Published : 24 Mar 2016 02:55 PM
Last Updated : 24 Mar 2016 02:55 PM
வங்கதேசத்தை பரபரப்பு போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது பற்றி தோனி கூறும்போது, “குழப்ப நிலையை நிர்வகிப்பதே வெற்றிக்கு முக்கியம்” என்று தெரிவித்தார்.
முதலில் போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவில் தோனி கூறியதைப் பார்ப்போம்:
நான் அனைத்தையும் கூற விரும்பவில்லை. கடைசி பந்தை என்ன லெந்தில் வீசுவது என்பதை முடிவு செய்தோம். என்ன லைனில் வீசுவது என்பதையும் பரிசீலித்தோம். யார்க்கர்கள் என்றால் அதற்கான பீல்டிங் அமைப்பு என்ன என்பதை கருத்தில் கொள்வதோடு, யார்க்கரின் பலம் என்ன என்பதற்கும் தயாராக இருக்க வேண்டியிருந்தது. மேலும், 20-வது ஓவர் தொடங்கியவுடனேயே, நாம் நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்பதையும் நான் அறிந்திருந்தேன். எனக்கு அபராதம் விதிக்கலாம். அது அப்படித்தான் ஆகும்.
சில சமயங்களில் பெரிய ஷாட்டில் முடிக்க விருப்பப் படலாம். விக்கெட்டுகள் கையில் இருக்கும் போது மற்றவர்கள் போட்டியை முடிக்கட்டும் என்று விட்டு விடலாம். நன்றாக பேட் செய்து கொண்டிருக்கும் போது பெரிய ஷாட்களைத் தேர்வு செய்வோம். ஆனால் மஹமுதுல்லாவுக்கு இது கற்றுக்கொள்ள வேண்டிய தருணம். இதுதான் கிரிக்கெட் என்பது. சிக்ஸுக்குச் சென்றால் அது பெரிய ஷாட். கிரேட் ஷாட்டாக இருக்கும். பெரிய தைரியம். பும்ரா அபாரமாக வீசினார். 2-வது ஓவரை அவர் வீசும் போது அவர் நெருக்கடியில் இருந்தார் (4பவுண்டரி), களதடுப்பு கட்டுப்பாடுகள் இருந்தன, மேலும் அவர் அதற்கு முன்னதாக எளிதான கேட்சை விட்டிருந்தார், மிஸ் பீல்ட் என்று அவர் நெருக்கடியிலிருந்தார்.
ஆனால் அவர் அதையெல்லாம் நினைக்கக் கூடாது, நடந்ததை மறந்து விடவேண்டும் என்றுதான் நாங்கள் அவரிடம் கூறினோம். அவர் யார்க்கர்களில் சிறப்பானவர் என்றே நான் கருதுகிறேன். ஆட்டத்தில் 2 தருணங்களில் பகுதி நேர வீச்சாளர்களுக்குப் பதிலாக முன்னணி பவுலர்களையே பயன்படுத்தினோம். நல்ல பவுலிங் முயற்சி என்றே நான் கருதுகிறேன்.
(பாண்டியாவின் கடைசி பந்துக்கு முன்பாக என்ன விவாதித்தீர்கள்?). நிறைய உத்திகளை யோசித்தோம். ஒன்று யார்க்கர் வீசக்கூடாது என்பது. பேக் ஆஃப் லெந்த் பந்து என்று முடிவெடுத்தோம், ஆனால் எந்த வகையிலான பேக் ஆஃப் லெந்த் என்பதே கேள்வி. வைடு போடக்கூடாது. நாங்கள் பீல்டிங்கை தீர்மானித்தோம், பாண்டியா திட்டத்தை சரியாக செயல்படுத்தினார், என்றார் தோனி.
செய்தியாளர்கள் சந்திப்பில் கோபமடைந்த தோனி:
இருதயம் நின்று விடும் பரபரப்பு போட்டியில் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் புன் சிரிப்புடன் வந்த தோனியின் முகத்தில் முதல் கேள்விக்குப் பிறகு புன்னகை மறைந்தது.
அதாவது நிருபர் ஒருவர், இந்தியா பெரிய ரன்விகிதத்தில் வெற்றி பெறுவதன் அவசியம் இருக்கும் போது 1 ரன் வித்தியாச வெற்றி பற்றி திருப்தி அடைந்தீர்களா என்று கேட்டார்,
அதற்கு தோனி பதிலளிக்கையில், “இந்தியா வெற்றி பெற்றது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று எனக்கு புரிகிறது.” என்றார், ஆனால் நிருபர் அவருக்கு தான் கூற வந்ததை தெளிவு படுத்தும் போது, அவரை குறுக்காக மறித்து தோனி, “நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் கேள்வி, அதன் தொனி, ஆகியவற்றை பார்க்கும் போது இந்தியா வெற்றி பெற்றதில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றே தோன்றுகிறது. கிரிக்கெட்டைப் பற்றி பேசும் போது ஏதோ எழுதி வைத்து நடப்பதல்ல, இது ஸ்கிரிப்ட் சம்பந்தப்பட்டதல்ல.
