Published : 01 Mar 2016 03:23 PM
Last Updated : 01 Mar 2016 03:23 PM

பந்தை மைதானத்துக்கு வெளியே அடிக்க 2 மில்லியன் டாலர்கள் என்றால்... : ஸ்டெய்ன் கவலை

கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சு அழியும் போக்கில் சென்று கொண்டிருக்கிறது என்று கவலை தெரிவித்துள்ள டேல் ஸ்டெய்ன் ஐபிஎல் ரக கிரிக்கெட்டில் பேட்டிங் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வளர்க்கப்படுவது பற்றி அச்சம் வெளியிட்டுள்ளார்.

கிரிக்கெட் மன்த்லி பத்திரிகைக்கு அவர் அளித்து நாளை முழுதாக வெளியாகும் பேட்டியில் அவர் இது பற்றி கூறியதாவது:

“160கிமீ வேகத்தில் வீசக்கூடிய பவுலர்கள் தேவை. 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் பிட்சில் 150கிமீ வேகம் வீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றி எதிர்கால சந்ததியினருக்கு ஆர்வத்தை கிளறும் பவுலர்கள் தேவை. நான் இதனை தனிப்பட்ட முறையில் செய்ய முடியும், ஆனால் உலக கிரிக்கெட்டை நடத்துபவர்கள் உதவியும் இதற்குத் தேவை.

ஐபிஎல் ரக கிரிக்கெட் என்பது மைதானத்துக்கு வெளியே பந்தை அடிப்பதற்காகவே பேட்ஸ்மென்களுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளிக்கிறது என்றால் யார் பந்து வீச்சைத் தேர்வு செய்வார்கள்? யார் வேகமாக வீசப்போகிறார்கள்? ஐபிஎல் கிரிக்கெட்டிலும் இணையாக வருவாய் ஈட்டும் வேகப்பந்து வீச்சாளர்கள் வளர வேண்டியது அவசியம்.

பிட்ச்கள் 10 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு உதவிகரமாக அமைய வேண்டும். பவுலிங் ஹீரோக்களை வளர்த்து விட வேண்டும், அதாவது கிரிக்கெட்டைப் பார்க்கும் குழந்தைகள் அந்த வேகப்பந்து வீச்சாளர் போல் வீச வேண்டும் என்ற ஆவலைக் கிளற வேண்டும், அதாவது ஏ.பி.டிவில்லியர்ஸ் போல் வர வேண்டும் என்பதல்ல அல்லது விராட் கோலி போல் வரவேண்டும் என்பதல்ல நான் அந்த பவுலர் போல் வரவேண்டும் என்ற ஆசை வளர வேண்டும் இல்லையெனில் பந்து வீச்சு அழிந்து விடும்.

வேகப்பந்து வீச்சு என்பது ஒரு போர்க்களமே. சில வேளைகளில் ஓடு வந்து வீசும் பந்துகள் ‘ப்பூ’ என்று பேட்ஸ்மென்களால் ஊதப்பட்டு கவர் பவுண்டரிகளாகச் செல்லும், அதே வேளையில் என்னுடைய வாழ்நாளின் சிறந்த பந்து வீச்சை வீசுவேன் ஆனால் மட்டையின் விளிம்பை என்னால் பிடிக்க முடியாத நிலை கூட ஏற்படும்.

மைக்கேல் கிளார்க் சீரியஸான ஒரு பேட்ஸ்மென். கிரேட் பேட்ஸ்மென். நான் அவரை ஒன்றுமில்லாமல் செய்ய உத்திகளை வகுப்பேன், ஏனெனில் அவரைக் காலி செய்தால் அணியே வீழ்ந்து விடும். எப்பவுமே பெரிய வீரர்களையே குறிவைப்பேன். ஆஸ்திரேலியாவில் பாண்டிங், கிளார்க், இந்தியாவில் இப்போதைக்கு விராட் கோலி ஆகியோரை நான் குறிவைப்பேன்.

எனக்கு வயது 32 ஆனாலும் அணியில் உடல்தகுதியில் சிறப்பாக விளங்குபவன் என்றால் அது நானே. 38 வயது வரை வேகமாக வீசி ஆட முடியும் என்றே நான் எனக்கு இலக்கு நிர்ணயித்துள்ளேன், வேகப்பந்து வீச்சாளர்கள் என்றால் 33, 34 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று கூறுவதெல்லாம் நான்சென்ஸ்.

இவ்வாறு கூறினார் டேல் ஸ்டெய்ன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x