அறிமுகமே அசத்தல்; ஸ்ரேயாஸ் அய்யர் சதம்: வலுவான நிலையை நோக்கி இந்திய அணி

அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த மகிழ்ச்சியில் ஸ்ரேயாஸ் அய்யர் | படம் உதவி: ட்விட்டர்.
அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த மகிழ்ச்சியில் ஸ்ரேயாஸ் அய்யர் | படம் உதவி: ட்விட்டர்.
Updated on
2 min read

கான்பூரில் நடந்துவரும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்திய அணி உணவு இடைவேளையின்போது 8 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் குவித்துள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் 105 ரன்களில் ஆட்டமிழந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 38 ரன்களிலும், உமேஷ் யாதவ் 4 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது. அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 75 ரன்களிலும், ரவிந்திர ஜடேஜா 50 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஸ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா ஆட்டத்தைத் தொடங்கினர். இந்திய அணி கூடுதலாக 8 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா 50 ரன்னில் சவுதி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்துவந்த விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

அஸ்வின், ஸ்ரேயாஸ் அய்யருடன் சேர்ந்து நிதானமாக ஆட ஸ்கோர் வேகமெடுத்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 157 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது சதத்தை நிறைவு செய்தார். அடுத்த சிறிது நேரம் மட்டுமே களத்தில் இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் 105 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த 16-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் அய்யர் பெற்றார். கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு ராஜ்கோட்டில், மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக பிரித்வி ஷா அறிமுகப் போட்டியில் சதம் அடித்திருந்தார். அதன்பின் ஸ்ரேயாஸ் அய்யர் அடித்துள்ளார்.

இந்திய அணி சார்பில் முதன்முதலில் டெஸ்ட் போட்டியில் அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்தவர் லாலா அமர்நாத் ஆவார். அதன்பின் ஆர்ஹெச் சோதன், கிர்பால் சிங், அப்பாஸ் அலி பாக், ஹனுமந்த் சிங், குண்டப்பா விஸ்வநாத், சுரேந்தர் அமர்நாத், முகமது அசாருதீன், பிரவிண் ஆம்ரே, சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஆகியோர் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்தனர்.

நியூஸிலாந்துக்கு எதிராக அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த 3-வது இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர். இதற்கு முன் கிர்பால் சிங், சுரேந்தர் அமர்நாத் சதம் அடித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in