Published : 06 Jan 2022 11:14 AM
Last Updated : 06 Jan 2022 11:14 AM
ஜோகன்னஸ்பர்க்: ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அந்நாட்டு வேகப்பந்துவீச்சாளர் மார்கோ ஜேஸனுடன் மோதலில் ஈடுபட்ட இந்திய வீரர் பும்ராவுக்குத் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் அறிவுரை கூறியுள்ளார்.
ஜோகன்னஸ்பர்க் நகரில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 2-வது இன்னிங்ஸில் 240 ரன்களைத் தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இன்னும் வெற்றிக்கு 122 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 8 விக்கெட்டுகள் இருப்பதால் ஆட்டம் பரபரப்பாக நகர்ந்து வருகிறது.
இதில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் பேட் செய்தபோது, பும்ராவுக்கு, தென் ஆப்பிரிக்க இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மார்கோ ஜேஸன் ஷாட் பந்துகளை வீசியபோதுதான் வார்த்தை மோதல் ஏற்பட்டது.
54-வது ஓவரை ஜேஸன் வீசியபோது, ஷாட் பந்தில் பும்ராவுக்கு உடலில் லேசாக அடிபட்டது, பந்தும் பும்ராவுக்கு மீட் ஆகவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த பும்ரா ஏதோ கூற, அதற்கு ஜேஸனும் பதிலுக்கு ஏதோ பேசினார். இதனாலும் மைதானத்திலேயே இரு வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, கேப்டன் எல்கர், நடுவர் தலையிட்டு இருவரையும் பிரித்துவிட்டனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தவர் மார்கோ ஜேஸன். பும்ராவும், ஜேஸனும் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள், பழகியவர்கள், ஒரே அணியில் இருந்தவர்கள். ஐபிஎல் தொடரில் சக அணி வீரர்கள் இருவருமே வார்த்தை மோதலில் ஏற்பட்டது வியப்பாக இருந்தது.
பும்ராவின் செயல்பாடு குறித்து தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் கருத்து தெரிவித்து, அறிவுரை கூறியுள்ளார். ஸ்டெயின் ட்விட்டரில் கூறுகையில், “ எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, உறுதியாகத் தெரியும். இதேபோன்று எதிரணி வீரருடன் இதற்கு முன் ஜஸ்பிரித் பும்ரா சண்டையிட்டுள்ளார். அதிகமான நாட்கள் கூட ஆகவில்லை,
இங்கிலாந்து தொடரில் ஜேம்ஸ் ஆன்டர்ஸனிடம்தான் பும்ரா இதுபோன்று ஷாட் பிட்ச் பந்துவீசி வாக்குவாதம் செய்தார். பும்ரா நீங்கள் என்ன குழந்தையா, கற்றுக்கொள்ளுங்கள். மார்கோ ஜேஸனுக்கு நீங்கள் என்ன கொடுத்தீர்களோ அதைத்தானே நீங்கள் பெற முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT