Published : 01 Dec 2021 02:24 PM
Last Updated : 01 Dec 2021 02:24 PM
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு பட்டியலி்ல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விடுவிக்கப்பட்டது குறித்து பயிற்சியாளர் அனில் கும்ப்ளே விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க நேற்று கடைசி நாள் என்பதால் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டன.
இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி 2 உள்நாட்டு வீரர்களை மட்டுமே தக்கவைத்துள்ளது. இதற்காக ரூ.16 கோடி மட்டுமே செலவிட்டு, கையிருப்பாக அதிகபட்சமாக ரூ.72 கோடி வைத்துள்ளது. ஏலத்தில் பல புதிய வீரர்களை எடுக்கவும், அணியை வலுவாகத் தயாரிக்கவும் பஞ்சாப் அணி முடிவு செய்துள்ளது.
வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்(ரூ.4கோடி) மயங்க் அகர்வால்(ரூ.12கோடி) இருவர் மட்டுமே தக்கவைக்கப்பட்டனர். பஞ்சாப் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, தமிழக வீரர் முருகன் அஸ்வின் கூட தக்கவைக்கப்படவில்லை. வெளிநாட்டு வீரர்களில் ஜோர்டான் நிகோலஸ் பூரன், கிறிஸ் கெயில் ஆகியோரும் கழற்றிவிடப்பட்டனர்.
இதில் வியப்புக்குரியது என்னவென்றால், அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தக்கவைக்கப்படாமல் ஏலத்தில் விடப்பட்டுள்ளார். ஆனால், மயங்க் அகர்வால் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
ஆனால், ஐபிஎல் மெகா ஏலத்தைப் பொறுத்தவரை, ஒரு வீரர் தன்னை அணி தக்கவைக்க வேண்டும் என விரும்பினால் தக்கவைக்கலாம், அல்லது தன்னை தக்கவைக்காமல் ஏலத்தில் பங்கேற்க விரும்புவதாக தெரிவித்தால் அவரை விடுவிக்க வேண்டும் என்பது விதியாகும்.
இ்்ந்நிலையில் கடந்த 4 சீசன்களாக பஞ்சாப் அணிக்காக சிறப்பாகச் செயல்பட்ட ராகுலை ஏலத்தில் அனுப்பியது பெரும் வியப்பாகஅமைந்தது. அது குறித்து அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:
கடந்த 4 ஆண்டுகளாக எங்கள் அணியில் முக்கியமான வீரராக திகழ்ந்தவர் கே.எல்.ராகுல். அதிலும்கடந்த 2 ஆண்டுகளாக நான் பயிற்சியாளராக வந்தபின், அவர் கேப்டனாக இருந்தார். அவரை நிச்சயமாக நாங்கள் தக்கவைக்கவே விரும்பினோம், தொடர்ந்து அணியில் வைத்திருக்க விரும்பினோம்.
ஆனால், ராகுல் தன்னை விடுவிக்கும்படியும், ஏலத்துக்கு செல்ல விரும்புவதாகவும் அணி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டதால் விடுவித்தோம். ஆனால், ஏலத்தில் நிச்சயம் ராகுலை விலைக்கு வாங்கி அவரை எடுப்போம். மீண்டும் பஞ்சாப் அணிக்கு ராகுல் வருவார் என நம்புகிறோம்.
ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக வீரர்கள் ஏலத்துக்கு செல்வதா அல்லது அணியில் நீடிப்பதா என தீர்மானிக்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அந்தவகையில் ராகுல் எடுத்த முடிவை நாங்கள் மதிக்கிறோம். ஏலத்தில் ராகுல் பெயர் வரும் அப்போது என்ன நடக்கிறது எனப் பார்க்கலாம்
இவ்வாறு கும்ப்ளே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT