Published : 09 Jan 2022 05:03 PM
Last Updated : 09 Jan 2022 05:03 PM
சிட்னி: ஆன்டர்ஸன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் தடுப்பாட்டத்தால் சிட்னியில் நடந்த ஆஷஸ் கோப்பைக்கான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி டிரா செய்தது.
388 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி கடைசி நாளில் விளையாடிய நிலையில் 9 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டத்தை டிரா செய்தது. கடைசி ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியாத நிலையில் ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
இங்கிலாந்து அணியின் டெய்லென்டர்கள் ஆன்டர்ஸன் ரன் ஏதும் எடுக்காமலும், பிராட் 8 ரன் எடுத்துக் களத்தில் இருந்து ஆட்டத்தை டிரா செய்தனர். ஆஸ்திரேலியாவல் நடந்த கடைசி 14 போட்டிகளில் 2-வது முறையாக ஆட்டத்தை இங்கிலாந்து அணி டிரா செய்துள்ளது.
கடந்த 3 போட்டிகளை விட இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் பேட்டிங், பந்துவீச்சில் முன்னேற்றம் இருந்தது. 4-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கலாம் என்று பிரயத்தனம் செய்த ஆஸ்திரேலியாவின் முயற்சி வீணானது, 3-0 என்ற கணக்கில் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய அணியில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த உஸ்மான் கவாஜா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இங்கிலாந்து அணியின் கடைநிலை வீரர்களான ஜேக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஆன்டர்ஸன் ஆகிய 3 பேரும் கடைசி 10 ஓவர்கள் பேட் செய்து ஆஸ்திரேலிய அணியின் பொறுமையை சோதித்தனர். கடைசி நாளின் கடைசி ஷெசனில் போலந்து, கம்மின்ஸ் விரைவாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்ட நிலையில், ஆன்டர்ஸன், பிராட் இருவரையும் வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலிய அணி திணறியது.
4-வது நாளான நேற்று இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் சேர்த்திருந்தது. கிராளி 22 ரன்களுடனும், ஹசீப் ஹமீது 8 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடங்கினர்.
ஹசீப் அகமது 9 ரன்னில் போலந்திடம் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த டேவிட் மலான் 4 ரன்னில் நாதன் லேயான் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார். அரை சதம் அடித்த கிராளி 77 ரன்னில் கேமரூன் க்ரீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு கேப்டன் ரூட், பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டது. இருவரும் நிதானமாக ரன்களைச் சேர்க்க ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இருவரையும் பிரிக்க பல பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றி கம்மின்ஸ் பயன்படுத்தியும் முடியவில்லை.
ரூட் 24 ரன்கள் சேர்த்திருந்தபோது போலந்து பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கெரேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பெரிய இன்னிங்ஸை நோக்கி நகர்ந்த பென் ஸ்டோக்ஸ் 60 ரன்னில் நாதன் லேயான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
கடைசி ஷெசனில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்து தோல்வியை நோக்கி இங்கிலாந்து பயணிக்கத் தொடங்கியது. பட்லர் 11, மார்க் வுட் 0, லீச் 26 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
9-வது விக்கெட்டுக்கு ஸ்டூவர்ட் பிராட், ஆன்டர்ஸன் ஜோடி ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதித்தனர். அதிலும் லீச், பிராட் ஜோடி ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்புக்குத் தடைக்கல்லாக இருந்தது. ஆனால், லீச்சை ஆட்டமிழக்கச் செய்தபின் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த ஆஸி. அணியால் கடைசி வரை முடியவில்லை. 9 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணி ஆட்டத்தை டிரா செய்தது.
ஆஸ்திரேலிய அணியில் போலந்து 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ், லேயான் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT