Published : 05 Apr 2016 05:42 PM
Last Updated : 05 Apr 2016 05:42 PM
நாடு முழுதும் கிரிக்கெட்டை சமச்சீராக வளர்த்தெடுப்பதில் பிசிசிஐக்கு எந்த வித அக்கறையும் இல்லை என்று சாடிய உச்ச நீதிமன்றம், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கான ‘பரஸ்பர நல உதவி அமைப்பு’ போல் செயல்படுவதாக பிசிசிஐ மீது குற்றம்சாட்டியுள்ளது.
அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பெரிய தொகைகளை விநியோகம் செய்வது, அது எப்படி செலவிடப்பட்டது என்பது பற்றிய எந்த வித கேள்வியும் கேட்கப்படுவதில்லை, இதுதான் பரஸ்பர உதவி அமைப்பாக விளங்கும் பிசிசிஐ-யின் செயல்பாடு என்று டி.எஸ்.தாக்கூர், கலிபுல்லா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு கடுமையாக சாடியுள்ளது. எதற்காக இப்படி செயல்படுகிறது எனில் வாக்குகளைச் சேகரிப்பதற்காகச் செய்கிறது, அதாவது வாக்கு விதிப்பு முறையையே தாக்கம் செலுத்துவதற்காக ‘கேள்வி கேட்பதில்லை’ என்ற உத்தியை பிசிசிஐ கடைபிடிக்கிறது என்று மேலும் சாடியது.
“அதாவது, உன் முகத்தைக் காட்டு, நான் பணம் அளிக்கிறேன், என்பதாக உங்கள் செயல்பாடு உள்ளது, அளிக்கப்பட்ட தொகை எப்படி செலவிடப்பட்டது என்பதை கோராமல் செயல்பூர்வமாக நபர்களை ஊழல்வாதியாக்குகிறீர்கள் என்ற பிம்பமே உங்கள் செயல்பாடுகள் மீது உருவாகியுள்ளது. அதாவது உங்களுக்குச் சாதகமாக வாக்குகள் தேவைப்படும் போது அந்த உறுப்பினர்கள் கையை உயர்த்த வேண்டும் என்பது போல் இருக்கிறது.” என்று நீதிபதிகள் கடுமையாக சாடினர்.
மேலும், குஜராத், கோவா, திரிபுரா உட்பட சில கிரிக்கெட் வாரியங்களுக்கு அளிக்கப்படும் தொகை பிஹார், சத்தீஸ்கர் உள்ளிட்ட பிற 11 மாநில வாரியங்களுக்கு அளிக்கப்படும் தொகையை விட பலமடங்கு அதிகமாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அமர்வு, “11 வாரியங்கள் பிச்சைப்பாத்திரத்துடன் உதவிக்காக அலைகின்றனர், இந்த 11 வாரியங்களிடம் பணம் இல்லை. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ரூ.572 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இது ரூ.1000 கோடிக்கும் அதிகமாகக் கூட ஆகிவிடும். உங்கள் பண விநியோகம் சரியாக இருக்காதா?” என்று கேள்வி எழுப்பியது.
ஏன் குஜராத் வாரியத்திற்கு ரூ.60 கோடி அளிக்கப்பட்டது, பிஹாருக்கு ஏன் அளிக்கப்படவில்லை என்று பிசிசிஐ-க்காக வாதாடும் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம் நீதிபதிகள் வினவினர்.
ஆனால் இதற்கு பிசிசிஐ தரப்பில் பதில் அளிக்கப்பட்ட போது, பிஹார் ஒரு அசோசியேட் உறுப்பினர், ஆனால் அந்த வாரியம் கணக்குகளை சமர்ப்பிக்க மறுத்துவிட்டது. ஒவ்வொரு வாரியத்தின் கிரிக்கெட் நடவடிக்கைகளைப் பொறுத்து நிதி அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டது.
இதற்கு நீதிபதி டி.எஸ்.தாக்கூர் பதில் கேள்வி எழுப்பிய போது, 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோவாவுக்கு ரூ.57 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளது, ஆனால் பிஹாருக்கு அளிக்கவில்லை.. ஏன்? என்றார்.
“11 மாநில கிரிக்கெட் வாரியங்கள் பெற்ற தொகையைப் பார்த்தால் பூஜ்ஜியமாக இருக்கிறது. கோவாவுக்கு ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் சத்தீஸ்கர் மாநில வாரியத்திற்கு ரூ.1.47 கோடியே அளிக்கப்பட்டுள்ளது. உங்களது செயல்பாடு என்ன? நாடு முழுதும் கிரிக்கெட் ஆட்டத்தை வளர்த்தெடுப்பதுதானே.. நாடு முழுதும்தானே கிரிக்கெட் ஆட்டத்திற்கு வரவேற்பு உள்ளது... ” என்றார்.
பிறகு, முழு உறுப்பினரான ரயில்வே ஸ்போர்ட்ஸ் மேம்பாட்டு வாரியத்திற்கு ஏன் எந்தத் தொகையும் அளிக்கப்படவில்லை என்று நீதிபதி கேட்டார்.
இதற்கு பிசிசிஐ அவர்களிடத்தில் சர்வதேச ஸ்டேடியம் இல்லை என்றது. உடனே நீதிபதி தாக்கூர், 25 லட்சம் மக்கள் தொகை கொண்ட திரிபுராவுக்குக்கூட அங்கு சர்வதேச தர ஸ்டேடியம் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பாகவே ரூ.60 கோடி அளிக்கப்பட்டுள்ளதே.. என்றார்.
பிறகு நீதிபதி லோதா கமிட்டியின் கண்டுபிடிப்புகள் தீவிர ஆராய்ச்சிகளுக்குப் பிறகு வந்ததே. ஏதோ அரசு அதிகாரிகள் கொண்ட குழு போல் நீங்கள் இதன் மீது உங்கள் ஐயங்களை எழுப்ப முடியாது. பல ஆண்டுகளூடாக பரவலான பெயர்களைச் சந்தித்து லோதா கமிட்டி தனது பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளது என்று நீதிபதி தாக்கூர் திட்டவட்டமாகக் கூறினார்.
இதற்கு பஞ்சாப் கிரிக்கெட் சங்க வழக்கறிஞர் அசோக் தேசாய் உடனே, நீதிபதி லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல் செய்தால் அது எவ்வாறு அடிப்படை விதிமுறைகளையே மாற்றிவிடுகிறது என்று ஐயம் எழுப்பினார், இதற்கு பதில் அளித்த நீதிபதி டி.எஸ்.தாக்கூர், “நீதிபதி லோதா கமிட்டி எந்த விதிமுறைகளையும் மாற்றவில்லை, ஒரு ஓவருக்கு 7 பந்துகள் வீசப்பட வேண்டும் என்று அது கூறவில்லை. கிரிக்கெட் நிர்வாகத்தை மேலாண்மை செய்யும் நபர்களில் மாற்றம் தேவை என்றே கூறுகிறது” என்று கூறினார்.
வழக்கு விசாரணை மீண்டும் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT