Published : 25 Dec 2021 02:24 PM
Last Updated : 25 Dec 2021 02:24 PM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எளிதில் வெற்றி கிட்டிவிடாது: ராகுல் திராவிட்

செஞ்சூரியன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எளிதில் வெற்றி கிட்டிவிடாது என்றும், வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ டிவி-க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "நாம் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலுமே வென்றாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்போது வந்துவிட்டது. எந்த வடிவ கிரிக்கெட்டாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் வெளிநாடுகளில் இந்திய அணி களமிறங்கும்போது, சிறப்பாக விளையாடி வென்றிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. தென் ஆப்பிரிக்க ஆடுகளத்தில் விளையாடுவது மிகவும் சவாலானது. அத்துடன், தென் ஆப்பிரிக்க வீரர்களும் தங்களது சொந்த மண்ணில் மிகச் சிறப்பாக விளையாடுவர். நம்முடைய சிறந்த பங்களிப்பை நாம் தரவேண்டும் என்பதை நம் வீரர்கள் உணர்ந்திருக்கிறார்கள். வெற்றிக்கான வாய்ப்பு உண்டு; ஆனால், அது மிக எளிதல் கிட்டிவிடாது" என்றார்.

"கேப்டன் விராட் கோலி குறித்து அவர் தனது பேட்டியில் ராகுல் டிராவிட் குறிப்பிடும்போது, "விராட் கோலியின் வளர்ச்சி ஆச்சரியமானது. அவர் தனது முதல் போட்டியில் அறிமுகமானபோது, அவருடன் பேட்டிங் களத்தில் இருந்தேன். ஒரு கிரிக்கெட் வீரராகவும், தனி மனிதராகவும் அவரது 10 ஆண்டு கால வளர்ச்சி என்பது தனித்துவமானது" என்றார் ராகுல் திராவிட்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை (டிச.26) 'பாக்சிங் டே' டெஸ்டாக செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்காவின் கோட்டையாக விளங்கும் அந்த மைதானத்தில் இதுவரை எந்த ஆசிய அணியும் வென்றதில்லை என்பது கவனிக்கத்தது. இந்த சரித்திரத்தை பயிற்சியாளர் திராவிட்டின் வழிகாட்டுதலுடன் கோலி தலைமையிலான இந்திய அணி திருத்தி எழுதும் என்று எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x