Published : 13 Jan 2022 01:23 PM
Last Updated : 13 Jan 2022 01:23 PM
புதுடெல்லி: உலக சாம்பியனில் வெள்ளிப்பதக்கம் வென்ற கிடம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல வீரர், வீராங்கனைகள் கரோனாவில் பாதிக்கப்பட்டதையடுத்து, டெல்லியில் நடந்து வரும் இந்தியா ஓபன் பாட்மிண்டன் தொடரிலிருந்து பலர் விலகியுள்ளனர்.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளரங்கு மைதானத்தில் இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆடவர், மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றுக்கு வி.வி.சிந்து, கிடம்பி ஸ்ரீகாந்த், லக்கயா சென், சாய்னா நேவால் ஆகியோர்2-வது சுற்றுக்குச் சென்றுள்ளனர்.
டெல்லியில் கரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளதால், நாள்தோறும் வீரர், வீரராங்கனைக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. ஹோட்டலில் இருந்து புறப்படும்போதும், மைதானத்திலும் பரிசோதனை நடத்தப்படுகிறது. அந்த வகையில் சாய் பிரணித், இரட்டையர் பிரிவில் மனு அத்ரி, துருவ் ராவத் ஆகியோருக்கு கரோனா தொற்று இருந்ததால் அவர்கள் டெல்லிக்கே வரவில்லை.
இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் பாட்மிண்டன் வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த், அஸ்வினி பொன்னப்பா, ரித்திகா ராகுல், ட்ரீஸா ஜோலி, மிதுன் மஞ்சுநாத், சிம்ரன் அமன் சிங், குஷி குப்தா ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இந்திய பாட்மிண்டன் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து, இந்த 7 வீரர், வீராங்கனையிலும் போட்டித் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினர். இந்த 7 வீரர்களோடு இரட்டையர் பிரிவில் விளையாடுவதற்காக நெருக்கமாக இருந்த சிக்கி ரெட்டி, துருவ் கபிலா, காயத்ரி கோபிசந்த், அக்சான் ஷெட்டி, காவ்யா குப்தா ஆகியோரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள இருப்பதால், தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
இதில் சிக்கி ரெட்டி, அஸ்வினியுடன் இரட்டையரில் விளையாடுகிறார், துருவ் கலப்பு இரட்டையரில் சிக்கியுடனும், அஸ்கன் கலப்பு இரட்டையரில் சிம்ரனுடனும், காவ்யா குஷியுடனும் விளையாடுகின்றனர்
கரோனா வைரஸ் பரவலைக் காரணம் காட்டி இங்கிலாந்தைச் சேர்ந்த அனைத்து வீரர், வீராங்கனையும் போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ளனர். பார்வையாளர்கள் இன்று, இந்திரா காந்தி அரங்கில், கே.டி.ஜாதவ் உள்ளரங்கில் இந்தப் போட்டி நடந்தபோதிலும் வீரர், வீராங்கனைகளுக்கு கரோனா பரவியுள்ளது.
உலக சாம்பியன் லோ கீன் யூ, ஆடவர் இரட்டையர் உலக சாம்பியன் முகமது ஆசான், தாய்லாந்து வீரர் பூஷானன் ஆகியோர் இந்தத் தொடரில் விளையாடுகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT