Published : 20 Nov 2021 08:30 AM
Last Updated : 20 Nov 2021 08:30 AM
கேப்டன் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுலின் அரைசதம், ஹர்ஸல் படேல், அஸ்வின் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் ராஞ்சி்யில் நேற்று நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. 154 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்ெகட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து ஏறக்குறைய டி20 தொடரை கைப்பற்றிவிட்டது. இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக வந்துள்ள ராகுல் திராவிட், முழுநேரக் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோஹித் சர்மாவுக்கு கிடைத்துள்ள முதல்தொடர் இதுவாகும்.
அறிமுகப் போட்டியிலேயே அசத்தலாகப் பந்துவீசி 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஸல் படேலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
நியூஸிலாந்து தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் டி20 போட்டிகளி்ல 3,231 ரன்கள் சேர்த்து இந்திய வீரர் விராட் கோலியின்(3,227) சாதனையை முறியடித்தார்.
இந்திய அணியின் வெற்றிக்கு ரோஹித் சர்மா, கேஎல்.ராகுலின் தொடக்கக் கூட்டணியும், அஸ்வின், ஹர்ஸல்படேல், அக்ஸர் படேல் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சும் முக்கியக் காரணமாகும்.
154 ரன்கள் இலக்கை அடைவதற்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது ராகுல், ரோஹித் கூட்டணிதான். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். டி20 போட்டிகளில் தொடர்ந்து 5-வது முறையாக இருவரும் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்,
அதுமட்டுமல்லாமல் 5-வது முறையாக இருவரும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துள்ளனர்.
ரோஹித் சர்மா 36 பந்துகளில் 56ரன்கள்(5 சிக்ஸர், ஒருபவுண்டரி), கே.எல்.ராகுல் 49 பந்துகளில் 65 ரன்கள்(2சிக்ஸர், 6பவுண்டரி) விளாசி வெற்றிக்குக் காரணமாக அமைந்தனர்.
ரோஹித் சர்மா இயல்பாகவே தொடக்க ஆட்டத்தில் கலக்கலாக விளையாடுவார், இதில் கேப்டன் பொறுப்பு ஏற்றாலே அவரின் பேட்டிங்கில் மெருகு ஏறிவிடும்என்பதை இந்த ஆட்டத்திலும் காண முடிந்தது. தொடக்கத்தில் மந்தமாகவே ஆடிய ரோஹித் சர்மா அதன்பின் டாப் கியரில் தனது ஆட்டத்தை நகர்த்தினார்.
பவர்ப்ளேயில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் சேர்த்திருந்தபோது அதில் ரோஹித் சர்மா10 ரன்கள் மட்டுமே பங்களிப்பு செய்திருந்தார். சான்ட்னர், ஈஷ் சோதி பந்துவீச வந்தபின், இரு ஓவர்களுக்கு இந்திய அணி பவுண்டரி, சிக்ஸர் ஏதும் விளாசவில்லை.
ஆனால், சான்ட்னர் வீசிய 10-வது ஓவரில் ரோஹித் சர்மா இரு சிக்ஸர்களை விளாசினார். அதன்பின் தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி 35 பந்துகளில் அரைசதத்தை ரோஹித் சர்மா நிறைவு செய்தார்.
கே.எல்.ராகுல் தொடக்கத்திலிருந்தே எந்தவீரர் பந்துவீசினாலும் பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசித் தள்ளினார். இருவரும் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தில்தான் அடுத்து வந்த பேட்ஸ்மேன்களால் எளிதாகப் பயணிக்க முடிந்தது.
நடுவரிசையில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட வெங்கடேஷ் அய்யர் 3-வது வீரராக களமிறங்கினார், ஐபிஎல் தொடரில் மிகவும் கூலாக விளையாடிய வெங்கேடஷ் பதற்றத்துடனே பந்துகளை எதிர்கொண்டார்.
சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னில் ஏமாற்றினார். இந்திய அணிக்கு வெற்றிக்கு அருகே வந்துவிட்டதை உணர்ந்தவுடனே சூர்யகுமார் யாதவின் உடல்மொழியிலும் , பேட்டிங்கிலும் ஒருவிதமான அசட்டை தென்பட்டது. டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் இதேபோன்ற அசட்டை இருந்தது, அது மீண்டும் இந்த ஆட்டத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிஷப்பந்த் களமிறங்கி தனக்கே உரிய ஸ்டைலில் இரு சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை முடித்துவைத்தார். ரிஷப்பந்த் 12 ரன்களுடனும், வெங்கடேஷ் 12 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை அறிமுகப் போட்டியில் களமிறங்கிய ஹர்ஸல் படேல் அற்புதமாகப் பந்துவீசினார். ஹர்ஸ் படேலுக்கே உரிய ஸ்லோவர் பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை திணறவிட்டார். ஹர்ஸல் பேடலின் முதல் விக்கெட்டான டேரல் மிட்ஷெல் ஸ்லோவர் பந்தில்தான் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய ஹர்ஸல் படேல் நடுப்பகுதியிலும், கடைசி நேரத்திலும் ரன்களை வழங்காமல் நியூஸிலாந்து ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்தார்.
அடுத்ததாக ரவிச்சந்திர அஸ்வின் பற்றி குறிப்பிட்டே தீர வேண்டும். சர்வதேச டி02 போட்டிக்கு மீண்டும் வந்தபின் அஸ்வினின் பந்துவீச்சு மெருகேறி வருகிறது. அவரின் பந்துவீச்சில் வேரியேஷன், பேஸ் வேரியேஷன், லைன் லென்த், பந்தை ரிலீஸ் செய்யும் விதம் அனைத்தையும் புதிய உத்தியைக் கையாள்கிறார். அஸ்வின் பந்துவீச்சில் செய்யும் புதிய உத்திகள் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் நெருக்கடியாக அமைகின்றன. டி20 போட்டிக்குத் திரும்பியபின், அஸ்வின் இதுவரை வலதுகை பேட்ஸ்மேன்களுக்கு 71 பந்துகளை வீசியுள்ளார், அதில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார், ஒருபவுண்டரி கூட அடிக்கவிடவில்லை என்பதே அஸ்வினின் திறமைக்கு சாட்சி.
அஸ்வின் ஒரு மேட்ச் வின்னர் என்பதை அதிகமாக அறிந்தவர் ரோஹித் சர்மா. அதனால்தான் ஒவ்வொரு போட்டியிலும் அஸ்வின் மூலம் கிடைக்கும் பலன்களை பெறுவதற்கு தவறுவதே இல்லை. ரோஹித் சர்மா அளிக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் அஸ்வினும் வீணாக்காமல் தன்னுடைய சிறந்த பங்களிப்பை கடந்த இரு போட்டியிலும் அளித்துள்ளார்.
அஸ்வின் திறமையானவர், மேட்ச் வின்னர் என்பதை அறிந்தபோதிலும் காரணமே இல்லாமல் அவரை அமரவைத்ததுதான் கோலியின் கேப்டன்ஷி. அஸ்வினை பயன்படுத்துவதில் கோலியை விட ரோஹித் சர்மா திறமையில் மிளிர்கிறார்.
ஒரு கட்டத்தில் நியூஸிலாந்து அணி பவர்ப்ளே முடிவில் ஒரு வி்க்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது, ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்திருந்ததால், நிச்சயம் 180 ரன்களுக்கு மேல் வரும் எனக் கணக்கிடப்பட்டது.
ஆனால், அஸ்வின், அக்ஸர் படேல், ஹர்ஸல் படேல் ஆகிய 3 பந்துவீச்சாளர்களையும் திறமையாகப் பயன்படுத்தி ரன்ரேட்டை ரோஹித் சர்மா கட்டுப்படுத்தினார். நியூஸிலாந்து அணி அடுத்த 67 பந்துகளில் 74 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
மற்ற வகையில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார், தீபக் சஹர் இருவருமே ரன்களை வாரி வழங்கினர். தீபக் சஹருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்புக் கொடுக்காமல், ஆவேஷ் கானை களமிறக்கலாம். தீபக் சஹர் நேற்று வீசிய பெரும்பாலான பந்துகள் ஷார்ட் பந்துகளாகவும், ஸ்லாட்டிலுமே வீசப்பட்டன. லைன் லென்த்தில் வீசப்பட்டவை மிகவும் குறைவானவை. மஞ்சள் ஆடையில் வந்தால்மட்டுமே நன்றாகப் பந்துவீசுவேன் என்று தீபக் சஹர் நினைக்கிறாரோ என்னமோ…..
நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை கப்தில் அருமையான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்து, 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த பேட்ஸ்மேன்களான டேரல் மிட்ஷெல்(31), சாப்மேன்(21), பிலிப்ஸ்(34) ஓரளவுக்கு நிலைத்து ஆடினார். 8 ஓவர்களில் ஒரு விக்ெகட் இழப்புக்கு 79 ரன்கள் வரை 10 ரன் ரேட்டில் பயணித்த நியூஸிலாந்து அதன்பின் ரன்களைச் சேர்க்க சிரமப்பட்டது.
இந்த 10 ரன்ரேட்டில் பயணத்திருந்தால் நிச்சயம் மிகப்ெபரிய ஸ்கோரை எட்டியிருக்கும் ஆனால், நடுவரிசை வீரர்கள் அதைப் பயன்படுத்தத் தவறிவிட்டனர். குறிப்பாக அஸ்வின், அக்ஸர் படேல் பந்துவீச்சை சமாளி்த்து விளையாடவும், ரன்களை அடிக்கவும் மிகவும் சிரமப்பட்டனர். இருவரின் ஓவரிலும் நியூஸிலாந்து பேட்ஸமேன்கள் 3 பவுண்டரி மட்டுமே அடித்தனர்.
டி20 போட்டிகளில் ரன் சேர்க்க பவுண்டரி, சிக்ஸர் அடிக்கடி அடிப்பது அவசியமானது, அதற்கு ஏதாவது ஒரு பந்துவீச்சாளரை டார்கெட் செய்து ரன் சேர்க்க வேண்டும். ஆனால், அஸ்வின், அக்ஸர் இருவரும் 8 ஓவர்களை வீசி கட்டுப்படுத்தியது ரன்ரேட்சரிய பெரிய காரணமாக இருந்து. இது தவிர ஹர்ஸல் படேல் லைன் லென்த்தில் பந்துவீசி ஒருபவுண்டரி, சிக்ஸர் மட்டுமே கொடுத்தது நியூஸிலாந்து ரன்ரேட்டை மேலும் சரிய வைத்தது.
ஷீபெர்ட்(13), நீஷம்(3)ரன்களில் ஏமாற்றினர். சான்ட்னர் 8 ரன்களுடனும், மில்னே 5 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT