Published : 01 Mar 2016 10:47 PM
Last Updated : 01 Mar 2016 10:47 PM
ஆசியக் கோப்பையில் தொடர் வெற்றிகள் மூலம் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. இலங்கையை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இந்தியா.
டாஸ் வென்ற தோனி பவுலர்கள் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை, முதலில் இலங்கையை பேட் செய்ய அழைக்க அந்த அணி நல்ல பவுலிங் மற்றும் மோசமான ஷாட் தேர்வுக்கு 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஆகியோரை குலசேகராவின் ஸ்விங்குக்கு இழந்தாலும் அதன் பிறகு ரெய்னா (25), மீண்டும் விராட் கோலி (56), மற்றும் அதிரடி காட்டிய யுவராஜ் (35),ஆகியோரினால் இந்திய அணி கடைசியில் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது
முதலில் பேட் செய்த இலங்கை அணியில் சந்திமால் தொடக்கத்தில் நெஹ்ராவின் பந்துக்கு 4 ரன்களில் இரையானார். தில்ஷன் 16 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து சற்றே அச்சுறுத்தினார், ஆனால் பாண்டியா அவரை ஷார்ட் பிட்ச் பந்தில் புல் ஷாட்டை தவறாக ஆட வைக்க ஸ்கொயர் லெக்கில் அஸ்வின் கையில் பந்து கேட்ச் ஆனது. முன்னதாக ஷேஹன் ஜெயசூரியா பும்ராவின் அபாரமான பந்துக்கு தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கபுகேதரா வந்தவுடனேயே ரன் எடுக்காத போது நெஹ்ரா பந்தில் ஸ்டம்புக்கு நேராக கால்காப்பில் வாங்கினார் ஆனால் நடுவருக்கு அது அவுட்டாகத் தெரியவில்லை, ரிப்ளேயில் பார்த்த போது அது தெளிவாக அவுட் என்று தெரிந்தது. கடைசியில் கபுகேதராதான் அதிகபட்சமாக இலங்கை அணியில் 32 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் மேத்யூஸ் 3 பவுண்டரிகளுடன் அப்போதுதான் அடிக்கத் தொடங்கியிருந்தார், ஆனால் பாண்டியாவின் பந்தை கட் செய்ய முயன்று பவுல்டு ஆனார். அவர் 19 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்தார்.
சிறிவதனாவும், கபுகேதராவும் ஸ்கோரை 11-வது ஓவரில் 57/4 என்ற நிலையிலிருந்து 16.1 ஓவர்களில் 100 ரன்களுக்கு உயர்த்தினர். 17 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 22 ரன்கள் எடுத்து நன்றாக ஆடிய சிறிவதனா அஸ்வின் பந்தில் டீப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஷனகா 1 ரன்னில் ரன் அவுட் ஆக, அடுத்த ஓவரிலேயே கபுகேதரா பும்ராவிடம் வீழ்ந்தார்.
பெரேரா இறங்கி 6 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 17 ரன்கள் எடுக்க, குலசேகரா 9 ரன்கள் எடுத்தார். பெரேரா அஸ்வின் பந்தில் தோனியினால் பிரமாதமாக ஸ்டம்ப்டு செய்யப்பட்டார். குலசேகரா கோலி-தோனி சேர்க்கையில் ரன் அவுட் ஆனார். 16 ஓவர்களில் 100 ரன்களாக இருந்த இலங்கை கடைவரிசை வீரர்களின் பங்களிப்புடன் 138 ரன்களை எட்டியது.
இந்திய தரப்பில் பும்ரா, பாண்டியா, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர், நெஹ்ரா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர், இவர்கள் நால்வரும் தங்கள் பந்து வீச்சில் 4 ஓவர்களை வீசி முடிக்க மீதமுள்ள 4 ஓவர்களை ஜடேஜா, யுவராஜ், ரெய்னா பகிர்ந்து கொண்டனர், இதில் 31 ரன்கள் இலங்கைக்கு வந்தது. குறிப்பாக ஜடேஜாவுக்கு இன்று பந்துவீச்சு எடுபடவில்லை.
ரோஹித் சர்மா, தவண் சொதப்பல்:
இலக்கைத் துரத்திய இந்திய அணியில் 2-வது ஓவரின் கடைசி பந்தில் தவண் 1 ரன் எடுத்து குலசேகராவின் அவுட் ஸ்விங்கருக்கு கால் இயல்பாக, விரைவாக வராமல் மட்டையைக் கொண்டு வர எட்ஜ் ஆகி வெளியேறினார்.
