Published : 01 Jan 2022 01:12 PM
Last Updated : 01 Jan 2022 01:12 PM

யார் சொல்வதில் உண்மை? கோலியிடம் கேப்டன் பதவியிலிருந்து விலகாதீர்கள் என ஒவ்வொருவரும் கேட்டுக்கொண்டோம்: ட்விஸ்ட் வைக்கும் சேத்தன் சர்மா

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, கேப்டன் விராட் கோலி | படம் உதவி: ட்விட்டர்.

புதுடெல்லி: டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகாதீர்கள், உலகக் கோப்பை நேரத்தில் அணியைப் பாதிக்கும் என்று விராட் கோலியிடம் பிசிசிஐ நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கேட்டுக்கொண்டோம் என்று தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா புதிய ட்விஸ்ட் வைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கப் பயணத்துக்குச் செல்லும் முன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “டி20 உலகக் கோப்பை போட்டியுடன் நான் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என முடிவைத் தெரிவித்தபோது, பிசிசிஐ எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நல்ல முறையில் ஏற்றுக்கொண்டனர். வேண்டாம் ராஜினாமா செய்யாதீர்கள் என்று கூறவில்லை. தயக்கமும் காட்டவில்லை” எனத் தெரிவித்தார்.

இதனால் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவு எடுத்த விராட் கோலியிடம் தனிப்பட்ட முறையில் பேசி சமாதானம் செய்ய முயன்றதாக பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியது குறித்துக் கேள்வி எழுந்தது. இந்நிலையில் தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா கோலியிடம் கேப்டன் பதவியிலிருந்து விலகாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டோம் எனக் கூறியுள்ளதால், யார் கூறியதில் உண்மை இருக்கிறது எனத் தெரியவில்லை.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று தேர்வு செய்யப்பட்டது. அதன்பின் தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக பிசிசிஐ கூட்டம் நடந்தபோது, விராட் கோலி டி20 உலகக் கோப்பை முடிந்ததும் கேப்டன் பதவியிலிருந்து விலகப் போகிறேன் எனக் கூறியது எங்கள் அனைவருக்கும் வியப்பாக இருந்தது. உலகக் கோப்பை வரும் நேரத்தில் இதுபோன்று கேட்டால் எவ்வாறு இருக்கும். கூட்டத்தில் பங்கேற்ற பிசிசிஐ நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கோலியிடம் தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள், கேப்டன் பதவியிலிருந்து விலகாதீர்கள். உலகக் கோப்பை முடிந்தபின் பேசிக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டோம்.

திடீரென கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கோலி கூறினால், அது இந்திய கிரிக்கெட்டையே ஆட்டிப் பார்க்கும் என்றோம். ஆனால், கோலி மனம் மாறவில்லை. உலகக் கோப்பையில் இந்திய அணியின் செயல்பாட்டைக் கூட கோலியின் முடிவு பாதிக்கக்கூடும். ஆதலால் தொடர்ந்து கேப்டன் பதவியில் இருங்கள் என்று நானும், பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷாவும் கூறினோம்.

ஆனால், டி20 உலகக் கோப்பை போட்டியின் போது கோலியின் முடிவு அணியை பாதிப்பதை நாங்கள் விரும்பவில்லை. கோலி ஒரு முடிவு எடுத்துவிட்டார், அதை நாங்கள் மதிக்கிறோம். அணியின் முக்கியத் தூண் கோலி, அவர் ஏதேனும் முடிவு எடுத்தால், அதை நாங்கள் மதிக்கிறோம்.

கோலி டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக முடிவெடுத்தார். நாங்கள் ஒருநாள் கேப்டன் பதவி குறித்து முடிவெடுத்தோம். ஒருநாள், டி20 போட்டிகளுக்கு இரு கேப்டன்கள் இருக்கமுடியாது என்பதை கோலியிடம் தெரிவித்தோம். கோலி, டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகியவுடனே, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவி குறித்து நாங்கள் முடிவெடுத்துவிட்டோம்.

வெள்ளைப் பந்துப் போட்டிகளுக்கு ஒரு கேப்டன்தான் இருக்க முடியும். இரு கேப்டன்கள் இருக்க முடியாது. டி20 கேப்டன்ஷியைக் கைவிடுவது கோலி முடிவாக இருந்தால், ஒருநாள் போட்டிக்கு கேப்டனை நியமிப்பது வாரியத்தின் முடிவு.

சேத்தன் சர்மா

ஒருநாள் கேப்டன்ஷி பதவியிலிருந்து கோலியை நீக்கும் முன் அவருக்கு முன்னறிவிப்பு ஏதும் கூறவில்லை என்று குற்றம் சாட்டும் கோலி, டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுக்கும் முன் எங்களிடம் ஏதேனும் கூறினாரா?

தேர்வுக்குழுக் கூட்டம் முடிந்தபின், கோலியை நான் தொலைபேசியில் அழைத்து ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட செய்தியைத் தெரிவித்தேன். தேர்வுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அப்போதே கோலியிடம் தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை.

அதனால்தான் கூட்டம் முடிந்தபின் தெரிவித்தோம். வாரியத்தைப் பொறுத்தவரை இரு வெள்ளைப் பந்துப் போட்டிகளுக்கு இரு கேப்டன்கள் தேவையில்லை. இதை கோலியிடம் தெரிவித்தவுடன் அவரும் ஏற்றுக்கொண்டார். நாங்கள் என்ன பேசினோம் என்பதைப் பொதுவெளியில் கூற முடியாது''.

இவ்வாறு சேத்தன் சர்மா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x