Published : 16 Dec 2021 01:11 PM
Last Updated : 16 Dec 2021 01:11 PM
புதுடெல்லி: தென் ஆப்பிரிக்கத் தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இன்று அதிகாலை மும்பையிலிருந்து தனி விமானத்தில் அந்நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றது.
தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி தொடங்குகிறது.
இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மாவுக்குப் பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால், அவர் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பிரியங்க் பஞ்சால் சேர்க்கப்பட்டுள்ளார்.
விராட் கோலியிடம் இருந்து ஒருநாள் அணி கேப்டன்ஷிப் பதவி பறிக்கப்பட்டு ரோஹித் சர்மாவிடம் வழங்கப்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே உரசல் எழுந்ததாக கடந்த சில நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விராட் கோலி நேற்று பேட்டியில் தெளிவுபடுத்தினார். தனக்கும் ரோஹித் சர்மாவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஒருநாள் தொடரில் விளையாடுவேன் என்று விராட் கோலி விளக்கம் அளித்தார்.
ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் இல்லாத நிலையில் மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் ஆட்டத்தைத் தொடங்குவார்கள் எனத் தெரிகிறது. மற்றொரு தொடக்க வீரரான பிரியங்க் பஞ்சாலுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம். மூவரும் தங்களை நிலைப்படுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பாகும்.
தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும் நிலையிலும் அங்கு இந்திய அணி பயணிக்கிறது. இந்திய அணிக்காக கடுமையான பயோ-பபுள் சூழலைத் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உருவாக்கியுள்ளது. போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை, வீரர்கள் தங்குமிடம், பயிற்சி மைதானம் ஆகியவற்றில் வெளியாட்கள் யாரும் வருவதற்குத் தடை விதித்துள்ளது தென் ஆப்பிரிக்க வாரியம்.
இந்திய அணி தனி விமானத்தில் புறப்படும் காட்சியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணிவிவரம்:
விராட் கோலி (கேப்டன்), பிரியங்க் பஞ்சால், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், சத்தேஸ்வர் புஜாரா, ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், விருதிமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜெயந்த் யாதவ், இசாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT