Last Updated : 17 Jan, 2022 02:18 PM

 

Published : 17 Jan 2022 02:18 PM
Last Updated : 17 Jan 2022 02:18 PM

அணியைக் கட்டமைத்ததே நீங்கதான்; கேப்டன் பதவியில் தொடருங்கள்: கோலிக்கு மதன்லால் ஆதரவு

விராட் கோலி | படம் உதவி ட்விட்டர்

புதுடெல்லி: இந்திய அணியை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டமைத்ததே விராட் கோலிதான், அவர் கேப்டன் பதவியில் தொடர வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மதன் லால் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமாகப் பார்க்கப்பட்டது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வென்று 1-0 என்று முன்னிலையில் இருந்த நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டு தோல்வி அடைந்தது.

இதனால் தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்றோம் என்ற புதிய வரலாறு படைக்க முடியாமல் இந்திய அணி ஏமாற்றம் அடைந்தது. இதையடுத்து, விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில் தான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவது குறித்த அறிவிப்பை திடீரென வெளியிட்டார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோலியின் கேப்டன் பதவி விலகல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மதன் லால் வருத்தம் தெரிவித்து பேட்டியளித்துள்ளார். அவர்கூறியதாவது:

கோலியின் முடிவு தனிப்பட்டது. ஆனால் என்ன முடிவுகளை அவர் எடுத்தாலும் அவரின் சாதனைகள் அவரிடமே இருக்கும். ஏனென்றால், அவர்தான் உலகிலேயே 4-வது வெற்றிகரமான கேப்டன். விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகமாட்டார் என நினைத்தநிலையில் அவர் விலகியது எனக்கு வியப்பாக இருந்தது.

விராட் கோலி கேப்டனாகத் தொடர வேண்டும், உயிர்ப்புள்ள, உணர்ச்சிகரமான கேப்டன் எப்போதும் வெற்றியை மட்டுமே விரும்பும் கேப்டன். டிவி பார்க்கும்போது கோலி விளையாடுவதைப் பார்த்தால் கேப்டன்ஷிப்பை அனுபவித்து செய்வது தெரியும். ஆனால், இப்போது கோலி எடுத்த முடிவு பெரிய வெடிகுண்டு போன்றது.

இந்திய அணியை கடந்த 7 ஆண்டுகளாகக் கட்டமைத்தவர் என்ற ரீதியில் கோலி கேப்டனாகத் தொடர வேண்டும் எனக் கேட்கிறேன். அவரின் தலைமையில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக வந்தோம், வேகப்பந்துவீச்சை வலுப்படுத்தியவர் கோலிதான்.

இந்திய வேகப்பந்துவீச்சு உலகளவில்பேசப்பட்டது கோலியின் தலைமையில்தான். அதுவும் அவரின் சாதனைதான். டெஸ்ட் போட்டியில் பெறும் வெற்றிகள் ஒருநாள்,டி20 போட்டிகளிலும் எதிரொலிக்கும். கோலி அணிக்காக அனைத்தையும் செய்திருக்கிறார்.ஒரு கேப்டனாக கோலிக்கு அணியின் பலவீனத்தைக் கண்டறிந்து வலுப்படுத்தியுள்ளார்.

இன்னும் 3 ஆண்டுகளுக்கு கோலி கேப்டன் பதவியில் நீடிக்க வேண்டும். அவரின் திறமையை நாம் பார்த்துவிட்டோம். கோலி சதம் அடித்து நீண்டகாலமாகிவிட்டதை மட்டும் பார்க்கக்கூடாது, அவர் தொடர்ந்து பங்களிப்பு செய்துவருகிறாரே. அவர்கள் பங்களிப்பு செய்யாமல் இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் கோலியை மட்டும் சதம்அடிக்க வேண்டும் எனஎதிர்பார்க்கக்கூடாது. கோலியின் செயல்பாடு வெற்றிக்கு துணையாக இருக்கிறது.

கோலி ஒருநாள் மட்டும் டெஸ்ட் கேப்டன்ஷியில் மட்டும் தொடர விரும்பினார். ஆனால்,ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியபின், டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அவருக்குவிருப்பம் இல்லை என நினைக்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் கோலியின் பேட்டிங் செயல்பாட்டை பாதிக்காது என நம்புகிறேன், கோலி தலைசிறந்த பேட்ஸ்மேன்.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நீங்கள் சிறப்பாகச் செயல்பட தொடர்ந்து விளையாட வேண்டும். கோலிக்கு தன்னுடைய பொறுப்புகள் என்ன என அறிவார். அடுத்த ேகப்டனாக வரும் ராகுல் அல்லது ரோஹித்சர்மா யாரேனும் இருக்கலாம். ரிஷப்பந்த் வருவதை நான் விரும்பவில்லை. இன்னும் அவர் அனுபவங்களைப் பெற வேண்டும்.

இவ்வாறு மதன்லால் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x