Last Updated : 30 Nov, 2021 01:27 PM

 

Published : 30 Nov 2021 01:27 PM
Last Updated : 30 Nov 2021 01:27 PM

7-வது முறை: சாதனை நாயகன் லயோனல் மெஸ்ஸிக்கு பாலன் டி ஓர் விருது

7-வது முறையாக பாலன் டி ஓர் விருதை வென்ற மகிழ்ச்சியில் லயோனல் மெஸ்ஸி | படம் உதவி: ட்விட்டர்.

பாரிஸ்

கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பாலன் டி ஓர் விருதை 7-வது முறையாக அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி வென்றார்.

இதற்கு முன் எந்த வீரரும் பாலன் டி ஓர் விருதை 7 முறை வென்றதில்லை. முதல் முறையாக மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார். மகளிர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை அலெக்சியா புடிலா விருதைக் கைப்பற்றினார்.

உலக அளவில் கால்பந்து வீரர்களுக்குக் கடந்த 1956-ம் ஆண்டிலிருந்து பிரான்ஸின் கால்பந்து இதழான பாலன் டி ஓர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கரோனா வைரஸ் தொற்று காரணமாக விருது ஏதும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2020-ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி கைப்பற்றினார்.

கடந்த ஜூலை மாதம் நடந்த கோபா அமெரிக்கக் கோப்பைப் போட்டியில் அர்ஜென்டினா வழிநடத்திச் சென்ற மெஸ்ஸி முதல் முறையாக கோப்பையைப் பெற்றுக்கொடுத்தார். அந்த சீசனில் 613 புள்ளிகள் பெற்று மெஸ்ஸி முதலிடத்தைப் பிடித்ததையடுத்து, அவருக்கு விருது வழங்கப்பட்டது.

இதற்கு முன் பாலன் டி ஓர் விருதை மெஸ்ஸி கடந்த 2009, 2010, 2011, 2012, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளார். ஆடவர் பிரிவில் 2-வது இடத்தை 580 புள்ளிகளுடன் பேயர்ன் முன்சி அணியின் போலந்து ஸ்ட்ரைக்கர் ராபர்ட் லெவான்டோவ்ஸ்கி பெற்றார். 33 வயதான லாவான்டோவ்ஸ்கி ஒரே சீசனில் பண்டெஸ்லிகா அணிக்காக 41 கோல்கள் அடித்தார். ஜெர்மனி ஜாம்பவான் ஜெர்ட் முல்லரின் சாதனையையும் லாவான்டோவ்ஸ்கி முறியடித்தார்.

செல்ஸி அணியின் மிட்பீல்டர் ஜோர்ஹின்ஹோ 460 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்தார். சாம்பியன்ஸ் லீக், யூரோப்பியன் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் லண்டன் கிளப் அணியான செல்ஸி வெல்வதற்கு ஜோர்ஹின்ஹோ முக்கியக் காரணமாக அமைந்தார். ரியல்மாட்ரிட் அணி வீரரும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவருமான கரிம் பென்ஜமா 239 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்தார்.

இந்த விருது வென்றபின் லயோனல் மெஸ்ஸி அளித்த பேட்டியில், “நான் மிகுந்த மகிழ்ச்சியில் இங்கு நிற்கிறேன். புதிய கோப்பைகளுக்காகத் தொடர்ந்து போராடுவேன். இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடப் போகிறேன் எனத் தெரியாது. இன்னும் அதிகமாக விளையாடுவேன் என நம்புகிறேன். என்னுடைய சகவீரர்களான பார்சிலோனா, அர்ஜென்டினா வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டார்.

இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி பதிவிட்ட செய்தியில், “என்னுடைய மகிழ்ச்சியை மறைத்து வைத்திருக்க முடியாது. மற்றொரு பாலன் டி ஓர் விருதைப் பெறும் சக்தி இருக்கிறது. என்னுடைய சக வீரர்கள், தேர்வாளர்கள், அனைவருக்கும் நன்றி. என்னுடைய நண்பர்கள், குடும்பத்தார், ரசிகர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x