Last Updated : 15 Dec, 2021 02:05 PM

 

Published : 15 Dec 2021 02:05 PM
Last Updated : 15 Dec 2021 02:05 PM

விளையாட்டை விட உயர்ந்தவர் யாருமில்லை: கோலி-ரோஹித் மோதல் குறித்து மத்திய அமைச்சர் கருத்து

விராட் கோலி, ரோஹித் சர்மா | கோப்புப்படம்

புதுடெல்லி: விராட் கோலி, ரோஹித் சர்மா மோதல் குறித்து கருத்து தெரிவித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், “விளையாட்டை விட உயர்ந்தவர் யாருமில்லை” எனத் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு வரும் 17-ம் தேதி புறப்படும் இந்திய அணி அங்கு சென்று 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக விராட் கோலி தொடர்கிறார். ஆனால், ஒருநாள் தொடருக்கு கேப்டனாக கோலி நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.

மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, தொடைப் பகுதியில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகுவதாக பிசிசிஐ நேற்று முறைப்படி அறிவித்தது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அமைப்பிடம் விராட் கோலி கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியானது.

கேப்டன்ஷிப்பைப் பறித்த விவகாரத்தில் விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே லேசான உரசல், மோதல் இருப்பதாகப் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தன.

ஆனால், கோலி தலைமையில் டெஸ்ட் போட்டித் தொடரில் காயம் காரணாக ரோஹித் சர்மா விலகியதும், ரோஹித் சர்மா தலைமையில் ஒருநாள் தொடரில், மகளின் பிறந்த நாளைக் காரணம் காட்டி கோலி, விலக்கு கேட்பதும் பல்வேறு சந்தேகங்களை கிரிக்கெட் ஆர்வலர்கள், ரசிகர்களிடையே எழுப்புகிறது.

முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் ட்விட்டரில் சந்தேகப்பட்டு கருத்து பதிவிட்டிருந்தார். அதில், “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க முடியாததை கோலி தெரிவித்துள்ளார். டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விளையாட முடியாததை ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

கோலி ஓய்வு எடுப்பதில் எந்த பாதிப்பும் இல்லை, ஆனால், அதற்கான சரியான நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். இருவருக்கும் இடையிலான பிளவு குறித்த ஊகங்களை இந்தச் செயல் உறுதி செய்கிறது. இருவருமே டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டை விட்டுக்கொடுக்காதவர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா இடையே மறைமுகமான மோதல் உருவாகியிருப்பது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், “விளையாட்டுதான் உயர்ந்தது. விளையாட்டை விட கிரிக்கெட்டை விட உயர்ந்தவர் யாருமில்லை. எந்தெந்த வீரர்களுக்கு இடையே என்ன மாதிரியான பிரச்சினை எந்த விளையாட்டில் இருக்கிறது என்பது குறித்து என்னால் விளக்க முடியாது. கூட்டணியாகச் செய்யும் பணி. அவர்கள் தங்களுக்குரிய பிரச்சினை பற்றி தகவல் அளித்தால் நல்லது” என அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

இதற்கிடையே முன்னாள் இந்திய வீரரான கீர்த்தி ஆசாத் அளித்த பேட்டியில், “ ரோஹித் சர்மா தலைமையில் கோலி விளையாட மறுப்பதும், கோலி தலைமையில் ரோஹித் சர்மா விளையாட மறுப்பதும் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. இந்திய அணி வெளிநாட்டில் மிகவும் பாதிக்கப்படும். பெரிய சரிவைச் சந்திக்கும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x