Last Updated : 06 Dec, 2021 04:57 PM

1  

Published : 06 Dec 2021 04:57 PM
Last Updated : 06 Dec 2021 04:57 PM

14 விக்கெட்டுகளை வீழ்த்திய அஜாஸ் படேலுக்கு மும்பை கிரிக்கெட் அமைப்பு பாராட்டு: இந்திய வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்ஸி பரிசு

இந்திய வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்ஸியை அஜாஸ் படேலுக்கு வழங்கிய அஸ்வின் | படம் உதவி: ட்விட்டர்.

மும்பை

மும்பையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 14 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூஸிலாந்து சுழற்பந்துவீச்சாளரும், மும்பையைப் பூர்வீகமாகக் கொண்டவருமான அஜாஸ் படேலுக்கு மும்பை கிரிக்கெட் அமைப்பு சார்பில் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.

மேலும், இந்திய அணி வீரர்கள் அனைவரும் கையொப்பமிட்ட ஜெர்ஸியும் அஜாஸ் படேலுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

மும்பையில் நடந்த இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அஜாஸ் படேல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தார். 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய மைல்கல்லையும் எட்டினார்.

இதுவரை ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே, ஜிம் லேக்கர் இருவர் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அந்த வரிசையில் அஜாஸ் படேலும் இணைந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 14 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையையும் 41 ஆண்டுகளாக இங்கிலாந்து முன்னாள் வீரர் இயான் போத்தம் நிகழ்த்திய சாதனையையும் அஜாஸ் படேல் முறியடித்தார்.

ஒரு டெஸ்ட் போட்டியில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வகையில் 1980-ம் ஆண்டில் இங்கிலாந்து வீரர் இயான் போத்தம் இந்திய அணிக்கு எதிராக 106 ரன்களுக்கு 13 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை அஜாஸ் படேல் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி முறியடித்துள்ளார்.

இந்தப் போட்டியில் சாதனை படைத்தமைக்காக அஜாஸ் படேல் தன்னுடைய ஜெர்ஸியையும், தான் பந்துவீசிய பந்தையும் மும்பை கிரிக்கெட் அமைப்பு சார்பில் உருவாக்கப்பட உள்ள அருங்காட்சியகத்துக்காக வழங்கினார். அவருக்குப் பாராட்டுப் பத்திரத்தை மும்பை கிரிக்கெட் அமைப்பு பரிசாக வழங்கியது.

அதுமட்டுமல்லாமல் இந்திய அணி சார்பில் வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்ஸியையும் அஜாஸ் படேலுக்கு இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வழங்கினார்.

அஜாஸ் படேல் நிருபர்களிடம் கூறுகையில், “மீண்டும் மும்பைக்கு நான் வந்ததும், இங்கு வந்து சாதனை நிகழ்த்தியதும் எனக்கு உண்மையில் சிறப்பான அனுபவம். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கும், சாதிக்க ஆசிகள் வழங்கிய இறைவனுக்கும் நன்றி'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x