Published : 02 Apr 2016 02:57 PM
Last Updated : 02 Apr 2016 02:57 PM

ஷாகித் அப்ரிடிக்கு ஒன்றும் புரியவில்லை: அணி மேலாளர் இன்டிகாப் ஆலம் குற்றச்சாட்டு

உலகக்கோப்பை டி20 மற்றும் ஆசியக் கோப்பை டி20 தொடர்களில் பாகிஸ்தான் அணியின் தோல்விகளுக்கு கேப்டன் அப்ரிடியே காரணம் என்று அணி மேலாளர் இன்டிகாப் ஆலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

களத்திலும் களத்திற்கு வெளியேயும் அப்ரிடியின் உத்திகள், அணுகுமுறைகளே அணியின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று அந்த அறிக்கையில் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை டி20 தொடரில் நம் அணியில் பேட்டிங் பவுலிங் இரண்டிலுமே போதாமைகள் வெளிப்பட்டன, பீல்டிங்கில் ரன்களை கோட்டை விட்டு எதிரணியினரின் அழுத்தத்தை குறைத்து விடுகின்றனர். மொகமது ஆமிர் தவிர பந்து வீச்சில் ஒன்றுமில்லை. முடிவு ஓவர்களின் பந்து வீச்சும் சராசரிக்கும் கீழ்நிலையில் உள்ளது. பேட்டிங்கிலும் ‘பிஞ்ச் ஹிட்டர்கள்’ இல்லை பவர் ஹிட்டர்கள் இல்லை.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக தொடர் இந்தியாவில் நடைபெற்றது அணி வீரர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. நமது கேப்டன் கடைசி தொடரை ஆடுகிறார் என்பது ஒருபுறமிருக்க 20 ஆண்டுகள் அனுபவமிக்க அவரது கேப்டன்சியில் அவருக்கு எந்தவித புரிதலும் இல்லை என்பதாகவே அவரது கள உத்தியும், களத்திற்கு வெளியேயான் உத்திகளும் காணப்பட்டது.

மேலும் 2 தேவையற்ற சச்சரவுகளினால் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது, முதலில் ஷாகித் அப்ரிடி ‘இந்தியாவில் பாகிஸ்தானை விட பாகிஸ்தான் வீரர்கள் அதிகம் நேசிக்கப்படுகின்றனர்’ என்று பேசியது, 2-வதாக உமர் அக்மல் தன்னை 3-ம் நிலையில் களமிறக்க இம்ரான் கான் உதவியை நாடியது, ஆனால் 4-ம் நிலையிலேயே தனது திறமைக்கேற்ப ஆடவில்லை என்பதே எதார்த்தம்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நிகழ்வுகளும் நமக்கு எதிராக சதி செய்தன. வானிலையும் நமக்கு சாதகமாக இல்லை. மழை பெய்து பிட்சை ஸ்பின் ஆட்டக்களமாக மாற்றி விட்டது, இதற்கு முன்பாக பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்தது.

அணியின் உத்வேகத்தைக் கூட்ட இம்ரான் கானை அழைத்து ஷாகித் அப்ரிடி பேச வைத்தார். இம்ரானும் அணி வீரர்கள் விட்டுக் கொடுக்காமல் கடைசி வரை போராட வேண்டும் என்று உத்வேகம் அளித்தார், இதில் தவறில்லை, ஆனால் அவரது காலத்தில் அவருடன் ஆடிய மற்ற வீரர்கள் இந்த நவீன கிரிக்கெட் பற்றி அதிகம் தெரிந்து வைத்துள்ள அளவுக்கு இம்ரான் தன்னை புத்தாக்கம் செய்து கொள்ளவில்லை. இந்த பின்-நவீன கிரிக்கெட் ஆட்டத்தின் உத்திகள், தேவைகள் பற்றி இம்ரான் அறிந்திருக்கவில்லை என்பதால் வெறும் உத்வேகப் பேச்சு மட்டும் சரியானதாக அமையவில்லை.

மேலும் ஷோயப் மாலிக் தொடக்கத்தில் வீசும் போது பீல்ட் வியூகம் சரியல்ல என்பதை நான் உணர்ந்தேன். கள வியூகம் நெருக்கமாக அமைந்திருந்தால் அவர் விக்கெட்டை வீழ்த்தியிருக்கக் கூடும் என்றே நான் கருதுகிறேன். குறைந்த ரன்கள் போட்டியில் தாக்குதல் பீல்டிங் வியூகமே சரியான உத்தியாகும். முதலில் ஸ்லிப் இல்லை, பிறகு ஷோயப் மாலிக்கிற்கு ஸ்லிப் நிறுத்தினார். யுவராஜ் அதற்கு முன்பாக இரண்டு பந்துகளை அப்பகுதியில் எட்ஜ் செய்தார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஷாகித் அப்ரிடி தன்னை முன்னால் களமிறக்கிக் கொண்டார், ஆனால் மொகமது ஹபீஸையே களமிறக்கியிருக்க வேண்டும். விக்கெட் கீப்பர் சர்பராஸ் அகமதுவுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்திய ஸ்பின் பவுலிங்கை ஷோயப் மாலிக் தவிர ஒருவரும் எதிர்த்து ஆடவில்லை, இதனால் கடைசியில் 20 ரன்கள் குறைவாக எடுத்தோம்.

எனவே ஒட்டுமொத்தமாக நமது அணித்தேர்வு முறையை மாற்ற வேண்டும் வீரரை நீக்குவது, பிறகு எடுப்பது, பிறகு நீக்குவது என்ற அணுகுமுறை சரியல்ல.

கண்டிப்பான தேர்வு அளவுகோல்களை நாம் கடைபிடிப்பது அவசியம்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x