Last Updated : 29 Mar, 2016 09:15 AM

 

Published : 29 Mar 2016 09:15 AM
Last Updated : 29 Mar 2016 09:15 AM

ஆஸ்திரேலியாவை விரட்டி அடித்த விராட் கோலி

2015ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத் தில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. அந்த ஆட்டத்தில் ஒரு ரன்னில் வெளியேறினார் விராட் கோலி. அதற்காக அவரது காதலி அனுஷ்கா ஷர்மா வரை சென்று திட்டித் தீர்த்தனர் ரசிகர்கள்.

சரியாக ஒரு வருடம் கழித்து 2016-ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி அதே விராட் கோலி அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய அணியை நுழையவிடாமல் வீட்டுக்கு அடித்து விரட்டியுள்ளார். அதுவும் தனி ஒருவனாக. விராட் கோலி இந்திய அணிக்கு கிடைத்த இன்னொரு சச்சின், தொடர்ந்து சிறப்பாக ஆடுவதில் டிராவிட், ஆக்ரோஷத்தில் கங்குலி என புகழ்கின்றனர் ரசிகர்கள்.

டி 20 உலகக் கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக திழும் என பலரால் கருதப்பட்ட இந்திய அணி தட்டுத்தடுமாறி இரு வெற்றிகளை பெற்றது. இந்தத் தொடரில் நேற்று முன்தினம் முதல் முறையாக 160 ரன்களுக்கு மேலான இலக்கை எதிர்கொண்டது.

ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் கைகொடுக்கக்கூடும் என கருதப்பட்ட நிலையில் வழக்கம் போல அவர்கள் ரசிகர்களின் நம்பிக்கையை சீர்குலைத்தனர்.

விராட் கோலி ஆட வந்த போது இந்தியா ஓரளவுக்கு நிதானமாகவே ஆடி வந்தது. 4 ஓவர்களில் 24 ரன்கள் எடுத்திருந்தது. 8 ஓவர்களில் 50 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து ஆட வந்த யுவராஜ் தசைபிடிப்பில் அவதிப்பட இரண்டு ரன்கள் ஓட வேண்டிய இடத்தில் ஒரு ரன் ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் விராட் கோலி.

யுவராஜுடன் இணைந்து 45 ரன்கள் சேர்த்தார் கோலி. ஆப் ஸ்டெம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்தை கால் வலியுடன் தூக்கி அடிக்க முயன்ற யுவராஜ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 18 பந்தில் அவர் சேர்த்த 21 ரன்னும் முக்கிய பங்கு வகித்தது. அதன் பின்னர் தோனி களமிறங்க, ருத்ர தாண்டவம் ஆடத்தொடங்கினார் கோலி.

ஓவருக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலையில் எந்தவித பதற்றமும் இல்லாமல் தனது ஆட்ட திறனில் மட்டுமே அதிக கவனம் செலுத்தினார் கோலி. 16-வது ஓவரில் கோலி ஒரு ரன்கள் எடுக்க வேண்டிய இடத்தில் இரு ரன்கள் சேர்த்தார். இது ஒரு முறை அல்ல 4 முறை அதே ஓவரில் நிகழ்ந்தது. இரு பக்க ஸ்டெம்புகளுக்கு இடையே அவர் தோனியுடன் காற்றைக் கிழித்துக்கொண்டு ஓடிய விதம் வெற்றிக்கான வேட்டையே.

18 மற்றும் 19வது ஓவர்களை ஆஸ்திரேலியா செல்லும்வரை அந்த அணி வீரர்கள் மறக்க மாட்டார்கள். அந்த இரண்டு ஓவர்களில் மட்டும் 6 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என ஆஸ்திரேலியாவின் கனவை கலைத்தார் கோலி. இந்த ஆட்டத்தில் இந்தியா எதிர் கொண்டது 115 பந்துகள். அதில் கோலி மட்டும் 51 பந்துகளை எதிர் கொண்டுள்ளார். அதில் 14 பந்துகளில் மட்டுமே அவர் ரன் எடுக்கவில்லை.

முதல் 40 பந்துகளில் அரை சதம் அடித்த கோலி, அடுத்த 11 பந்து களில், 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் விளாசினார். டி 20 போட்டிகளில் முரட்டுத்தனமாக விளையாடி சிக்ஸர்கள் விளாசினால் மட்டுமே எதிரணியை கலங்கடிக்க முடியும் என்ற சித்தாந்தத்தை தகர்த்தெறிந்துள்ளார் கோலி. அதுவும் தனது நேர்த்தியான ஆட்ட அணுகுமுறையால்.

டி 20 போட்டிகளில் இந்திய அணி இப்படி ஓர் ஆட்டத்தை விளையாடி ரசிகர்கள் பார்ப்பது அரிதான நிகழ்வு என்று கூறினாலும் தவறில்லை. விராட் கோலியை பாராட்டும் அதேவேளையில் யுவராஜ்சிங், நெஹ்ராவையும் மறந்துவிடக்கூடாது. 4 ஓவர்களில் 55 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணி மிரட்டியது. இதேவேகத்தில் சென்றால் எப்படியும் 230 ரன்கள் கூட குவிக்கக்கூடும் என்ற நிலை நிலவியது.

பும்ராவின் ஓரே ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசி மிரட்டிய உஸ்மான் ஹவாஜாவை நெஹ்ரா தனது அனுபவத்தால் வீழ்த்தினார். மறுபுறம் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினின் ஒரே ஓவரில் 22 ரன்கள் விளாசப்பட்டன. அவரது 2வது ஓவரிலும் 9 ரன்கள் விளாசப்பட தோனி அப்படியே அஸ்வினை ஓரம் கட்டிவிட்டு யுவராஜ் கையில் பந்தை கொடுத்தார்.

இந்த தொடரில் முதன்முறையாக பந்து வீசிய அவர் முதல் பந்திலேயே அபாயகரமான ஸ்டீவ் ஸ்மித்தை பெவிலியனுக்கு அனுப்பினார். அதோடு மட்டும் அல்லாமல் 3 ஓவர்கள் வீசி 18 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஆஸ்திரேலிய அணியின் ரன்குவிப்பை கட்டுப்படுத்தியதில் பெரும் பங்காற்றினார். பேட்டிங்கிலும் யுவராஜ்சிங் சிறந்த பங்களிப்பை கொடுத்து உதவினார்.

சமீபகாலமாகவே விராட் கோலியின் பார்ம் உச்ச கட்டத்தில் உள்ளது. மிகப்பெரிய ஷாட்களை விளையாடி ரன் குவிக்கும் வீரர்களில் இருந்து மாறுபட்டு காணப்படும் கோலி பீல்டிங்கில் வீரர்களுக்கு இடையேயான இடைவெளியை கண்டறிந்து அந்த திசையில் கவனத்தை செலுத்தி சீராக ரன் குவிக்கும் திறனில் நன்கு கைதேர்ந்தவராகவும், அணியை வெற்றிப்பாதைக்கு இழுத்து செல்லும் தனி ஒருவனாகவும் திகழ்வது இந்திய கிரிக்கெட்டுக்கு நன்மையே. கோலி இதே பார்மில் இருக்கும் பட்சத்தில் இரண்டாவது முறையாக இந்திய அணி பட்டம் வெல்வதில் எந்த தடையும் இருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x