Published : 01 Dec 2021 04:50 PM
Last Updated : 01 Dec 2021 04:50 PM
பஞ்சாப் கிங்ஸ் அணியை விட்டு கே.எல்.ராகுல் வேண்டுமென்றே விலகியதால் அந்த அணி நிர்வாகம் அதிக அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த அணியில் இருக்கும்போதே வேறு ஒரு அணியில் பேரம் பேசியிருந்தால் ராகுல் மீது பிசிசிஐ விதிகள்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கேப்டனாக நியமித்து, அதிகமான சுதந்திரங்களை வழங்கியும் ராகுல் அணியை விட்டு விலகியது பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகத்துக்கு அதிருப்தி அடையச் செய்துள்ளது.
அஸ்வினுக்குப் பதிலாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடந்த 2020ம் ஆண்டு கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட்டார். அணியின் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சிறப்பாகச் செயல்பட்டாலும் ராகுலால் அணியை ப்ளேயா ஆஃப் வரை கொண்டு செல்ல முடியவில்லை
இந்நிலையில் ஐபிஎல் 2022ம் ஆண்டு சீசனுக்கு 8 அணிகளும் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை நேற்று வெளியிட்டன. அதில்பஞ்சாப் கிங்ஸ் அணியில் மயங்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங் இருவர் மட்டுமே தக்கவைக்கப்பட்டனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் தக்கவைக்கப்படவில்லை.
ஆனால், தன்னை அணியிலிருந்து விடுவிக்கும்படியும், ஏலத்தில் பங்கேற்க விரும்புவதாக ராகுல் கூறியதைத் தொடர்ந்து அவரை அணி நிர்வாகம் தக்கவைக்கவில்லை. இந்நிலையில் ஐபிஎல் தொடரி்ல புதிதாக நுழையும் லக்னோ அணியுடன் கே.எல்.ராகுல் பேசியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகிகளில் ஒருவரான நெஸ் வாடியா அளித்த பேட்டியில், “ நாங்கள் கே.எல்.ராகுலை தக்கவைக்க விரும்பினோம். ஆனால் அவர்தான் ஏலத்தில்பங்கேற்க விரும்பவதாகத் தெரிவித்தார். பஞ்சாப் அணியில் இருக்கும்போதே வேறு ஒரு அணியிடம் ராகுல் பேசியிருந்தால், அது விதிகளை மீறியதாகும்.
இது பிசிசிஐ விதிகளை மீறிய செயலாகும். அவ்வாறு ராகுல் பேசியிருந்தால் அவர் மீது பிசிசிஐ விதிகள்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 2010ம் ஆண்டு ஜடேஜா தான் ஒரு அணியில் இருக்கும் போது வேறு ஒரு அணியிடம் பேரம் பேசியதால், விதிமுறை மீறலில் ஈடுபட்டு ஓர் ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
முகமது ஷமி சிறந்த வீரர். அவரை நிச்சயம் ஏலத்தில் எடுக்க முயற்சிப்போம். எங்கள் அணியில் பெரும்பாலும் இளம் வீரர்களைக் கொண்டதாகவே மாற்ற விரும்புகிறோம் அதனால்தான் 2 வீரர்களை மட்டும் தக்கவைத்துள்ளோம்”எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT