Published : 02 Dec 2021 04:56 PM
Last Updated : 02 Dec 2021 04:56 PM

ரஹானே, புஜாரா இருவரில் யாருக்கு ஓய்வு?: டெஸ்ட் தொடரை வெல்லுமா இந்திய அணி: நியூஸிலாந்துடன் நாளை 2-வது போட்டி

விராட் கோலி | கோப்புப்படம்

மும்பை


மும்பையில் நாளை தொடங்கும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி விளையாடுவதால், அணியில் புஜாரா, ரஹானே இருவரில் யாருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஸ்ரேயாஸ் அய்யர் தனக்குக் கிைடத்த வாய்ப்பை முதல் டெஸ்ட் போட்டியில் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு சதம், அரைசதம் அடித்து நிரூபித்துள்ளார். ஆதலால் நடுவரிசையில் ஸ்ரேயாஸ் அய்யரை நீக்க வாய்ப்பில்லை, ஃபார்மில்லாமல் தவித்துவரும் புஜாரா, ரஹானே இருவரில் ஒருவர் அமரவைக்கப்படலாம் எனத் தெரிகிறது

மும்பை வான்ஹடே மைதானத்தில் டெஸ்ட் போட்டி 5 ஆண்டுகளுக்குப்பின் நாளை நடக்கிறது. இந்த மைதானத்தில் நியூஸிலாந்து, இந்திய அணிகள்3-வது முறையாக மோதுகின்றன.

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக கடைசியாக வான்ஹடே மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதன்பின் 5 ஆண்டுகளுக்குப்பின் நாளை விளையாடுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான அந்தப் போட்டியில் கேப்டன் கோலி, 235 ரன்கள் குவித்தார். இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நியூஸிலாந்துக்கு எதிராக கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் கோலி விளையாடவில்லை. ஆனால் நாளை தொடங்கும் போட்டியில் கோலி விளையாட உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் ஃபார்மில்லாமல், கடந்த 2 ஆண்டுகளாக ஒருசதம் கூட அடிக்காமல் இருந்துவரும் கோலி நாளை ஜொலிப்பார் என நம்பப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டுக்கு முன்பாக மும்பை வான்ஹடே மைதானத்தில் 2013ம் ஆண்டு கடைசியாக இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கருக்கு பிரியாவிடை அளிக்கும் போட்டியாகும். மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் இந்திய அணி வென்றது.

இந்திய மண்ணில் இதுவரை நியூஸிலாந்து அணி இதுவரை 2 போட்டிகளில் மட்டும் வென்றுள்ளது, அதில் ஒரு வெற்றி வான்ஹடே மைதானத்தில் பெற்றதாகும். கடைசியாக கடந்த 1988ம் ஆண்டு ஜான் ரைட் தலைமையில் நியூஸிலாந்து அணி இந்தியா வந்து வான்ஹடே மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் வென்றது. ஏறக்குறைய 33 ஆண்டுகளாக இந்திய மைதானத்தில் நியூஸிலாந்து அணி டெஸ்ட் போட்டியை வென்றதில்லை என்பது குறி்ப்பிடத்தக்கது.

வான்ஹடே மைதானத்தில் இந்திய அணி தரப்பில் சுனில் கவாஸ்கர் 11 போட்டிகளில் 1,122 ரன்கள் குவித்துள்ளார். கோலி 4போட்டிகளில் 433 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சைப் பொறுத்தவரை அனில் கும்ப்ளே 7 போட்டிகளில் 38 விக்ெகட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்தார்போல் அஸ்வின் 3 போட்டிகளில் 30 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

நாளை நடக்கும் போட்டியில் இந்திய அணியில் கேப்டன் கோலி விளையாடுவதால் எந்த வீரருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. துணைக் கேப்டன் ரஹானேவுக்கு சொந்த மைதானம் என்பதால், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா எனத் தெரியவில்லை. கடந்த பல போட்டிகளாக ரஹானே பேட்டிங்கில் ஃபார்மில் இல்லாதபோது தொடர்ந்து வாய்ப்பு அளி்ப்பது விமர்சனத்தை எழுப்பியுள்ளது. அதேநிலைதான் புஜாரவுக்கும். ஸ்ரேயாஸ் அய்யர் தனது இடத்தை இறுக்கமாகப் பிடித்துவிட்டதால் அவரை நீக்குவது என்ற பேச்சே இருக்காது.

தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வாலும் ஃபார்மில் இல்லை என்பதால் மயங்க் அகர்வால் தேர்வில்கூட கத்தி விழக்கூடும். விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா கடந்த போட்டியிலேயே கீப்பிங் செய்யமுடியாததால், அவருக்குப் பதிலாக ஸ்ரீகர் பரத் விளையாடலாம்.

பந்துவீச்சில் இசாந்த் சர்மாவிடம் எந்தவிதமான ஸ்விங்கும் இல்லை, பேட்ஸ்மேனுக்கு தொந்தரவு கொடுக்கும், சிரமம் கொடுக்கும் பந்துவீச்சும் இல்லை. ஆதலால், இசாந்த் சர்மா அமரவைக்கப்பட்டு முகமது சிராஜ் அணிக்குள் கொண்டுவரப்படலாம்.

வான்ஹடே ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவும், பேட்ஸ்மேன்களுக்குசாதகமாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளதால், அஸ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் இடம் உறுதியாகியுள்ளது. இரு வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே அணியில் இருக்கக்கூடும். மற்றவகையில் பெரியதாக இ்ந்திய அணியில் மாற்றம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

கான்பூர் டெஸ்ட் போட்டியில் வெற்றியை இந்திய அணி கடைசி நேரத்தில் கோட்டை விட்டது. பந்துவீச்சாளர்களை சரியாக சுழற்சி முறையில் திட்டமிடாமல் பயன்படுத்தியதால் கடைசி விக்கெட்டை கழற்றமுடியாமல் டிராவில் முடிந்தது. ஆனால், கோலியின் அனுபவம் 2-வது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் கை கொடுக்கும் என நம்பலாம். டெஸ்ட் தொடரை வென்றால், உலக சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முன்னேறும் என்பதால், தொடரை கைப்பற்ற இந்திய அணி கடுமையாகப் போராடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x