Published : 23 Dec 2021 06:55 PM
Last Updated : 23 Dec 2021 06:55 PM
ஹைதராபாத்: 2022 ஐபிஎல் டி20 தொடருக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது பயிற்சியாளர்கள் குழுவை மாற்றியமைத்து, ஜாம்பவான்களுடன் களமிறங்குகிறது. மே.இ.தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாரா, தென் ஆப்பிரிக்க வேகப்புயல் டேல் ஸ்டெயின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பிரையன் லாராவும், வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக டேல் ஸ்டெயினும், சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக முத்தையா முரளிதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஹேமந்த் பதானி, ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளார். துணைப் பயிற்சியாளராக சைமன் கேடிச் அமர்த்தப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 9 சீசன்களில் விளையாடியுள்ளது. அதில் 2014, 2015, 2021 ஆகிய சீசன்களில் மட்டும்தான் லீக் சுற்றோடு சன்ரைசர்ஸ் வெளியேறியுள்ளது. 2016-ல் சாம்பியன் பட்டத்தையும், 2018-ல் 2-வது இடத்தையும் பெற்ற சன்ரைசர்ஸ் அணி, மற்ற சீசன்களில் ப்ளே ஆஃப் சுற்றுவரை முன்னேறியுள்ளது. அடுத்த ஆண்டு சீசனில் கூடுதலாக இரு அணிகள் வருவதால் அதற்குத் தயாராக வேண்டும் என்பதால் புதிய பயிற்சியாளர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “2022 ஐபிஎல் தொடருக்காகப் புதிய பயிற்சியாளர் குழுவை அறிமுகம் செய்கிறோம். ஆரஞ்சு ஆர்மி எழத் தயாராகிறது. பிரையன் லாரா, முத்தையா முரளிதரன், டாம் மூடி, டேல் ஸ்டெயின், சைமன் கேடிச், ஹேமங் பதானி” எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஐபிஎல் டி20 தொடரின் மெகா ஏலம் பெங்களூரு அல்லது கொச்சி நகரில் பிப்ரவரியில் நடக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT