Published : 20 Jan 2022 04:38 PM
Last Updated : 20 Jan 2022 04:38 PM
துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2021-ம் ஆண்டுக்கான டெஸ்ட் அணியில் இந்திய அணி வீரர்கள் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். ஐசிசி ஒருநாள் அணி, டி20 அணியில் ஒரு இந்திய வீரர்கூட இல்லாத நிலையில் டெஸ்ட் அணியிலாவது 3 வீரர்கள் இடம் பெற்றுள்ளது ஆறுதல் அளிக்கிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய 3 வீரர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். ஆனால், வேகப்பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்ட முகமது ஷமி, பும்ரா இடம் பெறாதது வேதனைக்குரியது.
பேட்ஸ்மேன்களில் கடந்த ஆண்டில் ரஹானே, புஜாரா, விராட் கோலி, ராகுல் என ஒருவர் கூட சிறப்பாகச் செயல்படவில்லை. எந்தத் தொடரிலிருந்தும் நிலைத்தன்மையுடன் ஆடவில்லை என்பதற்குச் சான்றுதான் ஐசிசி அணியில் நிராகரிக்கப்பட்டது. இதே ஐசிசி அணியில் தொடர்ந்து 3 ஆண்டுகள் விராட் கோலி இடம் பெற்றிருந்தார், கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், முதல் முறையாக இந்த ஆண்டு கோலி இடம் பெறவில்லை.
2015-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டுவரை ஐசிசி அணியில் இடம் பெற்றிருந்த அஸ்வின் 2018, 2019-ம் ஆண்டில் இடம்பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டு இடம் பெற்றுவிட்டார்.
ஐசிசி சார்பில் அறிவிக்கப்படும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாகத் தொடர்ந்து 3 ஆண்டுகள் நியமிக்கப்பட்ட கோலி ஒரே ஆண்டு கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டும், அணியிலிருந்தும் தூக்கப்பட்டிருப்பது அவரின் பேட்டிங் திறமையையும், கேப்டன்ஷிப்பையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
ரோஹித் சர்மா கடந்த ஆண்டு 906 ரன்கள் சேர்த்து 47.68 சராசரி வைத்துள்ளார். சென்னை, மற்றும் ஓவல் மைதானத்தில் இரு சதங்களையும் சர்மா பதிவு செய்ததையடுத்து இடம் பெற்றுள்ளார்.
ரிஷப் பந்த் 2018-ம் ஆண்டுக்குப் பின் மீண்டும் ஐசிசி அணியில் இடம் பெற்றுள்ளார். 12 போட்டிகளில் 748 ரன்கள் சேர்த்த ரிஷப் பந்த் 39.36 சராசரி வைத்துள்ளார். அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த அருமையான சதம், 23 இன்னிங்ஸில் 39 டிஸ்மிசல்கள் போன்றவை அவரை மீண்டும் இடம் பெறச்செய்தன.
ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் 2021-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 போட்டிகளில் 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிலும் நியூஸிலாந்து, இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை அஸ்வின் ஏற்படுத்தினார். பேட்டிங்கிலும் சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் உள்ளிட்ட 335 ரன்களைச் சேர்த்துள்ளார்.
இவர்கள் தவிர இலங்கை வீரர் திமுத் கருணாரத்னே, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்னஸ் லாவுஷேன், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பாகிஸ்தான் வீரர் பவாத் ஆலம், நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கைல் ஜேமிஸன் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷகீன் அப்ரிடி, ஹசன் அலி ஆகியோர் இடம் பெற்றனர்.
ஐசிசி டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி 2021 டெஸ்ட் அணி
திமுத் கருணாரத்னே (இலங்கை), ரோஹித் சர்மா (இந்தியா), கானே வில்லியம்ஸன் (நியூஸி), மார்னஸ் லாபுஷேன் (ஆஸி.), ஜோ ரூட் (இங்கிலாந்து), பவாத் ஆலம் (பாகிஸ்தான்), ரிஷப் பந்த் (இந்தியா), அஸ்வின் (இந்தியா), கைல் ஜேமிஸன் (நியூஸி) ஷாகின் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்), ஹசன் அலி (பாகிஸ்தான்).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT