Published : 29 Nov 2021 05:45 PM
Last Updated : 29 Nov 2021 05:45 PM
கான்பூரில் நடந்த இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எந்த முடிவும் எட்டப்படாமல் டிராவில் முடிந்தது. வெளிச்சக் குறைவு காரணமாக கடைசி நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டதால் டிராவில் முடிந்தது.
284 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்திருந்தபோது வெளிச்சக் குறைவு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் தோல்வியின் பிடியில் இருந்த நியூஸிலாந்து அணி இயற்கையின் உதவியால், தோல்வியிலிருந்து தப்பித்தது. ஆட்ட நாயகனாக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நியூஸிலாந்து தரப்பில் ரவிந்திரா 18, பட்டேல் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-0 என்ற கணக்கில் இரு அணிகளும் உள்ளன.
இந்திய அணி கடந்த 1988 முதல் 1994-ம் ஆண்டுவரை உள்நாட்டில் நடந்த 13 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து முடிவு கிடைத்தவாறு இருந்தது. அதற்கு அடுத்தாற்போல், 2018-ம் ஆண்டு முதல் 2021, மார்ச் 4-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி வரை 12 போட்டிகளிலும் முடிவு கிடைத்தது. 13-வது டெஸ்ட் போட்டியிலும் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோது, இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 345 ரன்களுக்கும், நியூஸிலாந்து அணி 296 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 284 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது.
4-வது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் சேர்த்திருந்தது. சோமர்வில்லே, டாம் லாதம் களத்தில் இருந்த இன்றைய கடைசி நாள் ஆட்டத்தைத் தொடங்கினர்.
இருவரும் இந்தியப் பந்துவீச்சாளர்களை சோதிக்கும் வகையில் பேட் செய்ததால் விக்கெட் வீழ்த்த முடியாமல் இந்தியப் பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர். சோமர்வில்லே 36 ரன்கள் சேர்த்திருந்தபோது, உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 76 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்து ரோஸ் டெய்லர் களமிறங்கி லாதமுடன் சேர்ந்தார். அரை சதத்தைக் கடந்து ஆடி வந்த லாதம் 52 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். 118 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து அணி அதன்பின் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது.
ரோஸ் டெய்லர் 2 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அதைத் தொடர்ந்து வந்த நிகோலஸ் ஒரு ரன்னில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். நிலைத்து ஆடிவந்த கேப்டன் வில்லியம்ஸன் 24 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி பெவிலியன் திரும்பினார்.
பிளன்டெல் (2), ஜேமிஸன் (5) சவுதி (4) என ஜடேஜாவின் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தனர். 118 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூஸிலாந்து அணி அடுத்த 37 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளைச் சீரான இடைவெளியில் இழந்தது.
ரவிந்திரா 18 ரன்னிலும் பட்டேல் 2 ரன்னிலும் களத்தில் இருந்தனர். கடைசி விக்கெட்டை இந்திய அணி வீழ்த்தினால் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் என்ற ஆர்வத்தில் இந்திய அணியினர் நெருக்கடி கொடுத்தனர். ஆனால், வெளிச்சக் குறைவு காரணமாக ஆட்டம் கடைசி சில ஓவர்கள் முன்பாகவே முடிக்கப்பட்டது. இதனால் முதல் டெஸ்ட் போட்டி எந்த முடிவும் இன்றி டிராவில் முடிந்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கடைசி செஷனில் சிறப்பாகச் செயல்பட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியும் இயற்கையின் தடையால் வெற்றிபெற முடியவில்லை.
இந்தியத் தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT