Published : 25 Dec 2021 02:34 PM
Last Updated : 25 Dec 2021 02:34 PM

‘‘பஞ்சாபிற்கு சேவை செய்வேன்’’- அரசியலில் களமிறங்கும் ஹர்பஜன்?

புதுடெல்லி: நான் எந்த கட்சியில் சேருவது என்பதை முன்கூட்டியே அறிவிப்பேன், அரசியல் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது மூலமாகவோ பஞ்சாபிற்கு சேவை செய்வேன் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரும், பாஜி என்று அழைக்கப்படுவரான ஹர்பஜன் சிங் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 1998-ம் ஆண்டு இந்திய அணிக்குள் அறிமுகமான ஹர்பஜன் சிங் ஏறக்குறைய 23 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டோடு இணைபிரியாமல் பயணித்தார். அவரின் இந்த நீண்ட பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

இதுதொடர்பாக ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ செய்தியில், “பல்வேறு வழிகளில் இருந்தும் ஏற்கெனவே நான் ஓய்வு பெற்றுவிட்டேன். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இருந்ததால்தான் தாமதமாக அறிவிக்கிறேன்.

உங்கள் வாழ்க்கையில் கடினமான முடிவு எடுத்து, முன்னேறிச்செல்லும தருணம் வரும். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த முடிவை அறிவிக்க இருந்தேன். ஆனால் அதற்கான சரியான தருணத்துக்காக உங்களுக்காக காத்திருந்தேன். நான் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்” எனத் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் அவர் அடுத்த என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அவரது சொந்த மாநிலமான பஞ்சாபில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அவர் அரசியலில் இணையக்கூடும் என கருத்துகள் வெளி வந்த வண்ணம் உள்ளது.

இந்தநிலையில் இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:

எனக்கு எல்லா கட்சி அரசியல்வாதிகளையும் தெரியும். நான் எந்த கட்சியில் சேருவது என்பதை முன்கூட்டியே அறிவிப்பேன். அரசியல் மூலமாகவோ அல்லது வேறு ஏதாவது மூலமாகவோ பஞ்சாபிற்கு சேவை செய்வேன். இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x