Last Updated : 27 Nov, 2021 05:01 PM

 

Published : 27 Nov 2021 05:01 PM
Last Updated : 27 Nov 2021 05:01 PM

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணம் ரத்தாகுமா?- மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சூசகம்

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் | கோப்புப்படம்

பாக்பத்

தென் ஆப்பிரிக்கத் தொடருக்காக இந்திய அணியை அனுப்புவதற்கு முன், மத்திய அரசுடன் ஆலோசித்து அனுமதி பெற்று பிசிசிஐ செயல்பட வேண்டும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற ஒமைக்ரான் கரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இந்த வைரஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்த வகை வைரஸ், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டவை, வேகமாகப் பரவும், கரோனாவின் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வைரஸான ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் சூழலில் இந்திய கிரிக்கெட் அணி அங்கு அடுத்த மாதம் பயணம் செய்ய உள்ளது.

தென் ஆப்பிரிக்கப் பயணத்தில் இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள், 4 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் டிசம்பர் 17-ம் தேதியும், அதன்பின் டிசம்பர் 26-ம் தேதி பாக்ஸிங்டே டெஸ்ட்டாக சென்சூரியனிலும், 2022, ஜனவரி 3-ம் தேதி கேப்டவுனில் 3-வது டெஸ்ட் போட்டி நடக்கிறது.

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் முடிந்தபின், டிசம்பர் 8-ம் தேதியே இந்திய அணி தென் ஆப்பிரிக்கா புறப்படத் திட்டமிட்டுள்ளது. டிசம்பர் 17-ம் தேதி முதல் தொடர் தொடங்குவதால் 10 நாட்கள் பயிற்சி எடுக்க வேண்டும் என்பதால், முன்கூட்டியே செல்கிறார்கள்.

ஆனால், தற்போது இந்திய ஏ அணியில் விளையாடிவரும் சில வீரர்களை அங்கேயே தங்கவைத்து, இந்திய அணியில் முக்கியமான வீரர்களை மட்டும் அனுப்பவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸின் தீவிரத்தை அஞ்சி, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய நாடுகள் இப்போதே பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இந்தச் சூழலில் இந்திய அணியினர் தென் ஆப்பிரிக்கா செல்வது எந்த அளவுக்குச் சரியானதாக இருக்கும் எனத் தெரியாது. தென் ஆப்பிரிக்காவில் ஏறக்குறைய ஒரு மாதத்துக்கு மேல் இந்திய அணியினர் போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளனர்.

கடுமையான பயோ-பபுள் சூழலில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்ட நிலையிலும் கரோனா தொற்றால் வீரர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், தென் ஆப்பிரிக்காவில் அதேபோன்று பயோ-பபுள் சூழலில் வீரர்கள் விளையாடினாலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதற்கு உறுதியில்லை.

இந்தச் சூழலில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கப் பயணத்துக்குப் புறப்படுமா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று பாக்பத் நகரில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கப் பயணம் குறித்தும் தொடர் ரத்தாகுமா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் அதற்கு பதில் அளிக்கையில், “தென் ஆப்பிரிக்கத் தொடர் ரத்தாகுமா என்பதை இப்போதே கூற இயலாது.

ஆனால், இந்திய அணியைத் தென் ஆப்பிரிக்கா அனுப்பும் முன் பிசிசிஐ மத்திய அரசிடம் ஆலோசித்து அனுமதி பெற்றே அனுப்ப வேண்டும். ஏனென்றால் தென் ஆப்பிரிக்காவில்தான் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. எங்கு கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கிறதோ அங்கு இந்திய அணியை விளையாட அனுப்புவது சரியான முடிவாக இருக்காது. பிசிசிஐ ஆலோசிக்கும்போது, இதுபற்றி விரிவாகப் பேசுவோம்” எனத் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து வருவோருக்குப் பயணக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து, கட்டுப்பாடுகள் விதித்தால், இந்திய அணி அங்கு செல்வதிலும் சிக்கல் நேரிடும். ஒமைக்ரான் வைரஸ் குறித்து இன்னும் முழுமையான தகவல் வெளியான பின்புதான், வரும் நாட்களில் இந்திய அணியின் பயணம் ரத்தாகுமா அல்லது தொடர் நடக்குமா என்பது தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x