Published : 25 Mar 2016 04:54 PM
Last Updated : 25 Mar 2016 04:54 PM
மொஹாலியில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இதனையடுத்து அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது பாகிஸ்தான்.
இதனால் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டியின் விறுவிறுப்பு கூடியுள்ளது.
195 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் விரட்டலின் எந்த நிலையிலும் ரன் விகிதத்தில் வெற்றி விகிதத்துகான கட்டுப்பாட்டில் இல்லை. கடைசியில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது. பாக்னர் 4 ஓவர்களில் 27 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
ஓரளவுக்கு திட்டமிடாத பேட்டிங்கும் காரணம், லெக் ஸ்பின்னர் ஸம்ப்பாவின் 2 முக்கிய விக்கெட்டுகளும் காரணம். ஆடம் ஸாம்பா அதிரடி ஆட்டம் ஆடி அச்சுறுத்திய உமர் அக்மல் விக்கெட்டையும், அபாய வீரர் ஷாகித் அப்ரிடியையும் வீழ்த்தியது முக்கியமான விக்கெட்டுகளாக அமைந்தது.
முன்னதாக அதிரடி முறையைத் தொடர்ந்தார் தொடக்க வீரர் ஷர்ஜீல் கான், 19 பந்துகளில் 6 சக்தி வாய்ந்த பவுண்டரிகள் மூலம் அவர் 30 ரன்கள் எடுத்தார்.
முதல் விக்கெட்டாக 1 ரன்னில் அகமது ஷெசாத், ஹேசில்வுட்டிடம் வீழ்ந்தார். பாக்னரின் முதல் விக்கெட்டாக ஷர்ஜீல் கான் பவுல்டு ஆனார். 40/2 என்ற நிலையில் உமர் அக்மல் களமிறங்கி அபாரமான 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 20 பந்துகளில் 32 ரன்கள் விளாசி அபாயகரமாகத் திகழ்ந்தார். இவரும் காலித் லடீப்பும் இணைந்து சரியாக 5 ஓவர்களில் 45 ரன்களைச் சேர்த்து 10.3 ஓவர்களில் 85 ரன்கள் என்று வந்த போது ஓரளவுக்கு பாகிஸ்தான் திட்டமிட்டால் ஆஸி. இலக்கை அச்சுறுத்தலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் உமர் அக்மலை ஸாம்பா பவுல்டு செய்தார். ஷாகித் அப்ரிடி, மேக்ஸ்வெல், ஸாம்ப்பா ஆகியோரை 2 சிக்சர்கள் அடித்து 7 பந்துகளில் 14 ரன்கள் என்று ஓரளவுக்கு நம்பிக்கை அளித்து வந்த நிலையில் திட்டமிடாமல் ஸாம்பாவை சிக்ஸ் அடித்த அடுத்த பந்தே மேலேறி வந்து கண்மூடித்தனமாகச் சுற்ற, ஸாம்பா பந்தை இழுத்து வைடாக வீச ஸ்டம்ப்டு ஆனார் அப்ரிடி.
காலித் லடீப் அவ்வப்போது ஆக்ரோஷம் காட்டி 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தது போதாமையாக அமைந்தது, இவரும் ஷோயப் மாலிக் போல் 20 பந்துகளில் 40 ரன்களை எட்டியிருந்தால் ஒருவேளை பாகிஸ்தான் ஆஸ்திரேலியா வயிற்றில் புளியைக் கரைத்திருக்கலாம். லடீப், பாக்னரிடம் பவுல்டு ஆனார். ஷோயப் மாலிக் 20 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்கள் அடித்து 40 ரன்களை விளாசினார்லும் கடைசி 1 ஓவரில் 30 ரன்கள் தேவை என்றால் என்னதான் செய்ய முடியும்? எனவே ஷாகித் அப்ரீடி ஆட்டமிழந்தவுடனேயே மீதமில்லாம் சம்பிரதாயமே என்பது போல்தான் அமைந்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 1 விக்கெட்டையும் பாக்னர் 5 விக்கெட்டையும், ஸாம்பா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். வாட்சன், உமர் அகமலிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதால் 2 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து அதன் பிறகு வீசவில்லை.பாகிஸ்தான் தோற்று வெளியேறியது.
ஸ்மித், வாட்சன் அதிரடியில் 193 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!!
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது.
ஸ்டீவ் ஸ்மித் 43 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, ஓய்வு அறிவித்துள்ள ஷேன் வாட்சன் 21 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிச்கர்களுடன் 44 ரன்கள் விளாசித்தள்ளி நாட் அவுட்டாக ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் விளாசியது.
