Published : 21 Mar 2016 05:10 PM
Last Updated : 21 Mar 2016 05:10 PM
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், அபாயகரமான பவுலர் அல்ல என்று ஆப்கன் வீரர் ஷசாத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று (ஞாயிறு) நடந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் ஆப்கான் தொடக்க வீரர் ஷசாத் 19 பந்துகளில் 44 ரன்கள் விளாசி தென் ஆப்பிரிக்காவை சிறிது நேரம் அச்சுறுத்தினார்.
டேல் ஸ்டெய்னை அணியிலிருந்து நீக்கியிருக்கா விட்டால், வெற்றிக்கு அருகில் கூட வந்திருப்போம் என்கிறார் மொகமது ஷசாத்.
அன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராய் அனாயாச மட்டையடியில் இறங்கியதை முன்னுதாரணமாகக் கொண்ட மொகமது ஷசாத் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களை விளாசியதில் 210 ரன்கள் வெற்றி இலக்கைத் துரத்திய போது 4 ஓவர்களில் 52 ரன்களை எட்டியது ஆப்கன்.
கைல் அபாட்டின் முதல் ஓவரிலேயே இவரது அதிரடியால் 22 ரன்கள் விளாசப்பட்டது. கிறிஸ் மோரிஸ் இவரை பவுல்டு செய்த பிறகே தென் ஆப்பிரிக்கா மீண்டும் ஒன்றிணைந்து வெற்றிக்காக ஆட முடிந்தது.
இந்நிலையில் மொகமது ஷசாத் கூறியதாவது: “மோரிஸ் நன்றாக வீசினார். நான் ஃபுல் லெந்த் பந்துக்காகக் காத்திருந்தேன், ஆனால் நான் கோட்டை விட்டேன் அவர் பவுல்டு செய்தார்.
எந்த பவுலர் விளையாடுகிறார் என்பது பிரச்சினையல்ல, ஏனெனில் பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமாகவே இருந்தது. எனக்கு டேல் ஸ்டெய்னை எதிர்கொள்ள பிடிக்கும் காரணம் அவர் அபாயமற்ற வீச்சாளர்.
மோரிஸ் அபாயமான பந்து வீச்சாளர், ஏனெனில் அவர் உயரமாக இருக்கிறார், ஸ்விங் செய்கிறார். டேல் ஸ்டெய்ன் வேகமாக வீசுபவர் அவ்வளவே. இந்தப் பிட்சில் வேகமாக வீசுபவர்களை எதிர்கொள்ள வசதியானதுதான். எனவே டேல் ஸ்டெய்ன் விளையாடவில்லை என்பதால் நான் மகிழ்ச்சியடையவில்லை” என்றார்.
செய்தியாளர்கள் அறையில் இவர் கூறிய கடைசி கூற்று அதிர்ச்சியை ஏற்படுத்த பத்திரிகையாளர் ஒருவர் மீண்டும் கூறுங்கள் என்று ஷசாத்திடம் கேட்க, “டேல் ஸ்டெய்ன் விளையாடவில்லை என்பதால் நான் மகிழ்ச்சியடையவில்லை என்று கூறினேன்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
மேலும் எம்.எஸ்.தோனியின் தீவிர ரசிகரான அவர் கூறும்போது, “நான் எனது பாணி ஆட்டத்தையே ஆடுவேன். அடிக்கக்கூடிய பந்துகளுக்காக காத்திருப்பேன், அத்தகைய பந்துகள் முதல் பந்தாக இருந்தாலும் சரி கடைசி பந்தாக இருந்தாலும் சரி, 4 நாள் ஆட்டமாக இருந்தாலும் டெஸ்ட் போட்டியாகவே இருந்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். நான் என் ஆட்டத்தைத்தான் ஆடுவேன், அதாவது எம்.எஸ்.தோனி போல் நான் ஆடுவேன்” என்றார்.
ஷசாத், டேல் ஸ்டெய்ன் பற்றி கூறியதை தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபா டுபிளெஸ்ஸிடம் வைத்த போது, “நான் அவரது தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT