Published : 17 Jun 2014 08:41 PM
Last Updated : 17 Jun 2014 08:41 PM
டாக்காவில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணியை 58 ரன்களுக்குச் சுருட்டி இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
இந்தியா முதலில் பேட் செய்ய அழைக்கபட்டு 105 ரன்களுக்குச் சுருண்டது. மீண்டும் ஆடிய வங்கதேசம் 17.4 ஓவர்களில் 58 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆட்டமே அணிக்கு 41 ஓவர்களாகக் குறைக்கப்பட்டிருக்கும்போது இரு அணிகளும் சேர்ந்தே 43.1 ஓவர்கள்தான் ஆடியுள்ளது.
பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும் இந்த ஆட்டக்களத்த்தில் ஸ்டூவர்ட் பின்னி தனது மிதவேக ஸ்விங் பவுலிங்கின் மூலம் 4.4 ஓவர்களில் 2 மைடன்களுடன் 4 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா 8 ஓவர்களில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதற்கு முன்பு இரண்டு கர்நாடகா பந்து வீச்சாளர்கள்தான் சாதனையை வைத்திருந்தனர். அனில் கும்ளே 12 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். சுனில் ஜோஷி 6 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தற்போது இவர்கள் இருவரையும் பின்னுக்குத் தள்ளியுள்ளார் அதே கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்டூவர்ட் பின்னி.
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சிற்கான உலக சாதனையை வைத்திருப்பவர் இலங்கையின் சமிந்தா வாஸ் அவர் 19 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அப்ரீடி, மெக்ரா, பிகெல், முரளிதரன், வக்கார் யூனிஸ், அகிப் ஜாவேட், வின்ஸ்டன் டேவிஸ் ஆகிய பவுலர்கள் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் தற்போது ஸ்டூவர்ட் பின்னி உள்ளார். அதாவது 6 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியில் கைப்பற்றிய வீரர்களில் இவரது பந்து வீச்சே இப்போதைக்கு சிறந்ததாக உள்ளது.
வங்கதேச அணியில் மிதுன் அலி அதிகபட்சமாக 26 ரன்களை எடுத்தார். ஆனால் படாதபாடு பட்டார். உமேஷ் யாதவ் அவருக்கு கடும் நெருக்கடியான ஒரு ஓவரை வீசினார். பந்துகள் மிக அதிகமாக ஸ்விங் ஆயின. இந்தியா விளையாடும்போதே சில பந்துகள் கடினமான லெந்த்திலிருந்து நன்றாக எழும்பியது.
வங்கதேச துவக்க வீரர் தமிம் இக்பாலிலிருந்து தவறு துவங்கியது. மோகித் சர்மா வீசிய முதல் பந்தை மேலேறி வந்து கவர் திசையில் பவுண்டரி விளாசிய இவர் அடுத்ததாக பொறுமையைக் கடைபிடித்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் அடுத்த பந்தே மட்டையை அவர் சுழற்று சுழற்ற அது மட்டையின் விளிம்பில் பட்டு சாஹாவிடம் கேட்ச் ஆனது. முதல் கோணல் முற்றிலும் கோணலாகிவிடும் என்பது அப்போது வங்கதேசத்திற்குத் தெரியவில்லை.
அதன் பிறகு அனாமுல் ஹக் 2 பவுண்டரிகளை அடித்தார். ஆனால் அவரும் 3வது ஓவரில் மோகித் சர்மா பந்தை நேராக பாயிண்டில் கேட்ச் கொடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன் பிறகு முஷ்பிகுர் ரஹிமும் மிதுன் அலியும் சேர்ந்து ஸ்கோரை 44 ரன்களுக்கு உயர்த்தினர். ஆனால் கடுமையான பந்துகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது. 11 ரன்கள் எடுத்த முஷ்பிகுர் ரஹிம், ஸ்டூவர்ட் பின்னியின் முதல் விக்கெட்டாக வீழ்ந்து துவங்கி வைத்தார். கிரீஸிற்கு வைடாகச் சென்று ஒரு பந்தை பின்னி உள்ளே ஸ்விங் செய்ய அதன் பவுன்சை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் லெக் திசையில் தட்டி விட முயன்று சாஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து மிதுன் அலி, இவர் ஸ்டூவர்ட் பின்னி வீசிய லெக் திசைப் பந்தை எங்கு வேண்டுமானாலும் அடித்திருக்கலாம் ஆனால் அவரோ நேராக ஸ்கொயர் லெக் கையில் கொடுத்தார். அடுத்த பந்தே அபாய வீரர் மஹமுதுல்லா அவுட் ஆகவேண்டியத் தேவையில்லாத பின்னி பந்தை கல்லியில் கேட்ச் கொடுத்தார். அதனை ராயுடு இரண்டாவது அட்டெம்ப்டில் பிடித்தார்.
ஷாகிப் அல் ஹசனுக்கு, மோகித் சர்மா வீசிய பந்து இன்றைய தினத்தின் நல்ல பந்து என்றே கூறவேண்டும், ஆஃப் ஸ்டம்பில் குட் லெந்த்தில் பிட்ச் ஆகி பவுன்ஸுடன் வெளியே ஸ்விங் ஆக அது ஷாகிபின் மட்டை விளிம்பை தொட்டுச் சென்றது. சாஹா கேட்ச் பிடித்தார். அதே ஓவரின் 3வது பந்தில் ஜியா உர் ரஹ்மான் பொறுப்பற்ற முறையில் மேலேறி வந்து காட்டுத் தனமாக அடிக்க முயன்றார் பந்து வானில் எழும்பி அருகிலேயே அஸ்கர் படேலிடம் கேட்ச் ஆனது.
மஷ்ரபே மோர்டசாவுக்கு விளையாடக் கடினமான ஒரு பந்தை பின்னி வீசினார். கிரீஸிற்கு வைடாகச் சென்று பந்தை உள்ளே செலுத்தி வெளியே ஸ்விங் ஆகுமாறு வீசினார் சாஹாவிடம் கேட்ச் ஆனது. நசீர் ஹுசைன் அடுத்ததாக பின்னியின் பவுண்டரி அடிக்க வேண்டிய பந்தை கால்களை நகர்த்தாமல் வெறுமனே மட்டையை மட்டும் கொண்டு சென்றார் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது.
மீண்டும் அல்-அமின் ஹுசைனுக்கு பின்னி கிரீஸிற்கு வைடாகச் சென்று பந்தை உள்ளே வீச அவர் பவுல்டு ஆனார். பின்னி 6 விக்கெட்டுகள் என்ற சாதனையை நிகழ்த்தினார். ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். வங்கதேசம் எடுத்த 58 ரன்களில் 32 ரன்களை உமேஷ் யாதவே கொடுத்தார்.
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது. இன்னும் ஒரு போட்டி நடைபெறவுள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் தோற்ற போது முஷ்பிகுர் ரஹிம் 272 ரன்கள் போதவில்லை என்றார்.இன்று 106 ரன்கள்தான் இலக்கு ஆனால் இதுவும் அந்த அணிக்குப் அதிகமாகவே ஆகிவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT