சுப்மன் கில் ரூ.8 கோடிக்கும், ஸ்பின்னர் ரஷீத் கான் ரூ.15 கோடிக்கும் அகமதாபாத் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மேட்சிங் மேட்ச்: லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் ஒப்பந்தம் செய்துள்ள வீரர்களில் ஓர் ஒற்றுமை உள்ளது. இரண்டு அணிகளுமே தலா ஒரு பேட்ஸ்மேன் (கே.எல்.ராகுல், சுப்மன் கில்), வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் (ஸ்டாய்னிஸ், ஹர்திக் பாண்டியா) மற்றும் ஒரு ஸ்பின்னர் (ரவி பிஷ்னோய், ரஷீத் கான்) என எடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x