Published : 06 Dec 2021 03:22 PM
Last Updated : 06 Dec 2021 03:22 PM
அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்கலாம். அப்போது, வீரர்களுடன் தெளிவான தகவல்தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் என்று இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்தார்.
தொடக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் ஓய்வு அளிக்கப்பட்டது. கேப்டன் கோலி முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை, 2-வது டெஸ்ட்டில் விளையாடினார். புஜாரா, ரஹானே இருவரும் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாலும் பெரிதாக ரன் ஸ்கோர் செய்யவில்லை. பேட்டிங்கிலும் ஃபார்மில் இல்லை. இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருவரும் நீக்கப்படலாம் என்பதை திராவிட் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு சதம், அக்ஸர் படேல் பந்துவீச்சு பேட்டிங்கிலும் தன்னை நிரூபித்தது, ஜெயந்த் யாதவின் பந்துவீச்சு, மயங்க் அகர்வால் மீண்டும் ஃபார்முக்கு வந்தது போன்ற இளம் வீரர்களின் செயல்பாடு அதிகமாக அணி நிர்வாகத்தை ஈர்த்துள்ளது. அணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல திராவிட் தலைமையில் இளம் வீரர்களுக்கு அதிகமான முன்னுரிமை வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
பயிற்சியாளர் ராகுல் திராவிட் அளித்த பேட்டியில் கூறியதாவது:
''எங்களுக்குத் தேர்வுக் குழுவில் “நல்ல தலைவலி” காத்திருக்கிறது. யாரை அணியில் தக்கவைப்பது, நீக்குவது என்ற கடினமான முடிவு எடுக்க வேண்டியிருக்கிறது. இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். சிறப்பாகச் செயல்பட வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்காக ஒவ்வொருவருக்குள்ளும் போட்டி நடக்கிறது.
ஆதலால், அணித் தேர்வு என்றாலே எங்களுக்கு நல்ல தலைவலி காத்திருக்கிறது. அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல அணி நிர்வாகம் சில கடினமான முடிவுகளை எடுக்கலாம். ஏன் அணியில் இருந்து நீக்கப்படுகிறீர்கள் என்பது குறித்த தெளிவான தகவல் தொடர்பு எங்களிடம் இருக்கும். அதை வீரர்களிடமும் விளக்குவோம் என்பதால், இதைப் பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது.
இந்த டெஸ்ட் தொடர் ஒருதரப்பாக முடிந்துவிட்டது என்று பார்க்கக் கூடாது, இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது எனச் சொல்லவும் கூடாது. தொடரை வெல்ல வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்ட இந்திய வீரர்கள் ஆட்டத்தைச் சிறப்பாக முடித்துள்ளார்கள். கான்பூரில் வெற்றிக்கு அருகே வந்தும் வெற்றி கிடைக்கவில்லை. கடைசி விக்கெட்டை எங்களால் எடுக்க முடியவில்லை. அதையெல்லாம் மனதில் வைத்து மும்பை டெஸ்ட்டில் கடினமாக உழைத்தோம்.
இந்தத் தொடரின் முடிவுகள் ஒருதரப்பாக இருந்தது என்று கூறலாம். ஆனால், இந்தத் தொடர் முழுவதும் நாங்கள் கடினமாக உழைத்தோம். எந்த இடத்தில் பின்தங்கினோம் என்று ஆய்வு செய்து அங்கு சரி செய்தோம். இந்த வெற்றிக்கு முழுக் காரணம் அணிதான்.
இளம் வீரர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சில மூத்த வீரர்கள் அணியில் இல்லைதான். ஆனால், கடினமான சூழலிலும் சிறப்பாக சில வீரர்கள் செயல்பட்டார்கள். குறிப்பாக ஜெயந்த் யாதவுக்கு நேற்று கடினமான நாளாக இருந்தது. ஆனால், கற்றுக்கொண்டு இன்று சிறப்பாகச் செயல்பட்டார்.
மயங்க், ஸ்ரேயாஸ், சிராஜ் மூவருக்கும் அதிகமான வாய்ப்பு கிடைக்கவில்லை. அக்ஸர் படேல் பந்துவீச்சு, பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட முடியும் என நிரூபித்துள்ளார். அக்ஸர் பந்துவீச்சு, பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படுவது அவரை எந்த இடத்திலும் பயன்படுத்தலாம் என்ற வாய்ப்பை வழங்கியுள்ளது.
எங்களுக்கு அதிகமான நேரம் இருந்ததால்தான் ஃபாலோ ஆன் வழங்கவில்லை. இளம் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அவர்கள் பேட் செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால்தான் ஃபாலோ ஆன் எடுக்கவில்லை. எதிர்காலத் தொடர்களுக்காக வீரர்கள் மனதையும், உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பது அவசியம்''.
இவ்வாறு திராவிட் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT