Published : 29 Dec 2021 03:24 PM
Last Updated : 29 Dec 2021 03:24 PM
மெல்போர்ன்: இந்திய அணியை இந்திய மண்ணில் வைத்து டெஸ்ட் தொடரில் தோற்கடிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தன்னுடைய ஆசையைத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிவிட்டது. தொடர்ந்து 3-வது முறையாக ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி தக்கவைத்து வருகிறது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு கடந்த அக்டோபர் மாதத்தோடு 35 வயதாகிவிட்டது. இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பின் ஆட்டநாயகன் விருது பெற்ற வார்னர் இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் என்பது தெரியவில்லை. அடுத்ததாக 2023-ம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடக்கும்போது, வார்னருக்கு 37 வயதாகிவிடும்.
அந்த நேரத்தில் வார்னர் விளையாடுவாரா என்பதும் தெரியாது. டேவிட் வார்னர் இந்தியாவில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இரண்டிலுமே மோசமான ரெக்கார்டுதான் வைத்துள்ளார். தான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முன் இந்திய அணியை சொந்த மண்ணில் வைத்து வீழ்த்த வேண்டும், இங்கிலாந்தில் ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என வார்னர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முன் தனது ஆசைகளை டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிரிக்இன்ஃபோ தளத்தில் வார்னர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
''இந்திய மண்ணில் வைத்து இந்திய அணியை டெஸ்ட் தொடரில் நாங்கள் தோற்கடித்தது இல்லை. நான் ஓய்வு பெறுவதற்குள் இந்திய அணியை அவர்கள் மண்ணில் வைத்து தோற்கடித்து தொடரை வெல்ல வேண்டும் என்பது என் ஆசை. இங்கிலாந்தில் 2023-ம் ஆண்டு நடக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும். வெளியே கடந்த 2019-ம் ஆண்டு நாங்கள் தொடரை சமன் செய்தோம். அதேபோன்று மற்றொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், நான் ஓய்வு பெறுவது குறித்து யோசிப்பேன்.
எனக்கு வயதாகும்போது, நிச்சயம் அடுத்த ஆஷஸ் டெஸ்ட தொடரில் இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆன்டர்ஸுக்கு அதிகமான வயதாகியிருக்கும்.
என்னைப் பொறுத்தவரை என் திறமைக்கு ஏற்றவாறு விளையாடி ரன்களைக் குவிக்க முயல்வேன். தொடர்ந்து கிரிக்கெட்டில் இருக்கவே விரும்புகிறேன். நான் ரன் அடிக்காமல் கடந்த காலங்களில் இருந்திருக்கிறேன். ஆனால், அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கவில்லை. ஆதலால், வரும் புத்தாண்டு முதல் அனைத்து வகையிலும் அதிகமான ரன்கள் அடிக்க முயல்வேன்''.
இவ்வாறு வார்னர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT