Published : 15 Dec 2021 03:31 PM
Last Updated : 15 Dec 2021 03:31 PM
புதுடெல்லி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நான் விளையாடுவேன் என்றும், பிசிசிஐ அமைப்பிடம் விலக்கு ஏதும் கேட்கவில்லை என்றும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கேப்டன்ஷிப்பைப் பறித்த விவகாரத்தில் விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே லேசான உரசல், மோதல் இருப்பதாகப் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தன.
ஆனால், கோலி தலைமையில் டெஸ்ட் போட்டித் தொடரில் காயம் காரணமாக ரோஹித் சர்மா விலகியதும், ரோஹித் சர்மா தலைமையில் ஒருநாள் தொடரில், மகளின் பிறந்த நாளைக் காரணம் காட்டி கோலி, விலக்கு கேட்பதும் பல்வேறு சந்தேகங்களை கிரிக்கெட் ஆர்வலர்கள், ரசிகர்களிடையே எழுப்பியது.
இந்நிலையில் இந்தத் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ரோஹித் சர்மாவுடன் மோதல் தொடர்பாகத் தகவல் வெளியாவது குறித்துக் கேட்கப்பட்டது.
அதற்கு கோலி பதில் அளித்துப் பேசுகையில், ''பலமுறை நான் கூறிவிட்டேன். எனக்கும், ரோஹித் சர்மாவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. நேர்மையாகச் சொல்கிறேன், கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தப் பிரச்சினை குறித்து தொடர்ந்து விளக்கம் கொடுத்து வருகிறேன். இப்படி விளக்கம் அளித்து வருவது எனக்குச் சோர்வாக இருக்கிறது.
ஒவ்வொரு நேரமும இப்படித்தான் ஏதாவது பேச்சு வருகிறது. ஒன்று மட்டும் உங்களிடம் உறுதியளிக்கிறேன். நான் கிரிக்கெட் விளையாடும்வரை, என்னுடைய செயல்பாடு, பேச்சு ஒருபோதும் அணியின் நலனுக்கும், அணியின் தரத்தைக் குறைக்கும் விதத்திலும் இருக்காது. என்னுடைய நோக்கம், கடமை என்பது இந்தியக் கிரிக்கெட்டுக்காக விளையாடுவதுதான்'' எனத் தெரிவித்தார்.
டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா இல்லாதது குறித்து விராட் கோலி கூறுகையில், “ ரோஹித் சர்மா தென் ஆப்பிரிக்கத் தொடரில் இல்லாததால் அவரின் அனுபவமான ஆட்டத்தை இழக்கிறோம். ஆனால், அவர் இல்லாத நிலையில் அந்த இடத்தை இளம் வீரருக்கு வழங்குவோம்.
வெளியே என்னைப் பற்றிப் பல சர்ச்சைகள் ஓடுகின்றன, ஆனால்,எதுவும் என்னைப் பாதையிலிருந்து மாற்றாது. அணிக்காகத் தயாராவதிலிருந்து சீர்குலைக்காது. வெளியே நடக்கும் பல விஷயங்கள் சரியானவை அல்ல. தென் ஆப்பிரிக்காவில் வெல்ல வேண்டும் என விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் விளையாடுவீர்களா எனக் கேட்கப்பட்டது. அதற்கு கோலி பதில் அளிக்கையில், “அனைத்து நேரங்களிலும் நான் தயாராகவே இருக்கிறேன், இருந்தேன். இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டிருக்கக் கூடாது. இப்படி எழுதியவர்களிடம் எந்த அடிப்படையில் எழுதினார்கள் எனக் கேளுங்கள். என்னைப் பொறுத்தவரை ஒருநாள் தொடரில் விளையாடுவேன். எனக்கு ஓய்வு தேவை என்று பிசிசிஐ அமைப்பிடம் ஏதும் கேட்கவில்லை. நான் ஒருநாள் தொடரில் விளையாடுவேன்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT