Published : 13 Dec 2021 03:03 PM
Last Updated : 13 Dec 2021 03:03 PM
அடிலெய்டில் வரும் வியாழக்கிழமை தொடங்கும் ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட்டுக்கு இங்கிலாந்து அணியின் அனுபவம் மிகுந்த வேகப்பந்துவீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆன்டர்ஸன், ஸ்டூவர்ட் பிராட் இருவரும் உடற்தகுதி பெற்றுத் தயாராகிவிட்டனர்.
அடிலெய்டில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டி என்பதால், இரு அணிகளும் மோதுவதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.
இங்கிலாந்து அணிக்கு பிராட், ஆன்டர்ஸன் வருகை பலம் அளிக்கும் அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் காயத்தால் விலகியுள்ளார். டேவிட் வார்னரும் காயத்தால் விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வார்னர் அணியில் நீடிப்பது குறித்து கடைசி நேரத்தில்தான் ஆஸி. அறிவிக்கும்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஆஸ்திரேலியாவில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இதுவரை ஆஸ்திரேலிய அணி தோற்றதில்லை. ஆனால், வார்னர், ஹேசல்வுட் இல்லாமல் இருந்தாலே அந்த அணிக்குப் பின்னடைவுதான். அதிலும் கூக்கபுரா பந்தில் ஹேசல்வுட் பகலிரவு டெஸ்ட் போட்டியில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் இல்லாதது ஆஸி. அணிக்குப் பின்னடைவுதான்.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறைதான் ஃபார்முக்கு வருகிறார். அவரை நம்பி தொடக்க வரிசை வலுவாக இல்லை, வார்னரை நம்பியே இருக்கிறது. டேவிட் வார்னரும் இல்லாவிட்டால், தொடக்க வரிசை பெரிய கேள்விக்குறியாகும்.
ஆனால், இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆன்டர்ஸன், ஸ்டூவர்ட் இருவரின் வருகை அந்த அணிக்குப் பந்துவீச்சை பலப்படுத்தும். கடந்த 2017-18ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்தது. அதுபோல் இந்த முறை நடக்காமல் கவனமாக இருக்கும் வகையில் கேப்டன் ரூட் திட்டம் இருக்கும்.
ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக ஆடிய 11 டெஸ்ட் போட்டிகளில் 10 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி மண்ணைக் கவ்வியுள்ளது. ஆதலால், 2-வது டெஸ்ட்டில் வெற்றிக்குக் கடுமையாக முயலும். கூக்கபுரா பந்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்துவீச்சும் அளவுக்கு இங்கிலாந்து அணியிலும் ஸ்விங் பந்துவீச்சில் ஆன்டர்ஸன், பிராட், மார்க்வுட் போன்ற வீரர்களும் இருப்பதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.
இங்கிலாந்து தலைமைப் பயிற்சியாளர் சில்வர் வுட் கூறுகையில், “ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர். அடிலெய்டு டெஸ்ட்டில் இருவரும் விளையாடுவார்கள். அவர்கள் தற்போது பிங்க் பந்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருவருமே திறமையான பந்துவீச்சாளர்கள் என்பது தெரியும். ஸ்டூவர்ட் பிராட் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியவில்லை என்பது குறித்து வேதனை தெரிவித்தார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT