Published : 03 Jan 2022 08:29 PM
Last Updated : 03 Jan 2022 08:29 PM

தெ.ஆ அபார பந்துவீச்சு: அஸ்வின், ராகுல் துணையுடன் இந்தியா முதல் இன்னிங்ஸில் 202 ரன்கள் சேர்ப்பு

ஜோகன்னஸ்பர்: ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடிய நிலையில், இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. கேப்டன் விராட் கோலி முதுகுவலி காரணமாக போட்டியில் இருந்து விலக, கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பேற்றார். அதன்படி டாஸ் வென்ற ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். ராகுல் - அகர்வால் இணை ஓரளவு விளையாடியது. மயங்க் 26 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி ஆட்டம் கண்டது.

கடந்த போட்டியை போல புஜாரா வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். புஜாரா மூன்று ரன்களுக்கு அவுட் ஆக, அவரை தொடர்ந்து வந்த ரஹானே டக் அவுட் ஆனார். விராட் கோலிக்குப் பதிலாக களமிறங்கிய ஹனுமா விஹாரி தன்னை நிரூபிக்கத் தவறினார். 20 ரன்களில் ஹனுமா விஹாரி நடையை கட்டினார். விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்துகொண்டிருக்க முதல்முறையாக டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்ற தனது ஃபார்மை தொடர்ந்தார். 133 பந்துகளில் அரை சதம் எடுத்த நிலையில் அவரும் வெளியேற, இந்திய அணி கௌரவமான ஸ்கோர் எட்ட உதவினார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

50 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 46 ரன்களை அதிரடியாக எடுத்து அஸ்வின் அவுட் ஆனார். டெயிலெண்டர்கள் யாரும் அவருக்கு கைகொடுக்க தவற, இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்கா தரப்பில் இளம் வீரர் மார்கோ ஜென்ஸன் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x