Published : 04 Dec 2021 10:41 AM
Last Updated : 04 Dec 2021 10:41 AM

ஒமைக்ரானை ஒதுக்கி வை; தென் ஆப்பிரிக்கப் பயணத்துக்குத் தயாராகிறது இந்திய அணி: பிசிசிஐ அனுமதிக்க முடிவு

கோப்புப்படம்

மும்பை

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் இருந்தாலும், இந்திய கிரிக்கெட் அணியை அந்நாட்டுக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் இன்று மும்பையில் நடக்கும் நிலையில் இதற்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி ஜோஹன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

ஆனால், தென் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் அங்கு இந்திய அணி செல்ல அனுமதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. 7 வாரங்கள் இந்திய வீரர்கள் தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் நிலையில் அவர்களுக்குக் கடும் பாதுகாப்புடன் கூடிய பயோ-பபுள் சூழல் உருவாக்கப்படும் என்று தென் ஆப்பிரிக்க வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய அணி தென் ஆப்பிரிக்கப் பயணம் செல்வது உறுதிதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. வீரர்களுக்கு அங்கு கடுமையான பயோ-பபுள் சூழல் உருவாக்கித் தரப்படும். பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தில் தென் ஆப்பிரிக்கப் பயணத்துக்கு அனுமதி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

நியூஸிலாந்துடன் மும்பையில் நடந்துவரும் 2-வது டெஸ்ட் போட்டி முடிந்தபின், 8 அல்லது 9-ம் தேதி இந்திய அணி தென் ஆப்பிரிக்கா புறப்படும் எனத் தெரிகிறது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் அனைத்திலும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது எனத் தெரிகிறது.

பிசிசிஐ சார்பில் மற்றொரு அதிகாரி கூறுகையில், “தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இந்திய அணியினருக்காக உருவாக்கியுள்ள பயோ-பபுள் பாதுகாப்பானது என எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல வேண்டாம் என இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. விமானத்தில் ஏறியது முதல் இந்திய அணி பயோ-பபுள் சூழலுக்குள் செல்லும். ஒருவேளை ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், இந்திய அணி அங்கு சென்று ஹோட்டலில் தனிமையில் இருந்து அதன்பின் பயோ-பபுளுக்குள் செல்லும்” எனத் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்கத் தொடருக்கு துணை கேப்டனாக ரஹானேவுக்கு பதிலாக வேறு வீரர் யாரேனும் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ரஹானே மோசமான ஃபார்மில் இருப்பதால் அவர் அணியிலிருந்து நீக்கப்படலாம்.

தென் ஆப்பிரிக்கத் தொடருக்கு கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், மயங்க் அகர்வால் ஆகியோரின் இடம் உறுதியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x