Last Updated : 14 Dec, 2021 07:25 AM

 

Published : 14 Dec 2021 07:25 AM
Last Updated : 14 Dec 2021 07:25 AM

டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா நீக்கம்: இளம் வீரர் சேர்ப்பு; அஸ்வின் துணைக் கேப்டன்?

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா | கோப்புப்படம்

புதுடெல்லி


இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்தே விலகியுள்ளார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் ரோஹித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ராகேந்திர ரகு வீசிய பந்தை பிடிக்க முயன்றபோது கையில் காயம் ஏற்பட்டது, அதுமட்டுமல்லாமல் கடந்த காலங்களில் இடது தொடையில் ஏற்பட்ட தசைப்படிப்பும் திடீரென வந்துள்ளதால், அவருக்கு ஓய்வு தேவை என்பதால் நீக்கப்பட்டுள்ளார்.

ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, அவருக்கு மாற்றாக இந்திய ஏ அணியின் கேப்டன் பிரியங்க் பஞ்ச்சல் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், காயம் காரணமாக அவர் தென் ஆப்பிரிக்கா செல்லமுடியாததால் துணைக் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஹானே துணைக் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அவருக்கு வழங்கப்படாது, ஆதலால், கே.எல்ராகுல், அல்லது ரவிசந்திர அஸ்வினுக்கு வழங்கப்படலாம்.

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்றுவரும் ஒரே சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் மட்டும்தான். கேப்டன் பொறுப்பேற்று ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார் என்பதாலும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்று அதிக அனுபவம் உடையவர், தென் ஆப்பிரிக்காவுக்கு பலமுறை பயணித்தவர், சீனியர் வீரர் என்ற அடிப்படையில் அஸ்வினுக்கு வழங்கப்படலாம்.

அதேநேரம் இளம் வீரரை வளர்க்க வேண்டும் என்ற முடிவெடுத்தால் கேஎல் ராகுல் அல்லது ரிஷப்பந்த் இருவரில் ஒருவருக்கு பதவி வழங்கப்படலாம்.

பிரியங்க் பஞ்ச்சல்

இதுகுறித்து பிசிசிஐ அமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில் “ ரோஹித் சர்மா பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ராகவேந்திரா எறிந்த பந்தை பிடிக்க முயன்றபோது கையில் காயம் ஏற்பட்டது இதனால் அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் கடந்த காலங்களில் ஏற்பட்ட இடதுதொடையில் தசைப்பிடிப்பில் வலியும் ரோஹித்துக்கு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டால் குணமாக 4வாரங்களாகும். ரோஹித்துக்கு ஏற்பட்டுள்ளது தசைப்பிடிப்பா, அல்லது தசைநார் கிழிவா என்பது சிகிச்சையில்தான் தெரியும். எங்களுக்குத் தெரிந்தவகையில் ரோஹித்சர்மாவுக்கு ஏற்பட்டகாயம் பெரிதாக இருக்காது என நம்புகிறோம். பிசிசிஐ மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தபின்புதான் முழுமையாகத் தெ ரியவரும்.

ரோஹித் சர்மா விலகியதையடுத்து, தொடக்க வீரராக கேஎல் ராகுலுடன், மயங்க் அகர்வால் களமிறங்கவே அதிகமாக வாய்ப்புள்ளது. ப்ரியங்க் பஞ்ச்சாலும் சிறந்த வீரர்தான் ஆனால், வாய்ப்புக் குறித்து கேப்டன் முடிவெடுப்பார். பிரியங்க் பஞ்ச்சால் அணியில் விரைவில் இணைவார். தென் ஆப்பிரிக்காவுக்கு சமீபத்தில் பயணம் செய்திருந்த பஞ்ச்சால் சிறப்பாக விளையாடினார்” எனத் தெரிவித்தார்.

பிரியங்க் பஞ்ச்சால் 100முதல் தரப் போட்டிகளில் விளையாடி 24 சதங்கள் உள்பட 7011 ரன்கள் குவித்துள்ளார். குஜராத் அணியின் வெற்றிகரமான கேப்டன் என்று பெயரெடுத்த பிரியங்க் பஞ்ச்சால் தலைமையில் ரஞ்சிக் கோப்பையையும் வென்றுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x