டாஸ் தோற்ற பிறகு இந்தப் பிட்சில் எங்களால் ஏன் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை என்பதை நீங்கள் ஆராய வேண்டும். இதையெல்லாம் ஆராயாமல் வெளியில் உட்கார்ந்து கொண்டு இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கக் கூடாது” என்றார்.
இப்படி கூறியவுடன் செய்தியாளர்கள் அறையில் பெரிய அமைதி நிலவியது, பிறகே அடுத்த கேள்விக்காக மைக் பாஸ் செய்யப்பட்டது.
“ஆட்டத்தின் அந்தச் சூழ்நிலை பெரும் குழப்பமாக அமைந்தது. இந்த நிலையில் குழப்பத்தை எப்படி நிர்வகிப்பது என்பதை முயற்சி செய்தோம். அனைவரும் அவர்களுக்கான கருத்துடன் வருவார்கள், ஆனால் பேட்ஸ்மென் என்ன நினைக்கிறார் என்பது பவுலர் என்ன நினைக்கிறார் என்பதிலிருந்து வேறுபட்டது. ஆனால் பேட்ஸ்மெனின் பலம் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டியுள்ளது. பிட்ச் எப்படி நடந்து கொள்கிறது. அதாவது ரிவர்ஸ் ஸ்விங் இருக்கிறதா, அல்லது இல்லையா.. இவையெல்லாம்தான் முக்கியமான விஷயங்கள், கலந்தாலோசனையில் இது எனக்கு மிகவும் உதவியது.
கடைசியில் அந்த சூழ்நிலைக்கு எது நல்லதோ அப்படி வீச பவுலரை வலியுறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இதைத்தான் நான் செய்ய நினைத்தேன் என்பதில் திருப்தியுற்றேன். நிறைய பேர் கருத்துகளுடன் வரும் அத்தருணத்தில் நாம் திறந்த மனதுடன் இருக்க வேண்டியது அவசியம்.
ஜஸ்பிரித் பும்ரா, முதல் முறையாக தனது சர்வதேச போட்டியில் நெருக்கடியைச் சந்தித்தார். பவுலிங் வீசுவது பற்றிய நெருக்கடிதான் அது. பீல்டிங்கைப் பொறுத்தவரை அவர் பலவீனமானவர் என்பதை நான் அறிவேன். முதலில் மிஸ் பீல்ட், பிறகு கேட்சை விட்டது, ஒரு இளைஞராக அது அவருக்கு கடும் நெருக்கடியை பவுலிங் செய்த போது கொடுத்தது. ஆனால் நாங்கள் அவரிடம் கூறியதென்னவெனில் அதையெல்லாம் மறந்து விட்டு பவுலிங் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றோம். அவரிடம் மீண்டும் ஒரு முறை பேசிய போது, நான் என்ன கூறினேன் என்று கூறப்போவதில்லை, ஆனால் நான் கூறியது சரியாகவே அவருக்கு அமைந்தது என்று கூறுவேன்.
மொத்தத்தில் அணி நன்றாகவே விளையாடியது. வீரர்களில் பெரும்பாலானோருக்கு கடினமான நாள்தான். அஸ்வின் நன்றாக வீசினார். நல்ல தினமாக அமைந்தது, ஆனாலும் சில சமயங்களில் பேட்ஸ்மென் நல்ல ஷாட்டை ஆடி விடுகிறார் என்று அவர் நினைக்கும் தருணங்களில் அவரது பந்துகளில் ரன்கள் அடிக்கப்படுகின்றனர். இது ஒரு நல்ல போட்டி, குறிப்பாக இளம் வீரர்கள். இதுவரை சர்வதேச போட்டியின் அழுத்தம் என்றால் என்னவென்று அறியாதவர்கள் இந்தப் போட்டியின் மூலம் அதனை கற்றுக் கொண்டிருப்பார்கள்.
ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகிய இளம் வீரர்கள் அழுத்தம் என்றால் என்னவென்படை இப்போதுதான் பார்க்கின்றனர், இப்படிப்பட்ட போட்டிகள்தான் அவர்களை சிறந்த வீரர்களாக மாற்றும். ஏனெனில் இத்தகைய போட்டிகள் தரும் நெருக்கடிதான் வித்தியாசமாக யோசிப்பதை அவர்களுக்க்குக் கற்றுக் கொடுக்கும். எனவே இவ்வகையில் இந்த வெற்றி முக்கியமான வெற்றியாகும்.
இவ்வாறு கூறினார் தோனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT