Published : 28 Nov 2021 12:28 PM
Last Updated : 28 Nov 2021 12:28 PM
நியூஸிலாந்து வீரர்கள் சவுதி, ஜேமிஸன் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணியின் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக ஆட்டமிழந்தனர்.இதனால் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது.
பிற்பகல் உணவு இடைவேளை வரை இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்இழப்புக்கு 84 ரன்கள் சேர்த்துள்ளது. அஸ்வின் 20 ரன்களிலும் ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
ஆடுகள் மந்தமாகவும், பந்து பவுன்ஸ்ஆகாமலும், ஸ்விங் ஆகாமலும் வருகிறது இதனால் பேட்ஸ்மேன்கள் சமாளித்து ஆடுவது சிரமமாக இருந்து வருகிறது. இந்திய அணி தற்போது 133 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. அஸ்வின், ஸ்ரேயாஸ் அய்யருக்கு அடுத்தார்போல் கடைசி வரிசையில் பேட்ஸ்மேன்கள் இல்லை.
இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் அடித்தால்தான் கடைசி நாளான நாளை நியூஸிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்து சுருட்ட முடியும் இல்லாவிட்டால் இந்திய அணி 200 ரன்களுக்குள் சுருண்டுவிட்டால் ஆட்டம் நியூஸிலாந்து பக்கம் திரும்பவும் வாய்ப்புள்ளது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கும், நியூஸிலாந்து அணி 296 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் 49 ரன்கள் முன்னிலை பெற்று இந்திய அணி 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது.
3-வது நாளான நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் சேர்த்திருந்தது. மயங்க் அகர்வால் 4 ரன்களிலும் புஜாரா 9 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இன்று ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே புஜரா 22 ரன்களில் ஜேமிஸன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிளென்டலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ரஹானே களமிறங்கினார்.
ஃபார்மில்லாமல் தடுமாறி வரும் ரஹானே 4 ரன்னில் பட்டேல் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். டிபென்சிவ் ஆடுகிறேன் எனக் கூறி, ரஹானே காலைநகர்த்தி ஆடாமல் ஆடி தெளிவான எல்பிடபிள்யு மூலம் ஆட்டமிழந்தார். அனேகமாக ரஹானேயின் டெஸ்ட் வாழ்க்கை இந்தத் தொடருடன் முடிவுக்கு வந்தாலும் வியப்பில்லை.
அடுத்துவந்த ஜடேஜா, மயங்க்அகர்வாலுடன் சேர்ந்தார். இருவரும் சிறிதுநேரம் மட்டுமே களத்தில் இருந்தனர். சவுதி வீசிய 20-வது ஓவரில் இருவருமே ஆட்டமிழந்தனர். சவுதி வீசிய ஓவரின் 2-வது பந்தில் அகர்வால் 17 ரன்னில் லாதமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், 4-வது பந்தில் ஜடேஜா கால்காப்பில் வாங்கி பெவிலியன் திரும்பினார்.
32 ரன்கள் வரை ஒரு விக்கெட்டை மட்டும் இழந்திருந்த இந்திய அணி அடுத்த 20 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 6-வது விக்ெகட்டுக்கு அஸ்வின், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி நிதானமாக ஆடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டனர். ஸ்ரேயாஸ் நிதானமாக ஆடியநிலையில் அஸ்வின் அவ்வப்போது ஸ்ட்ரைட் டிரைவ், கவர் ட்ரைவ் ஷாட்களில்பவுண்டரி அடித்து ரன்கள் குவித்தார்.
அஸ்வின் 20 ரன்னிலும், ஸ்ரேயாஸ் 18 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT