Published : 15 Jan 2022 11:27 AM
Last Updated : 15 Jan 2022 11:27 AM
கேப் டவுன்: டிஆர்எஸ் சர்ச்சை பற்றி அனைவருக்கும் தெரியும் என்பதால், அதுபற்றிப் பேச நான் விரும்பவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது அந்த அணி வெற்றி பெற 212 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்திருந்தது.
ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் அஸ்வின் வீசிய ஓவரை கேப்டன் டீன் எல்கர் எதிர்கொண்டார். அப்போது டீன் எல்கர் கால்காப்பில் வாங்கிய பந்துக்கு அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்தனர்.
இதற்கு கள நடுவர் எராஸ்மஸ் அவுட் வழங்கினார். ஆனால், கேப்டன் எல்கர் டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்தார். இதை டிவி ஸ்க்ரீனில் பார்த்த நடுவர்கள் பந்து ஸ்டெம்ப்புக்கு மேலே சென்றது என்று கூறி அவுட் வழங்கியதை ரத்து செய்தனர்.
எல்கர் கால்காப்பில் வாங்கியது தெளிவாகத் தெரிந்தது, அவுட் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், டிஆர்எஸ் முறையில் ரத்தானது இந்திய வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கள நடுவர் எராஸ்மஸ் “impossible” எனச் சொல்லிச் சிரித்தார்.
இதையடுத்து, வீரர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஸ்டெம்ப்பில் உள்ள மைக்ரோபோனில் கேட்கும்போது, வீரர்கள் தங்கள் அதிருப்தியையும் இதில் பதிவு செய்தனர்.
இதில் உச்சகட்டமாக கே.எல்.ராகுல், “11 வீரர்களுக்கு எதிராக ஒரு நாடே விளையாடுகிறது” என்று கோபத்தில் தெரிவித்தார். அஸ்வின் கூறுகையில், “சூப்பர் ஸ்போர்ட் நிறுவனம் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு வேறு ஏதாவது சிறந்த வழி இருக்கிறதா எனப் பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.
கேப்டன் கோலி ஸ்டெம்ப் மைக்ரோன் அருகே சென்று, “உங்கள் அணியில் கவனம் செலுத்துங்கள், எதிரணியின் மீது அல்ல. எல்லா நேரமும் எங்களைப் பின்தொடர முயல்கிறீர்கள்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்து டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்தது. இந்தத் தோல்விக்குப் பின் கேப்டன் கோலி நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் டிஆர்எஸ் சர்ச்சை பற்றிக் கேட்டனர்.
அதற்கு அவர் கூறியதாவது:
''உண்மையாகவே என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியும். அந்த நேரத்தில் நான் செய்த செயல்களை நியாயப்படுத்திப் பேச விரும்பவில்லை, அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியிருக்கலாம். அதுபற்றிப் பேச இது நேரமல்ல.
களத்தில் என்ன நடந்தது என்பதை எங்களால் மட்டும்தான் புரிந்துகொள்ள முடியும், வெளியில் இருப்பவர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஆதலால், களத்தில் என்ன நடந்தது என்பதை நான் நியாயப்படுத்த முடியாது. அதைக் கடந்து செல்ல விரும்புகிறேன். ஒருவேளை நாங்கள் 3 விக்கெட் வரை எடுத்திருந்தால் நிச்சயமாக அனைத்து சூழல்களும் மாறியிருக்கும்.
இந்த டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு நெருக்கடி கொடுத்து ஆடுவதில் இந்திய அணி தவறிவிட்டது என்பதுதான் நிதர்சனம். அதனால்தான் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்''.
இவ்வாறு கோலி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT