Published : 03 Dec 2021 05:05 PM
Last Updated : 03 Dec 2021 05:05 PM
தென் ஆப்பிரிக்காவில் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்நாட்டுப் பயணத்துக்கு இந்திய அணி செல்லுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து நாளை நடக்கும் பிசிசிஐ ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவாகும்.
தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணம் செல்லும் இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 3 டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி நடக்கிறது. இந்தப் பயணத்துக்காக மும்பையில் நடந்துவரும் நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டி முடிந்தபின், இந்திய அணி 9-ம் தேதி புறப்பட முடிவு செய்துள்ளது.
ஆனால், இந்திய அணி தென் ஆப்பிரிக்கா புறப்படும் முன், பிசிசிஐ மத்திய அரசிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும். அந்நாட்டின் சூழலைப் பொறுத்து மத்திய அரசு அனுமதித்தால் மட்டுமே செல்ல முடியும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாளை நடக்கும் பிசிசிஐ பொதுக்குழுக் கூட்டத்தில் இந்தியா-தென் ஆப்பிரிக்கத் தொடர் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். இது தவிர 24 அம்சங்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன.
இந்திய அணியின் எதிர்காலப் பயணங்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்துப் பேசப்படும்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அடைந்த மோசமான தோல்வி குறித்தும் ஆலோசிக்கப்படும். 2022-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை போட்டி நடக்க உள்ளது. அதற்கு இந்திய அணியை எவ்வாறு தயார் செய்வது, 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டி ஆகியவை குறித்தும் பேசப்படும்.
இந்திய அணிக்கு வந்துள்ள புதிய பயிற்சியாளர் ராகுல் திராவிட் பணி, தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு இயக்குநராக நியமிக்கப்பட உள்ள விவிஎஸ் லட்சுமண் பணி ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்படலாம்.
2022-ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஏற்கெனவே 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்துவிட்டன. இன்னும் அகமதாபாத், லக்னோ அணிகள் மட்டும் அறிவிக்கவில்லை. அந்த இரு அணிகளும் அறிவித்தபின், ஐபிஎல் மெகா ஏலம் எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT