Published : 13 Dec 2021 04:21 PM
Last Updated : 13 Dec 2021 04:21 PM

விராட் கோலியின் தலைமையின் கீழ் விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தேன்: ரோஹித் சர்மா புகழாரம்

இந்தியஅணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட்கோலி |படம் உதவி ட்விட்டர்

புதுடெல்லி

விராட் கோலியின் தலைமையின் கீழ் விளையாடிய ஒவ்வொரு போட்டியையும், தருணத்தையும் ரசித்து விளையாடினேன் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். இதையடுத்து, புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். ஆனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் கோலி கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா திடீரென கேப்டனாக அறிவிக்கப்பட்டு, கோலி நீக்கப்பட்டார்.

கோலியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது குறித்து அவரின் ரசிகர்களும், முன்னாள் வீரர்கள் பலரும் ஆதங்கம் அடைந்து பல கருத்துக்களையும், விமர்சனங்களையும் வைத்துள்ளனர். இதற்கு பிசிசிஐ தரப்பிலும், அதன் தலைவர் கங்குலியும் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் பிசிசிஐ இணையதள தொலைக்காட்சிக்கு கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி அளித்தார். அவரிடம் கோலியின் கேப்டன்ஷியில் விளையாடிய தருணத்தை எவ்வாறு உணர்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ரோஹித் சர்மா அளித்த பதிலில் “ 5 ஆண்டுகள் விராட் கோலி அணியை வழிநடத்திய அந்த நாட்கள் சிறந்த தருணங்கள். ஒவ்வொருமுறையும் களத்துக்குள் களமிறங்கும் போதும், சரியான தீர்மானத்துடன், தீர்க்கமான முடிவுடன், வெற்றி பெற வேண்டும் என்ற திடமான மனதுடன் களமிறங்க வைப்பார். வீரர்களுக்கு தெளிவான, சரியான தகவல் கோலியிடம் இருந்து வரும்.

கோலியின் தலைமையில் கீழ் விளையாடிய போட்டிகள் மிகப்பெரிய தருணங்கள். அவருக்கு கீழ் பல போட்டிகளை விளையாடி இருக்கிறேன். ஒவ்வொரு போட்டியையும், தருணத்தையும் ரசித்து, அனுபவித்து விளையாடியிருக்கிறேன்.

தொடர்ந்து அவரின் கீழ் விளையாடவே விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
கடந்த 2013-ம் ஆண்டுக்குப்பின் ஐசிசி சார்பில் நடந்த எந்த போட்டியிலும் இந்தியஅணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. அதைக் களைய என்ன திட்டம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ரோஹித் சர்மா அளித்த பதிலில் “ அந்த சவால்களை நானும் அறிவேன். நாங்கள் தோல்வி அடைந்த ஒவ்வொரு போட்டியிலும் கூடுதலாக முயற்சி செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்.

போட்டியின் முடிவைப் பற்றி சிந்திக்கும்முன், ஏராளமான விஷயங்களைச் சரியாகச் செய்வது அவசியம். கடந்த 2013-ம் ஆண்டுக்கு்பபின் ஐசிசி தொடர்களில் பட்டம் வெல்லவில்லை என்பது தெரியும்.

ஆனால் என்னைப் பொறுத்தவரை சாம்பியன்ஸ் டிராபிக்குப்பின் நடந்த ஐசிசி தொடர்களில் கூட எந்த தவறும் செய்ததாக நான்பார்க்கவில்லை. சிறப்பாகவே விளையாடினோம், அணியாக கூட்டுழைப்பை சரியாகத்தான் கொடுத்தோம். ஆனால், தோல்வி அடைந்த போட்டிகளில் கூடுதலாக உழைப்பை அளித்திருக்க வேண்டும்.

சர்வதேச போட்டியில் சாம்பியன்ஷிப் என்பது அவசியமானது. ஆனால், சவால்களும் அதிகமிருக்கும். சர்வதேச அளவில் சாம்பியன்பட்டம் வெல்ல பலவிஷயங்களை, செயல்களைச் சரியாகச் செய்ய வேண்டும். அடுத்து ஏராளமான உலகக் கோப்பைத் தொடர்கள் வருகின்றன. இந்தியா சிறப்பாக விளையாட ஆர்வமாக இருக்கிறது. எங்களின் நோக்கம் சாம்பியன்ஷிப் வெல்வதாகத்தான் இருக்கும். அதற்கான முயற்சியில் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுடன் இணைந்து பணியாற்றுவது எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ரோஹித் சர்மா அளித்த பதிலில் “ ராகுல் திராவிட்டுடன் நியூஸிலாந்து தொடரில் பணியாற்றிய அனுபவம் அற்புதமானது. திராவிட் எப்படிப்பட்ட கிரிக்கெட்டை விளையாடியவர் என்பது எங்களுக்குத் தெரியும். கடினமான, சவாலான காலங்களில் திராவிட் விளையாடியவர். அணி வீரர்களிடம் சகஜமாகப் பழகுகிறார், அணியில் உள்ளசூழல் இலகுவாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x