ரோஹித் சர்மாவின் ஆரம்பகட்ட தடுமாற்றமான ஆஃப் ஸ்டம்புக்குக் கொஞ்சம் வெளியே குலசேகரா வீச கவரில் ஆட முயன்று எட்ஜ் செய்தார் ரோஹித், கபுகேதரா ஸ்லிப்பில் கேட்ச் பிடித்தார். ஆனால் அதற்கு முன்னதாக 3 அருமையான பவுண்டரிகளை அடித்தார் ரோஹித் சர்மா.
ஆனாலும் ஸ்விங் பந்துகளை ஆடும் போது முன்னங்காலை குறுக்காகப் போட்டு மட்டையை தொங்கவிடும் பழக்கம் அவரிடமிருந்து இன்னமும் போகவில்லை. 16/2 என்றவுடன் இலங்கை வீரர்கள் வாய்ப்பிருப்பதாக நினைத்தனர். ஆனால் விராட் கோலி இறங்கி குலசேகராவின் ஸ்விங்கை மேலேறி வந்து எதிர்கொண்டார்.
ரெய்னாவும் கொஞ்சம் பாசிட்டிவாக ஆட இருவரும் இணைந்து ஸ்கோரை 11 ஓவர்களில் 70 ரன்களுக்கு உயர்த்தினர். ரெய்னா 25 ரன்களில் ஷனகா பந்தில் ஆட்டமிழந்தார்.
கோலி அபார அரைசதம்; யுவராஜ் அதிரடி:
இம்முறை யுவராஜ் நின்று ஆட விரும்பவில்லை, வந்தவுடனேயே ரங்கனா ஹெராத்தை ஒரு லாங் ஆன் சிக்ஸும், மிட்விக்கெட் சிக்ஸும் அடித்தார். முன்னதாக ஷனகா பந்தை பாயிண்டில் பவுண்டரி பறக்கவிட்டார்.
சமீராவின் வேகத்துக்கு யுவராஜ் சிங்கின் கையும் காலும் இன்னமும் வினையாற்றத் தொடங்கவில்லை. கொஞ்சம் இவரை மட்டும் தடவினார். ஆனால் பெரேராவை ஒதுங்கிக் கொண்டு கவரில் அடித்த சிக்ஸில் பழைய யுவராஜின் சாயல் தெரிந்தது.
கடைசியில் சமீராவின் ஷார்ட் பிட்ச் பந்தையும் பைன் லெக் திசையில் பவுண்டரி அடித்து பிறகு பெரேராவை மீண்டும் லாங் ஆஃபில் பவுண்டரி அடித்து 18 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 35 ரன்கள் எடுத்தார்.
யுவராஜ் அப்போது பெரேராவின் பவுன்சரை ஆடும் போது கண்களை விலக்கிக் கொண்டு ஹூக் ஆடி பைன் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பாண்டியா 2 ரன்களில் ஹெராத் பந்தில் பவுல்டு ஆகி ஏமாற்றமளித்தார்.
கடைசியில் தோனி ஒரு பெரிய சிக்ஸரை அடித்தார், கோலி இறங்கி வந்து கவர் திசையில் பவுண்டரி விளாசி அரைசதத்தைக் கடந்ததோடு மிட்விக்கெட்டில் பவுண்டரி விளாசி வெற்றி இலக்கையும் கடந்தார். கோலி 47 பந்துகளில் 7 அருமையான பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
மேத்யூஸ், தன் அணியின் சிறந்த வீச்சாளரான சமீராவை 8-வது ஓவரிலும், அனுபவமிக்க ஹெராத்தை 11-வது ஓவரிலும் கொண்டு வந்தது கற்பனை வளமற்ற கேப்டன்சி அணுகுமுறையைக் காட்டுகிறது, ஏனெனில் சமீராவைக் கொண்டு வரும்போது இந்தியா 40 ரன்களைக் கடந்து விட்டிருந்தது, ஹெராத் வரும்போது இந்திய அணி வெற்றி இலக்கின் கிட்டத்தட்ட பாதி ரன்களில் இருந்தது.
சமீராவை, குலசேகராவுடன் வைத்து தொடங்கியிருக்க வேண்டும். அவர் ஏனோ செய்யவில்லை.
ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் ஒரு அனாயசமான இன்னிங்ஸ் கோலியினுடையது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT