Published : 16 Mar 2016 02:38 PM
Last Updated : 16 Mar 2016 02:38 PM

மோசமான தோல்வியிலிருந்து மீண்டு வந்திருக்கிறோம்: தோனி நம்பிக்கை

நியூஸிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை டி20 போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி தழுவியதையடுத்து மீண்டு எழும் நம்பிக்கை இருப்பதாக தோனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

கடந்த 50 ஓவர் உலகக்கோப்பையிலும் சரி, இதற்கு முந்தைய தருணங்களிலும் சரி மோசமான தோல்விக்குப் பிறகு அணி மீண்டெழுந்துள்ளது. நான் எப்போதும் கூறி வருவது போல், செய்த தவறுகள் என்ன என்பதை ஆராய்ந்து அதனை மீண்டும் நிகழாது கவனமாகச் செயல்பட வேண்டும்.

பேட்ஸ்மென்கள் அவுட் ஆன விதம் கவலைக்குரியது, எளிதாக விக்கெட்டுகளைக் கொடுத்தோம். இந்தப் பிட்சில் 140 ரன்கள் சவாலானதாக இருந்திருக்கும், ஆனால் பவுலர்கள் சிறப்பாக வீசி 126 ரன்களுக்கு மட்டுப்படுத்தினர். ஒரு ஓவர் விட்டு ஓவர் விக்கெட்டுகளை இழந்தோம். டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் அவுட் ஆன பிறகே நிலைமைகள் கடினமாகின்றன.

விக்கெட்டுகள் விழும் தருணத்தில் பார்ட்னர்ஷிப்பை கட்டமைப்பது அவசியம், அப்போதுதான் 5,6,7 பேட்ஸ்மென்கள் நம்பிக்கையுடன் ஆட முடியும். சில நல்ல பந்துகள் விழுந்தாலும், எளிதாக விக்கெட்டுகளை பறிகொடுத்ததே இத்தகைய தோல்விக்கு காரணமாக அமைந்தது. பேட்ஸ்மென்கள் சரியாக தங்களை ‘அப்ளை’ செய்து கொள்ளவில்லை. விக்கெட்டுகள் விழும்போது ஒன்று, இரண்டு என்று ரன்களை எடுத்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைப்பது அவசியம் அந்த விதத்தில் பேட்டிங் ஏமாற்றமளிக்கிறது

நாக்பூர் பிட்ச் இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு வழங்குவதாகவே இருந்தது. ஸ்பின்னர்களுக்கு எதிராக இப்போதெல்லாம் நாம் மோசமாக ஆடுகிறோம் என்று நான் கருதவில்லை.

அடுத்த போட்டி வாழ்வா அல்லது சாவா என்பதெல்லாம் இல்லை. ஒவ்வொரு போட்டியுமே அப்படித்தான். ஆனால் இனி எந்த இடைவெளியில் வெற்றி பெறுகிறோம் என்பதில் கவனம் தேவையாக இருக்கும்.

நியூஸிலாந்து அணி ஸ்பின்னர்களை எடுத்திருக்கும் போது அதுவே அறிகுறிதானே என்று கேட்கிறார்கள், அப்படிப்பார்த்தால் யுவராஜ் சிங் நேற்று பந்து வீச வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஆம். நியூஸிலாந்து நன்றாக வீசினார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறினார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x