Published : 14 Dec 2021 04:32 PM
Last Updated : 14 Dec 2021 04:32 PM
புதுடெல்லி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது தனக்கு விலக்கு தேவை என்று விராட் கோலி பிசிசிஐ அமைப்பிடம் கேட்டுள்ளதாகச் செய்தி வெளியான நிலையில் அதுகுறித்து பிசிசிஐ அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு வரும் 17-ம் தேதி புறப்படும் இந்திய அணி அங்கு சென்று 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக விராட் கோலி தொடர்கிறார். ஆனால், ஒருநாள் தொடருக்கு கேப்டனாக கோலி நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.
மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, தொடைப் பகுதியில் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகுவதாக பிசிசிஐ நேற்று முறைப்படி அறிவித்தது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அமைப்பிடம் விராட் கோலி கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய மகளின் முதல் பிறந்த நாள் வருவதால் அப்போது குடும்பத்தாருடன் இருக்க வேண்டும் என்பதால், இந்த விலக்கை கோலி கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விராட் கோலி ஒருநாள் தொடரிலிருந்து பிசிசிஐயிடம் அதிகாரபூர்வமாக விலக்கு கேட்டுள்ளாரா என்பது குறித்து பிசிசிஐ அதிகாரியிடம் செய்தி நிறுவனம் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி கூறுகையில், “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விலக்கு கேட்டு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷாவிடம் விராட் கோலி சார்பில் இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வமான கோரிக்கையும் வரவில்லை. ஒருவேளை இதன்பின் ஏதாவது முடிவு எடுக்கப்பட்டாலோ அல்லது காயம் காரணமாக கோலி விளையாட முடியாமல் போனாலோ என்பது வேறு விஷயம்.
ஆனால், இன்றைய தேதியில் விராட் கோலியிடம் இருந்து முறைப்படி எந்தவிதமான கோரிக்கையும் பிசிசிஐக்கு வரவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி விளையாடுவது இன்றுவரை உறுதி.
பயோ-பபுள் கட்டுப்பாடு இருப்பதால், அனைத்து வீரர்களின் குடும்பத்தாரும் தென் ஆப்பிரிக்காவுக்குத் தனி விமானத்தில் செல்ல உள்ளனர். விராட் கோலியும் குடும்பத்துடன் செல்கிறார். ஒருவேளை டெஸ்ட் தொடர் முடிந்தபின் பயோ-பபுள் அழுத்தம் இருப்பதாக கோலி உணர்ந்தால், அவர் விலக்கு பெறலாம். அதற்கு முறைப்படி பிசிசிஐ தலைவர், செயலாளரிடம் பேசி கோலி விலக்கு பெறலாம்” எனத் தெரிவித்தார்.
விராட் கோலி தனது மகள் வாமிகாவின் பிறந்த நாள் 2022, ஜனவரி 11-ம் தேதி வருவதால் அன்று குடும்பத்துடன் செலவழிக்கவே ஒருநாள் தொடரிலிருந்து விலக்கு கோரியுள்ளதாக செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. ஆனால், அன்றைய தேதியில் விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்பதால், விலக்கு கேட்பாரா என்பது தெரியவில்லை. மேலும், ஒருநாள் தொடர் ஜனவரி 19-ம் தேதிதான் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து கோலி விலக்கு பெறும் சம்பவம் ஏதும் நடந்தால், அடுத்ததாக இந்தியாவில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் கோலி விளையாடுவாரா என்பது சந்தேகம்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT