Published : 20 Mar 2016 09:09 AM
Last Updated : 20 Mar 2016 09:09 AM

மீண்டும் கோலி அபாரம்: இழுவை ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

கொல்கத்தவில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

மழை காரணமாக சுமார் 90 நிமிடங்கள் கழித்துத் தொடங்கிய இந்தப் போட்டி 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இந்திய அணி மீண்டும் ரோஹித் சர்மா, ஷிகர் தவண், ரெய்னா சொதப்பலில் 23/3 என்று தடுமாறியது, ஆனால் அதன் பிறகு சற்றே திணறினாலும் யுவராஜ் 24 ரன்களுக்குத் தாக்குப்பிடிக்க, விராட் கோலி மீண்டும் தனது விரட்டல் சாதுரியத்தினால் 55 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். தோனி வழக்கம்போல் மொகமது இர்பானை நேராக ஒரு ‘ஃபிளாட்’ சிக்ஸ் அடித்து ஸ்கோரை சமன் செய்து பிறகு இந்தியா 119/4 என்று வெற்றி பெற்றது.

போட்டி பற்றி ஊடகங்கள் கொடுத்த ‘ஹைபர் ஹைப்’ எதுவும் ஆட்டத்தில் இல்லை. பாகிஸ்தான் இன்னிங்ஸ் மந்தமாக இருந்தது, பவுலிங் அருமையாக இருந்தது. ஒரே ஓவரில் அடுத்தடுத்த ஒரேமாதிரியான பந்தில் ஒரேமாதிரியாக தவணும், ரெய்னாவும் மொகமது சமியிடம் பவுல்டு ஆகி நெருக்கடி ஆனதைத் தவிர இந்தப் போட்டி ஒன்றும் ‘ஹை வோல்டேஜ்’ ‘ஹை ஆக்டேவ்’ போட்டியாக இருக்கவில்லை. மிகவும் சாதாரணமாக இருந்தது.

இன்னும் சொல்லப்போனால் இந்த உலகக்கோப்பை போட்டியிலேயே இந்தியா ஆடிய 2 போட்டிகள்தான் மகா அறுவையாக இருந்தது என்றே கூற வேண்டும்.

கோலி பந்துகள் வந்த பிறகு ஆடினார், 19 சிங்கிள்கள், ஒரு இரண்டு, 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ் என்று அவர் 37 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இலக்கு குறைவாக இருந்ததாலும் பிட்சில் பந்துகள் சற்றே நின்று எழும்பவோ, திரும்பவோ செய்ததால் நிதானம் காட்ட வேண்டியிருந்ததாலும் கோலி மிகச்சிறப்பாக தனது இன்னிங்ஸை கட்டமைத்தார். குறிப்பாக அரைசதத்தை நெருங்கும் போது அடித்த இரண்டு கவர் டிரைவ்கள் உண்மையில் தற்போதைய இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு பிட்சைக் கணித்து, பீல்டின் நிலைகளைக் கணித்து ஆடக்கூடிய ஒரே வீரர் என்பதை நிரூபித்தது. ஆம் சச்சினே இந்திய மூவர்ணக்கொடியை ஆட்டி மகிழ்ந்தார்.

தொடக்கத்தில் ரோஹித் சர்மா 2 பவுண்டரிகளை அடித்தார். ஆனால் அவருக்கேயுரிய கிறுக்குத் தனத்தில் அவர் ‘சாதாரண பவுலர்’ என்று வர்ணித்த மொகமது ஆமிரை சரியாக ஆடாமல் மாலிக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஷிகர் தவண் உண்மையில் அணியில் தனது இடத்துக்கான எந்த வித நியாயமும் இல்லாமல் ஆடி வருகிறார். 15 பந்துகளில் 6 ரன்களை எடுத்த அவர் மொகமது சமியின் உடம்புக்கு நேராக வந்து எழும்பிய ஷார்ட் பிட்ச் பந்தை நேர் பேட்டில் ஆடத் தெரியாமல் மட்டையை கிடைக்கோட்டு வசமாக வைத்து ஆடி பந்தை வாங்கி உள்ளே விட்டுக் கொண்டார். அடுத்த பந்தே இன்னமும் கூட ஷார்ட் பிட்ச் பந்தை ஆடத் தெரியாத ரெய்னா அதே மாதிரியான பந்தில் எம்பிக் குதித்து மட்டையின் உள் விளிம்பில் வாங்கி பவுல்டு ஆனார்.

