Published : 28 Dec 2021 08:10 AM
Last Updated : 28 Dec 2021 08:10 AM
மெல்போர்னில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலிய அணி தக்கவைத்தது. ஆட்டம் தொடங்கி 3-வது நாளில் முடிவு கிடைத்துள்ளது.
வேகப்பந்துவீச்சாளர் ஸ்காட் போலந்தின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மளமளவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். அறிமுக வீரர் போலந்த் 6 விக்ெகட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து சரிவுக்குக் காரணமாக அமைந்தார். 4 ஓவர்கள் வீசிய போலந்த் ஒரு மெய்டன் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த வீச்சை நிரூபித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 27.4 ஓவர்களில் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்களில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஆஸ்திரேலியஅணி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.
கடந்த 2017-18ம் ஆண்டில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது. அதன்பின் கடந்த 2019-20ம் ஆண்டில் நடந்த ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி சமன் செய்ததையடுத்து, கோப்பையைத் தக்கவைத்தது. இந்த ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரில் 3-0 என்ற கணக்கில் வென்று கோப்பையை 3-வது முறையாக ஆஸ்திரேலிய அணி தக்கவைத்துள்ளது.
இங்கிலாந்து அணி கடந்த 2015ம் ஆண்டுக்குப்பின் ஆஷஸ் தொடரை வெல்ல முடியாமல் தடுமாறி வருகிறது.
மெல்போர்னில் ஆஷஸ் தொடரின் 3-வது மற்றும் பாக்ஸிங்டே டெஸ்ட் கடந்த 3 நாட்களுக்கு முன் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 185 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 267 ரன்களும் சேர்த்தன. 2-வது இன்னிங்ஸில் 82 ரன்கள் பின்தங்கியநிலையில் இங்கிலாந்து அணி ஆடத் தொடங்கியது. 2-வது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 4விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் சேர்த்திருந்தது இங்கிலாந்து அணி.
இன்று 3-வதுநாள் ஆட்டம் தொடங்கி உணவு இடைவேளைக்குள்ளாகவே மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் அடுத்த 15 ஓவர்களில் 37 ரன்களுக்குள் இழந்தது இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும்14 ரன்களில் தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்(28) பென் ஸ்டோக்ஸ்(11) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். இங்கிலாந்து அணி கடைசி 5 விக்கெட்டுகளை வெறும் 8 ரன்களுக்குள் இழந்தது. 60 ரன்கள் வரை 5 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி அடுத்த 8 ரன்களில் மீதமிருந்த விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராகக் களமிறங்கிய வேகப்பந்துவீச்சாளர் போலந்த் 4 ஓவர்கள் வீசி 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதிவேகமாக 5 விக்கெட்டுகளைக் கைபற்றிய வீரர்களில் 17 பந்துகளை வீசி போலந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். மிட்ஷெல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஒரு அணி முதல் இன்னிங்ஸில் குறைவான முன்னிலை பெற்று இன்னிங்ஸ் வெற்றி பெறுவது இது 4-வது முறையாகும். இதற்கு முன் கடந்த 1955ம் ஆண்டு ஆக்லாந்தில் நியூஸிலாந்து அணியை இங்கிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2009ம் ஆண்டில் கிங்ஸ்டனில் இங்கிலாந்து அணியை 74 ரன்களில் மே.இ.தீவுகள் வென்றது. 1986ம் ஆண்டில் லாகூரில் பாகிஸ்தானை 87 ரன்களில் மே.இ.தீவுகள் வென்றது.
ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணியின் மோசமான ஆட்டம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இந்த காலண்டர் ஆண்டில் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் சந்திக்கும் 9-வது தோல்வி இதுவாகும். இதற்கு முன் காலண்டர் ஆண்டில்8 தோல்விகளை மட்டுமே சந்தித்திருந்த இங்கிலாந்து அதை முறியடித்துள்ளது.
கடந்த 1904-ம் ஆண்டுக்குப்பின் ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணியின் மிக்ககுறைவான ஸ்கோர் இதுவாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT