Published : 28 Mar 2016 04:24 PM
Last Updated : 28 Mar 2016 04:24 PM

மொஹாலி இன்னிங்சே எனது நம்பர் 1 டி20 இன்னிங்ஸ்: விராட் கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கிய போட்டியில் அதிகரித்த அழுத்தங்களை முறியடித்து 51 பந்துகளில் 82 ரன்கள் எடுத்த கோலி, இந்த இன்னிங்ஸ் தனது நம்பர் 1 டி20 இன்னிங்ஸ் என்று அறுதியிட்டுள்ளார்.

இலக்கைத் துரத்திய போது 14-வது ஓவரில் 94/4 என்ற தடுமாற்றத்தில் வெற்றிக்கான ரன் விகிதம் இரட்டை இலக்கத்தை தொட, கோலி தனது ஆட்டத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்து அசாதாரணமான இன்னிங்ஸை ஆடி வெற்றி பெறச் செய்தார். இதில் குறிப்பாக அவர் அடித்த 11 பவுண்டரிகளில் 8 பவுண்டரிகள் கடைசி 5 ஓவர்களில் அடிக்கப்பட்டது.

இந்நிலையில் உணர்ச்சிவயப்பட்டிருந்த கோலி தனது இன்னிங்ஸ் பற்றி கூறியதாவது:

டாப் 3 இன்னிங்ஸ்களில் இது நிச்சயமாக இடம்பெறும். இப்போதைக்கு முதலிடத்தில் உள்ளது என்றே கூறலாம். நான் உணர்ச்சிவசப்பட்டுள்ளதால் இந்த இன்னிங்சை எனது சிறந்த டி20 இன்னிங்ஸ் என்றே நான் கருதுகிறேன். ஆஸ்திரேலியா போன்ற உலகத்தரம் வாய்ந்த அணிக்கு எதிராக இந்த இன்னிங்ஸ் அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. உள்நாட்டில் விளையாடுவதால் எங்கள் மீது அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. எனவே அவர்களை உற்சாகப்படுத்துவது எங்கள் கடமை.

இந்தப் போட்டியைப் போன்ற சவால்களைத்தான் ஒரு கிரிக்கெட் வீரராக விரும்புகிறேன், ஒவ்வொரு போட்டியிலும் புதிய சவால்கள் வேண்டும், ஆனால் அதிகமாக இத்தகைய சூழ்நிலைகள் விரும்பத்தக்கதும் அல்ல என்றும் நான் உண்மையில் நினைக்கிறேன்.

தோனிதான் என்னை அமைதிப்படுத்தினார். இல்லையெனில் நான் மகிழ்ச்சியை கொஞ்சம் அதிகமாகவே வெளிப்படுத்தி கொண்டாடியிருப்பேன்.

யுவராஜ் சிங் ஒரு அதிரடி வீரர், ஆனால் அவர் முழு உடல்தகுதியுடன் இல்லாமல் 60-70% உடல் தகுதியுடன் இருப்பது விரும்பத்தக்கதல்ல. இந்நிலையில் தான் அவர் வருவது வரட்டும் என்று ஆடினார். ஆனால் சோபிக்க முடியவில்லை. காயத்திலிருக்கும் போது அதுதான் சரியான அணுகுமுறை, ஓடி ரன்களை எடுக்க முடியாத நிலையில் வரும் பந்துகளை பவுண்டரி அடிக்கப் பார்ப்பதுதான் சிறந்தது.

ரன்களை ஓடுவதில் எனக்கும் தோனிக்கும் இடையே நல்ல புரிதல் உண்டு. பந்தை எங்கு அடிப்பது, பவுண்டரியில் நிற்கும் வீர்ர்களை எப்படி முன்னே வரவைப்பது என்பதில் எங்கள் இருவருக்கும் ஒத்த கருத்துகளே உள்ளன. ஜிம்மில் பயிற்சி பெற்றதால் ரன் எடுக்காமல் இருக்கும் போது எப்படி ஓடுவதற்கான ஆற்றல் கிடைக்கிறதோ அதேபோல் களைப்படைந்தாலும் 2 ரன்களை வேகமாக ஓடி எடுக்கும் ஆற்றல் தக்க வைக்கப்படுவது ஜிம் பயிற்சியால்தான்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

ஸ்மித் புகழாரம்: கோலியின் இந்த இன்னிங்ஸ் உண்மையில் ‘சீரியசான’ இன்னிங்ஸ். அழுத்தந்தரும் சூழ்நிலையிலும் அவர் பந்தை நடுமட்டையில் வாங்கி அடித்தார், களத்தில் உள்ள இடைவெளிகளைக் கண்டுபிடித்தார். இதனை இவர் நீண்ட காலமாக எங்களுக்கு எதிராகச் செய்து வருகிறார். பெரிய இன்னிங்ஸ், அழகாக ஆடுகிறார் விராட் கோலி.

என்றார் ஸ்மித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x