யுவராஜ் சிங், ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை ஏறக்குறைய கேட்ச் கொடுத்திருப்பார். ஆனால் அங்கு அப்ரீடி ஆளை நிறுத்தவில்லை. ஷாகித் அப்ரீடி ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு ஓவர் யுவராஜ் சிங்கை ஆட்டிப்படைக்க, ஷோயப் மாலிக் அருமையான ஒரு ஆஃப் ஸ்பின் பந்தில் யுவராஜின் எட்ஜைப் பிடித்தார், ஆனால் கேட்ச் பிடிக்க ஆளில்லை. கடைசியில் சுதானமாக ஆடிய யுவராஜ் 24 ரன்கள் எடுத்து வஹாப் ரியாஸிடம் அவுட் ஆனார். கடைசியில் கோலி, தோனி முடித்து வைத்தனர். மொகமது ஆமிருக்கு 4 ஓவர்கள் கொடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. 2 விக்கெட்டுகள் எடுத்த மொகமது சமியும் 2 ஓவர்கள்தான் வீசினார். இவையெல்லாம் கேள்விகள் அல்ல, சர்ச்சைக்குரிய புள்ளிகள்.

முன்னதாக பாகிஸ்தான் பேட்டிங் செய்த போது அஸ்வின் 3 ஓவர்களில் 12 ரன்களையே கொடுதிருந்தாலும் அவர் ஓவர் முடிக்கப்படவில்லை, ஹர்திக் பாண்டியா நன்றாக வீசவில்லை, 2 ஓவர்களில் 25 ரன்களை விட்டுக் கொடுத்தார், இறுதி ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் புல்டாஸ்களையும் லெந்த் பந்துகளையும் வீசினர், ஒருவருக்குக் கூட ஆஃப் கட்டர் வீச வேண்டும் என்று புரியவில்லை. இதனால் ஷோயப் மாலிக், உமர் அக்மல் கடைசி 5 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்தனர்.

அஸ்வினின் 2-வது ஓவரில் பந்துகள் ‘ஸ்கொயர்’ ஆகத் திரும்பின. பாகிஸ்தான் அணியில் அமகது ஷெசாத் 25 ரன்களையும் உமர் அக்மல் 22 ரன்களையும் ஷோயப் மாலிக் 26 ரன்களையும் எடுத்தனர். அப்ரீடி 8 ரன்களில் பாண்டியாவிடம் வீழ்ந்தார். பும்ரா அதிகபட்சமாக 4 ஓவர்களில் 32 ரன்களை விட்டுக் கொடுத்தார். யுவராஜிற்கும் பவுலிங் கொடுக்கவில்லை, அஸ்வினையும் முடிக்கவில்லை, பாண்டியாவை நம்பியதால் அவர் ஒரு ஓவரில் 14 ரன்களையும் அதற்கு அடுத்த ஓவரில் பும்ரா 13 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர். இதையெல்லாம் தோனி சிந்திக்க வேண்டும். ஸ்பின் பிட்சில் யுவராஜுக்கு கொடுக்காமல் இருப்பது, அஸ்வின் ஓவரை முடிக்காமல் இருப்பது இவையெல்லாம் திருத்தப்பட வேண்டிய தவறுகள். பாகிஸ்தானாக இல்லாமல் ஆஸ்திரேலியாவாகவோ, இங்கிலாந்தாகவோ இருந்திருந்தால் நிச்சயம் இதற்கான எதிர்மறைப் பலன்களை தோனி அனுபவித்திருப்பார்.

மொத்தத்தில் ஒரு சாதாரணத்துக்கும் குறைவான ஒரு போட்டியில் விராட் கோலி தனது தரமான பேட்டிங்கினால் வித்தியாசத்தை ஏற்படுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x