வாட்சன், ஸ்மித் ஜோடி 5-வது விக்கெட்டுக்காக 38 பந்துகளில் 74 ரன்களைச் சேர்த்தது பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடைசி 3 ஓவர்களில் 41 ரன்கள் அடிப்பது என்பது இப்போதெல்லாம் வாடிக்கையாகி வருகிறது. இன்றும் ஆஸ்திரேலியா அதனைச் செய்து காட்டியது. மாட்டிய பவுலர்கள் மொகமது சமி, வஹாப் ரியாஸ், மொகமது ஆமிர். கடைசி ஓவரை ஆமிர் அருமையாகவே வீசிவந்தார், ஸ்மித்தை ரன் எடுக்க விடாமல் செய்தார். ஆனால் ஸ்மித் ஒரு லெக் பை ஒன்றை ஓட, ஸ்ட்ரைக்குக்கு வந்த வாட்சன் ஸ்லோ பந்தை ஒரு சுற்று சுற்ற விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் ஒரு பவுண்டரி சென்றது, அடுத்த பந்தில் வாட்சன் முன்னங்காலை விலக்கிக் கொண்டு ஒரு சுழற்று சுழற்ற மிட்விக்கெட்டில் சிக்ஸ்.
மொகமது சமிக்கு இன்று பந்துகள் சரியாக அமையவில்லை, வைடுகளை வீசியதோடும் தப்பும் தவறுமான லெந்தில் வீச 4 ஓவர்களில் 53 ரன்களை அவர் விட்டுக் கொடுத்தார்.
தொடக்கத்தில் வஹாப் ரியாஸ் கலக்கல்:
மொகமது சமி வீசிய ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே லெக் திசை பந்து ஒன்று, ஷார்ட் பிட்ச் பந்து ஒன்று ஆகியவற்றில் கவாஜா 2 பவுண்டரிகளை அடிக்க அந்த ஓவரில் 11 ரன்கள் வந்தது.
4வது ஓவரில் வஹாப் ரியாஸ் கையில் பந்து அளிக்கப்பட்டது. கவாஜா அவர் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ் அடித்து வரவேற்றார். ஆனால் கொஞ்சம் ஓவராக ஆடி அதே ஓவரில் லெக் திசையில் ஒதுங்கிக் கொண்டு ஷாட் ஆட முயன்ற கவாஜாவுக்கு ஒரு யார்க்கர் லெந்த் பந்தை வஹாப் வீச கவாஜா பவுல்டு ஆனார். 16 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 21 ரன்கள் எடுத்த கவாஜா ஆட்டமிழந்தார்.
வார்னர் இறங்கியவுடன் வஹாபின் அதே ஓவரில் பாயிண்ட் திசையில் ஒரு பவுண்டரி அடித்தார். பிறகு அடுத்த ஓவரில் வார்னர் சமியை அதே பாயிண்டில் மேலும் ஒரு பவுண்டரி அடித்தார்.
ஆனால் 9 ரன்கள் எடுத்த அவர் வஹாப் ரியாஸின் அருமையான, 148 கிமீ வேக இன்கட்டர் பந்தை லேசாக ஒதுங்கிக் கொண்டு ஆட நினைத்தார், பந்து உள்ளே வர வார்னரால் ஒன்றும் செய்ய முடியவில்லை அவர் ஏதொ ஸ்ட்ரோக் ஆட பந்து ஸ்டம்பைத் தாக்கியது. வஹாப் ரியாஸ் 2 ஓவர்கள் 17 ரன்கள் 2 விக்கெட் என்று பாகிஸ்தானுக்கு சற்றே நம்பிக்கை அளித்தார் பாகிஸ்தான் 6 ஓவர்கல் முடிவில் 52/2 என்று இருந்தது.
ஏரோன் பிஞ்ச் 16 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில் இமாத் வாசிம் பந்து ஒன்று திரும்பாமல் உள்ளே வர பவுல்டு ஆனார். ஆஸி. வீரர்கள் 3 பேரும் பவுல்டு. 7.2 ஓவர்களில் 57/3 என்ற நிலையில் பாகிஸ்தான் சற்றே நழுவ விட்டது என்றே கூற வேண்டும்.
ஸ்மித், மேக்ஸ்வெல் கூட்டணி இணைந்து 6.2 ஓவர்களில் 62 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்க்க 13.4 ஓவர்களில் 119 ரன்கள் என்று ஆஸ்திரேலிய ரன் விகிதம் ஒருபோதும் 8 ரன்களுக்குக் கீழ் இறங்காத போக்கில் சென்று கொண்டிருந்தது. 18 பந்துகளில் ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி மற்றும் சிக்சருடன் 30 ரன்கள் எடுத்த மேக்ஸ்வெல் இமாத் வாசிமிடம் ஆட்டமிழந்தார். இமாத் வாசிம் இன்று பாகிஸ்தானுக்குச் சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆமிர் 4 ஓவர்களில் 39 ரன்கள் விட்டுக் கொடுத்தார். வஹாப் 4 ஓவர்களில் 35 ரன்களுக்கு 2 விக்கெட்.
மேக்ஸ்வெலுக்கு பிறகு வாட்சன், ஸ்மித் இணைந்து பாகிஸ்தான் பந்து வீச்சை புரட்டி எடுத்தனர் ஆஸ்திரேலியா 193/4 என்று முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT