Published : 10 Dec 2021 03:41 PM
Last Updated : 10 Dec 2021 03:41 PM

நடக்கும் என எதிர்பார்த்ததுதான்: கோலியின் கேப்டன் பதவி பறிப்பு குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து

விராட் கோலி | படம் உதவி ட்விட்டர்

புதுடெல்லி


இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்தும் விராட் கோலி நீக்கப்படுவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான், அது நடந்துவிட்டது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக பேட்டிஅளித்த விராட் கோலி, உலகக் கோப்பை முடிந்தபின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து இந்திய டி20 அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், தென் ஆப்பிரி்ககத் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டபோது, டெஸ்ட் அணிக்கு கோலியும், ஒருநாள் அணிக்கு ரோஹித்சர்மாவும் கேப்டனாக நியமித்த தேர்வுக்குழுவினர் அறிவித்தனர்.

கோலியின் கேப்டன் பதவி பறிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அதேநேரம் சிறந்த கேப்டனாக,வீரராக கோலி இருந்தாலும், அவரின் செயல்பாடுகள், ஐசிசி நடத்தும் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லாதது போன்ற விமர்சனங்கள் அவரை நீக்க உந்துதலை பிசிசிஐக்கு ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

விராட் கோலி டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தவுடனே, அவரின் ஒருநாள் கேப்டன் பதவியும் சேர்ந்து விரைவில் பறிபோகும் என எனக்குத் தெரியும். கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது எதிர்பார்த்ததுதான் அது நடந்துவிட்டது. ஏற்கெனவே இதுபற்றி பேசியிருக்கிறோம்.

ஒருநாள், டெஸ்ட் அணியை வழிநடத்த கோலி விருப்பமாக இருந்தாலும், ஒயிட்பால் ஃபார்மெட்டுக்கு இரு கேப்டன்களை வைத்துக்கொள்ள பிசிசிஐக்கு விருப்பமில்லை. வெள்ளைப்பந்து, சிவப்பு பந்து கிரிக்கெட்டை பிசிசிஐ வேறுபடுத்தி வைத்திருக்கிறது. அதிலும் டி20,ஒருநாள் போட்டிக்கு தனித்தனி கேப்டன் என்ற முறையை வைத்திருக்க பிசிசிஐ விரும்பவில்லை. டி20 போட்டிக்கு அணியை யார் வழிநடத்துகிறார்களோ அவரே ஒருநாள்அணியையும் வழிநடத்துவார்.

உலகளவில் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக இருப்பவர் ஒருநாள் அணிக்கும் கேப்டனாக இருப்பார், டி20க்கு தனியாக ஒரு கேப்டன் இருப்பார் என்று எங்குமே இல்லை. ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருப்பவர்தான் டி20 அணிக்கும் கேப்டனாக இருக்க முடியும். டெஸ்ட் போட்டி கேப்டன், டி20 கேப்டனாக இருப்பார், ஆனால் ஒருநாள் அணிக்கு கேப்டனாக இருக்கமாட்டார் என்ற முறையும் உலகில் எங்குமில்லை.

ரோஹித் சர்மா தனக்கு கொடுத்த முதல் பணியை சிறப்பாக முடித்துள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 எனக் கைப்பற்றியுள்ளது. அந்தத் தொடரில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆக ரோஹித் சர்மா சரியான பாதையில் செல்கிறார். அதிர்ஷ்டமான கேப்டனாக ரோஹித் இருக்கிறார்
இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x