Published : 24 Nov 2021 07:31 AM
Last Updated : 24 Nov 2021 07:31 AM
இந்திய அணி வீரர்களுக்கு மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி வழங்கப்படாது, ஹலால் செய்யப்பட்ட மாமிசத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று பிசிசிஐ வீரர்களுக்கு வெளியிட்ட உணவுக்குறி்ப்பில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2- போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை கான்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் டிசம்பர் 3-ம் தேதி தொடங்குகிறது.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியல் கேப்டன் விராட் கோலி தலைமைக்குப் பதிலாக துணைக் கேப்டன் ரஹானே தலைமையில் களமிறங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குப்பின் இந்திய அணி நியூஸிலாந்துடன் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிசிசிஐ சார்பில் இந்திய அணி வீரர்களுக்கான உணவுப்பட்டியல் குறித்த அட்டவணை வெளியாகியுள்ளது. அதில், வழக்கமான உணவுகளைத் தவிர்த்து சில முக்கியமான கட்டுப்பாடுகளை பிசிசிஐ வீரர்களுக்கு விதித்துள்ளது. இதன்படி, வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி எந்த வடிவத்திலும் சாப்பிடக்கூடாது, அவர்கள் உணவுப்பட்டியலில் வரக்கூடாது எனத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவி்க்கின்றன.
அதேநேரம், வீரர்களுக்கு வழங்கப்படும் இறைச்சி உணவுகள் அனைத்தும் ஹலால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளதாக தனியார் ஆங்கில சேனல்ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய வீரர்களுக்கு உடற்தகுதி மிகவும் முக்கியமானதாக கருதப்படுவதால், இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. யோ-யோ பரிசோதனைக்குச் செல்லும் வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிடும்போது தேவையற்ற சதைப்பிடிப்புகளால் பயிற்சியில் தோல்வி அடைய வாய்ப்புள்ளது என்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
அதேசமயம், பிசிசிஐ சார்பில் வீரர்களுக்கான உணவுப்பட்டியல் குறித்த கட்டுப்பாடுகள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. வீரர்களின் உணவு உரிமை தனிப்பட்ட உரிமை இதில் பிசிசிஐ தலையிடுவது எவ்வாறு சரியாகும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT